மீன் குழம்பும் மண் பானையும் - விமர்சனம்

’ருசி’யில் பெரிய குறையில்லை!

விமர்சனம் 12-Nov-2016 10:46 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Amudeshver
Production : Eshan Productions
Starring : Prabhu, Kalidas Jayaram, Ashna Zaveri, Pooja Kumar
Music : D. Imman
Cinematography : Lakshman
Editing : Richard Kevin

அறிமுக இயக்குனர் அமுதேஷ்வர் இயக்கத்தில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ‘மீன் குழம்பும் மண் பானையும்’ எப்படி?

கதைக்களம்

காரைக்குடியிலிருந்து மலேசியா வந்து ‘மீன் குழம்பும் மண் பானையும்’ என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார் பிரபு. அவரது ஒரே மகன் காளிதாஸ். பிறந்த உடனே தாயை பறிகொடுத்த காளிதாஸ் மிகவும் செல்லத்துடன் வளர்கிறார். கல்லூரியில் படித்து வரும் காளிதாஸ், தன்னுடன் சகஜமாக பேசவேண்டும், ஒரு நண்பரை போல் பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் பிரபு. ஆனால் காளிதாசால் பிரபுவுடன் சகஜமாக, பழக முடியவில்லை. இதனால் இரண்டு பேருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரச்சனை உருவாகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க பிரபுவின் நண்பரான ஒய்.ஜி.மகேந்திரன் முயற்சி எடுத்து சாமியார் கமல்ஹாசனிடம் இருவரையும் அழைத்துச் செல்கிறார். பிரச்சனைகளை கேட்டறியும் கமல்ஹாசன் பிரபுவுக்குள் இருக்கும் பொறுப்புணர்வு மற்றும் பாச சிந்தனையை காளிதாஸ் உடம்புக்குள்ளும், காளிதாஸின் இளமையான சிந்தனையை பிரபு உடம்புக்குள்ளும் புகுத்தி விடுகிறார். அதன் பிறகு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்கள் தான் ‘மீன் குழம்பும் மண் பானையும்’.

படம் பற்றிய அலசல்

மனிதர்கள், குறிப்பாக உறவுகள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டால், அதிலும் அவரவர் நிலையில் இருந்து புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிமையானதாக அமையும் என்ற கருத்தை வலியுறுத்தும் படம். அதை காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்து ஓரளவுக்கு ரசிக்கும்படியாக படமாக்கியுள்ளார் இயக்குனர் அமுதேஷ்வர். முதல்பாதியில் காளிதாஸ், ஆஷ்னா சவேரிக்கிடையில் ஏற்படும் மோதல், காதல், கல்லூரி கலாட்டாக்கள் என ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை, இடைவேளைக்கு பிறகு சூடு பிடித்து, காமெடியில் களைகட்டுகிறது. லாஜிக் விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் போதும், ஒரு நல்ல கருத்தைச் சொன்னால் போதும் என்ற விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் அமுதேஷ்வர். லட்சுமணன் ஒளிப்பதிவில் மலேசியாவின் அழகு, கண்களுக்கு விருந்து! இரண்டு பாடல்களில் கவனம் பெற வைத்த இசை அமைப்பாளர் டி.இமான், பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் காளிதாஸ் சிறப்பாக நடித்து தன் தந்தையின் பெயரை காப்பாற்றியுள்ளார். காளிதாசின் காதலியாக வரும் ஆஷ்னா சவேரி க்யூட் & ஸ்வீட்..! படத்திற்கு மிகப் பெரிய பலம் பிரபுதான்! முதல்பாதியில் பாசம் மிக்க தந்தையாக, பிற்பாதியில் ஒரு இளைஞனின் மனம் கொண்ட ஜாலியான மனிதராக கலகலப்பூட்டுகிறார். பிரபுவை காதலிக்கும் ‘மலேசிய டான்’ மாலா அக்காவாக வரும் பூஜா குமார், பெரிய டான் ஆக வரும் எம்.எஸ்.பாஸ்கர், ஆஷ்னா சவேரியின் அம்மாவாக வரும் ஊர்வசி, தாத்தாவாக வரும் சந்தானபாரதி என்று படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் காமெடிக்கு உதவியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் இரண்டே காட்சிகளில் வந்து ஓரம் கட்டி சென்று விடுகிறார் சாமியாராகவும், உலகநாயகனாகவும் வந்து கலக்கும் கமல்ஹாசன்!

பலம்

1. காமெடியாக உருவாக்கப்பட்டிருக்கும் இரண்டாம்பாதி
2. நடிகர், நடிகைகளின் சிறந்த பங்களிப்பு

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. இசை

மொத்தத்தில்...

வழக்கமான அடி தடி ஆக்ஷன் படங்களிலிருந்து மாறுபட்டு பாசம், குடும்பம், சென்டிமென்ட், காமெடி ஆகிய விஷயங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் இளம் வயதினர் உட்பட அனைத்து ரக ரசிகர்களையும் கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : ’ருசி’யில் பெரிய குறையில்லை!

ரேட்டிங் : 4/10

#MeenKuzhambumMannPaanaiyum #Amudeshver #Prabhu #KalidasJayaram #AshnaZaveri #PoojaKumar

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;