கடவுள் இருக்கான் குமாரு - விமர்சனம்

ஏமாற்றம்!

விமர்சனம் 18-Nov-2016 1:39 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : M. Rajesh
Production : Amma Creations (T. Siva)
Starring : G. V. Prakash Kumar, Nikki Galrani, Anandhi, RJ Balaji
Music : G. V. Prakash Kumar
Cinematography : Sakthi Saravanan
Editing : Vivek Harshan

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் நாயகனாக நடிப்பில் 5வது படமாக வெளிவந்திருக்கிறது ‘கடவும் இருக்கான் குமாரு’. அதோடு முதல்முறையாக அவர் நடிப்பில் வெளிவரும் ‘யு’ சான்றிதழ் படம் எனவும் புரமோட் செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய ‘அந்த மாதிரி’ இமேஜிலிருந்து ஜி.வி.பிரகாஷ் வெளிவருவதற்கு எம்.ராஜேஷ் எந்தளவுக்கு உதவியிருக்கிறார்?

கதைக்களம்

ஜி.வி.பிரகாஷும், ஆர்.ஜே.பாலாஜியும் வேலைவெட்டியில்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் ‘லோக்காலிட்டி பாய்ஸ்’ நண்பர்கள். ஜி.வி.பிரகாஷ், கிறிஸ்டியன் பெண்ணான ஆனந்தியை காதலிக்கிறார். ஆனந்திக்கும் அவர்மேல் லவ் வருகிறது. ஆனால், தன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமென்றால், ஜி.வி.யின் மொத்த குடும்பமும் மதம் மாற வேண்டும் என நிபந்தனை போடுகிறார் ஆனந்தியின் அப்பா எம்.எஸ்.பாஸ்கர். இதனால் ஜி.வி.யின் காதல் பிரேக்அப் ஆகிறது. அதன்பிறகு ஜி.வி.க்கும் நிக்கி கல்ராணிக்கும் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. திருமணத்திற்கு முந்தைய நாள் பேச்சிலர் பார்ட்டிக்காக தன் நண்பன் ஆர்.ஜே.பாலாஜியுடன் பாண்டிச்சேரி செல்கிறார் ஜி.வி. அங்கிருந்து திரும்பிவரும் வழியில் போலீஸ் பிரகாஷ் ராஜ் கையில் கேஸ் ஒன்றில் மாட்டுகிறார் ஜி.வி..

எதற்காக பிரகாஷ் ராஜிடம் ஜி.வி. மாட்டுகிறார்? அதிலிருந்து தப்பித்து வந்து நிக்கியை ஜி.வி. மணமுடிக்கிறாரா இல்லையா? ஆனந்தியின் காதல் என்னவானது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால்.... ‘கடவுள் இருக்கான் குமாரு’.

படம் பற்றிய அலசல்

படத்திற்கு படம் இயக்குனர் எம்.ராஜேஷின் கற்பனை வளம் குறைந்துகொண்டே வருகிறதோ எனத் தோன்ற வைத்திருக்கிறது இந்த ‘கடவுள் இருக்கான் குமாரு’ படம். அதோடு ஜி.வி.பிரகாஷும் ஒரே மாதிரியான கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருவதும் ரசிகர்களை சோர்வடைய வைக்கிறது. காமெடி என்ற பெயரில் மதம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை தன் படங்களில் தொடர்ந்து கையிலெடுப்பதையும் ஜி.வி.பிரகாஷ் தவிர்த்தால் நல்லது. ‘கும்சாரே...’ பாடலில் கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.. மற்றவை சுமார் ரகம். படத்தின் சில காமெடிப்பகுதிகளும், ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜின் பங்களிப்பு மட்டுமே பலம் சேர்த்துள்ளன.

ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவையும் படத்திற்கு பெரிதாக கைகொடுக்கவில்லை. காரணம்.... கதை, திரைக்கதை, வசனம் போன்ற முக்கிய விஷயங்களே எதுவும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லாதபோது மற்றவற்றை குறைசொல்லி என்ன செய்ய?

நடிகர்களின் பங்களிப்பு

தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து கொஞ்சமும் வித்தியாசப்படுத்த முடியாத ஒரே மாதிரியான நடிப்பையே வெளிப்படுத்துகிறார் ஜி.வி.பிரகாஷ். அதற்கு அவர் தேர்வு செய்யும் கேரக்டர்களும் ஒரு காரணம். ‘யூத்’களை மட்டுமே குறிவைத்து அவர் செய்யும் முயற்சிகள் அவரின் எதிர்கால வளர்ச்சிக்கு தடையாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கொஞ்சம் மாத்தி யோசிக்கலாமே ஜி.வி.?

நிக்கி கல்ராணியைவிட ஆனந்திக்கு கொஞ்சம் காட்சிகள் அதிகம். ஆனால் கேரக்டராகப் பார்க்கப்போனால் இருவருக்குமே பெரிய பங்களிப்பு எதுவும் இல்லை. பாடல்களுக்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

படத்தின் ஒரே ஆறுதல் ஆர்.ஜே.பாலாஜி. அவர் காமெடிகளுக்கு தியேட்டரில் நல்ல சிரிப்பு மழை. ஆனாலும், அவரும் வழக்கம்போல் சினிமா நடிகர்களையும், டிவி நிகழ்ச்சிகளையுமே கலாய்த்துக் கொண்டிருக்கிறார். வில்லன் பிரகாஷ் ராஜ் இதுபோன்ற கேரக்டர்களையெல்லாம் எப்படி ஒப்புக்கொள்கிறார் என ஆச்சரியமாக இருக்கிறது. ஆனாலும், ஒரு நடிகனாக அவரின் வேலையை கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார். இவர்களைத்தவிர ராஜேந்திரன், ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, சிங்கம் புலி, ரோபோ ஷங்கர், கோவை சரளா உட்பட இன்னும் ஒரு டஜன் நடிகர்கள் படத்தில் வந்துபோகிறார்கள்.

பலம்

1. சிற்சில காமெடிக்காட்சிகள்
2. பிரகாஷ் ராஜ் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி

பலவீனம்

1. கதை
2. திரைக்கதையும் வசனங்களும்

மொத்தத்தில்...

‘என்டர்டெயின்மென்ட்’ என்ற ஒரேயொரு விஷயத்தை முன்வைத்து ஒரு படத்திற்கான மற்ற முக்கிய விஷயங்கள் எதையுமே கருத்தில் கொள்ளாமல் ஒரு படத்தை ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவந்திருக்கிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’. நிச்சயமாக ஜி.வி.யும், ராஜேஷும் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்வது நல்ல படைப்புகளை எதிர்காலத்தில் கொடுப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ஏமாற்றம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடவுள் இருக்கான் குமாரு - கும் சாரே பாடல் வீடியோ


;