‘நெஞ்சம் மறப்பதில்லை’ - இசை விமர்சனம்

செல்வா, யுவனின் மேஜிக்கால் நீண்டகாலம் இப்பாடல்களை ரசிகர்களின் ‘நெஞ்சம் மறக்கப்போவதில்லை’.

இசை விமர்சனம் 24-Nov-2016 10:00 AM IST Chandru கருத்துக்கள்

‘புதுப்பேட்டை’ படத்தின் பாடல்கள் வெளிவந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன், யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக மீண்டும் இணைந்திருக்கிறது. செல்வராகவனின் முதல் ஹாரர் படம், எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்திருப்பது, தனுஷ் ஒரு பாடலைப் பாடியிருப்பது, அனைத்து பாடல்களையும் செல்வராகவனே எழுதியிருப்பது என இந்த ஆல்பம் சில சிறப்புக்களோடு வெளிவந்திருக்கிறது. செல்வா & யுவன் கூட்டணியின் மியூசிக் மேஜிக் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்களிலும் தொடர்ந்திருக்கிறதா?

குட், பேட் அன்ட் அக்லி...
குரல் : ஐஸ்வர்யா குமார்


வழக்கமாக தீம் மியூசிக் ஆல்பத்தின் கடைசியில்தான் இடம்பெறும். செல்வாதான் வித்தியாசமானவராயிற்றே.... அற்புதமான இசையுடனும், மயக்கும் பின்னணிக்குரலுடனும் உருவாகியுள்ள தீம் இசை ஒன்றை ஆல்பத்தின் முதல் பாடலாக இடம்பெறச் செய்திருக்கிறார். ‘யுவனின் இசைக்கருவிகள் செல்வாவிற்கென்றே தனியாக உழைக்குமோ...?’ என்ற ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருக்கிறது இந்த ‘குட், பேட் அன்ட் அக்லி’. உயிர் உருகச் செய்யும் ‘ஹம்மிங்’கோடு துவங்கி, பின்னர் அதிரடி ஆர்கெஸ்ட்ரா இசை மூலம் வேறொரு தளத்திற்குப் பயணித்து கடைசியில் புதியதொரு பாணியில் முடிகிறது இந்த தீம்.

கண்ணுங்களா... செல்லங்களா...
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : செல்வராகவன்


‘கவியரசர்’ கண்ணதாசனுக்கு இப்பாடலை சமர்ப்பணம் செய்திருக்கிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை’ டீம். இப்பாடலை தங்களின் ஹார்மோனி இசை மூலம் மெருகூற்றியிருக்கிறது சாமுவேல் ராஜ் மோகன், பாக்யராஜ், ஹரிஷ் கூட்டணி. நிச்சயமாக இப்பாடலின் பலம் யுவன் குரலில் இருக்கும் எனர்ஜிதான். பாடலின் வரிகளை வித்தியாசமாகவும், யதார்த்தமாகவும் உருவாக்கியிருக்கிறார் செல்வா. ‘அய்யா வந்துட்டாருங்க... காஃபி போடணும்ங்க... கேட்டைத் திறக்கணும்ங்க...’ என்பன போன்ற யதார்த்த வரிகளே பாடல் முழுதும் நிரம்பியிருக்கின்றன. இடையில், கண்ணதாசனின் ‘என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை...’ என்ற வரிகளை யுவன் குரலில் கேட்பது தனி சுகம். ஒட்டுமொத்தமாக இப்பாடல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியும், யுவனும் இணைந்து உருவாக்கியதைப்போன்ற அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது. கேட்டுக்கொண்டே இருக்கலாம்...!

மாலை வரும் வெண்ணிலா...
பாடியவர்கள் : தனுஷ், யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர் : செல்வராகவன்


இப்பாடலைப் பாடியவர்கள் யாரென்பது தெரிந்தவுடனே சட்டென கேட்க ஆவலை ஏற்படுத்தும். அதெப்படி தனுஷின் வாய்ஸ், யுவனின் இசைக்கு அத்தனை கச்சிதமாகவும், ஆழமாகவும் பொருந்திப்போகிறது? கோரஸாக பாடுவதைப்போன்ற ‘எக்கோ’வுடன் இப்பாடலை உருவாக்கியிருந்தாலும் குரல் கொடுத்திருப்பதென்னவோ யுவனும், தனுஷும்தான். வழக்கமான சரணம், பல்லவி என்ற முறையான அடுக்குகளோடு இல்லாமல் புதிதாக முயற்சி செய்திருக்கிறார் யுவன். பாடலின் இடையிடையே இடம்பெறும் ‘ராம்சே... ராம்சே...’ நம்மையும் அறியாமல் லேசாக தலைசாய்த்து ஆட வைக்கும். நிச்சயமாக காட்சிகளோடு பார்க்கும்போது பெரிய தாக்கத்தை இப்பாடல் ஏற்படுத்தும்.

என் பொண்டாட்டி ஊருக்குப்போயிட்டா...
பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, எஸ்.ஜே.சூர்யா
பாடலாசிரியர் : செல்வராகவன்


இதுபோன்ற ‘ஃபன்னி’யான பாடல்களை நிச்சயமாக செல்வராகவனைத்தவிர வேறு யாராலும் யோசிக்கவே முடியாது. ‘கண்ணு தெரியுதே... காது கேட்குதே... உலகம் புரியுதே... என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...’ என நக்கலும், ஜாலியும் கலந்த வரிகளை எழுவதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும். படத்தின் கதையோடு நிச்சயமாக இந்தப்பாடல் பெரிதாக பொருந்திப்போகும். பாடலின் இடையே எஸ்.ஜே.சூர்யா பேசும் டயலாக் நய்யாண்டியின் உச்சகட்டம். இப்பாடலை கேட்பதைவிட லிரிக் வீடியோவைப் பார்ப்பது இன்னும் வேடிக்கையாகவும், குதூகலமாகவும் இருக்கிறது. பொண்டாட்டியால் டார்ச்சரை அனுபவித்துக் கொண்டிருக்கும் கணவர்களுக்கு இப்பாடல் ‘சமர்ப்ணம்’ என சொல்லாமல் சொல்கிறது செல்வா & யுவன் கூட்டணி. பாடல் முழுவதும் யுவனின் இசை அதகளம். ரிப்பீட் மோட்!

3 பாடல்கள், ஒரு தீம் இசை என ஆல்பம் சிறியதாக இருந்தாலும், 10 வருட காத்திருப்பிற்கான தீனியை இம்மி பிசகாமல் தந்திருக்கிறது செல்வா, யுவன் கூட்டணி. ஒரு ஹாரர் படத்தில் இதுபோன்ற ஜாலியான, அழுத்தமான, அதிரடி இசையுடன் கூடிய பாடல்களை நீண்டகால தமிழ் சினிமா பேய்பட வரலாற்றில் கேட்டதாகத் தெரியவில்லை. அந்தவகையில், ஹாரர் பட ஆல்பங்களில் டாப் லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் இந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’.

செல்வா, யுவனின் மேஜிக்கால் நீண்டகாலம் இப்பாடல்களை ரசிகர்களின் ‘நெஞ்சம் மறக்கப்போவதில்லை’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;