யுவன் தந்த இசை கருவியில் காப்பியடிக்கும் பிரேம்ஜி அமரன்!

‘அச்சமின்றி’ இசை வெளியீட்டு விழாவில் இசை திருட்டை ஒப்புக்கொண்ட பிரேம்ஜி அமரன்!

செய்திகள் 15-Nov-2016 1:36 PM IST VRC கருத்துக்கள்

விஜய் வசந்த், ஸ்ருஷ்டி டாங்கே கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அச்சமின்றி’. ‘டிரிபில் வி ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் ‘என்னமோ நடக்குது’ என்ற படத்தை தயாரித்த அதே நிறுவம் தயாரித்துள்ள இப்படத்தை ‘என்னமோ நடக்குது’ படத்தை இயக்கிய ராஜ்பாண்டியே இயக்கியுள்ளார். ‘என்னமோ நடக்குது’ படத்திற்கு இசை அமைத்த பிரேம்ஜி அமரனே இசை அமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் விஜய் வசந்தின் தந்தை எச்.வசந்த்குமார், இயக்குனர்கள் வெங்கட் பிரபு, செல்வமணி, பொன்வண்ணன், நடிகை சரண்யா பொன்வண்ணன், இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் இசை அமைப்பாளர் பிரேம்ஜி அமரன் பேசும்போது, ‘‘இயக்குனர் செல்வமணி அவர்கள் இங்கு பேசும்போது, பாடல்கள் தனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது என்று சொன்னதோடு அதன் ஒரிஜினல் ட்யூன் எங்கிருந்து எடுக்கப்பட்டது? என்று எனக்கு ஒரு கேள்வியை வைத்துள்ளார்? இதற்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். இசையில் என்னுடைய குரு யுவன் சங்கர் ராஜா தான். அவருடைய முதல் படத்திலிருந்து நான் உதவியாளராக இருந்து வருகிறேன். நான் தற்போது உபயோகப்படுத்தி வரும் இசை கருவிகள் எல்லாம் எனக்கு யுவன் அளித்த பரிசுகள் தான். நான் ஒருவரிடம் இருந்து மட்டும் தான் இசையை திருடுவேன். அது என் பெரியப்பா இளையராஜாவிடமிருந்து! ஏன் என்றால் அது எங்களுடைய சொத்து. எங்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை இருக்கிறது.

ஒரு நாள் நான் பெரியப்பாவிடம், ‘நீங்கள் வேண்டாம் என்று ஒதுக்கிய இசை பதிவு எங்கிருக்கிறது?’ என்று கேட்டேன். அப்போது அவர் எதற்கு என்று கேட்டார். அதற்கு நான் அந்த பதிவை வைத்து நான் பெரிய இசை அமைப்பாளராகலாம் என்றிருக்கிறேன் என்றேன். அப்போது அவர், அப்போ இதுவரைக்கும் நீ என் இசையை காப்பி அடிக்கவில்லையா? என்று கேட்டார். நான் உங்கள் இசையை காப்பி அடித்து தான் இசை அமைக்கிறேன் என்றேன். அது மாதிரி பெரியப்பாவின் இசையை திருடி தான் இந்த ‘அச்சமின்றி’ படத்திறிகும் இசை அமைத்திருக்கிறேன். அது எந்த பாடல் என்று சொல்ல மாட்டேன். அது ஒரு தெலுங்கு படம் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி விடுகிறேன். ‘அச்சமின்றி’ வெளியான பிறகு அதை நீங்கள் கண்டு பிடித்து சொல்லுங்கள்’’ என்றார் பிரேம்ஜி அமரன் சிரித்துக்கொண்டே!
அதனை தொடர்ந்து இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசும்போது, ‘‘பிரேம்ஜி இசையை திருட வேண்டிய அவசியம் இல்லை. அவருக்கு தானாகவே இசை வரும். காரணம் எங்கள் இரத்தத்தில் ஊறியது இசை. அப்பாவின் இசை திருடினாலும் அதில் தப்பில்லை! காரணம் அது எங்கள் சொத்து’’ என்றார்.

#Achamindri #VijayVasanth #SrustiDonge #NithinSathya #Premgi #Samuthirakani #Ponvannan #VenkatPrabhu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் பாடல் வீடியோ


;