அச்சம் என்பது மடமையடா - விமர்சனம்

கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைத்திருக்கிறது ரஹ்மான், டான் கூட்டணி!

விமர்சனம் 11-Nov-2016 1:38 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Gautham Menon
Production : Ondraga Entertainment
Starring : Silambarasan, Manjima Mohan, Baba Sehgal
Music : A. R. Rahman
Cinematography : Dan Macarthur
Editing : Anthony

கௌதம் + சிம்பு + ஏ.ஆர்.ரஹ்மான் மூவர் கூட்டணியில் மீண்டும் நிகழ்ந்திருக்கிறதா ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ மேஜிக்?

கதைக்களம்

வழக்கம்போல் படிப்பை முடித்துவிட்டு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞன் சிம்பு. அவரின் தங்கையின் தோழியான மஞ்சிமா மோகன் படிப்பதற்காக சிம்பு வீட்டிற்கு வந்து தங்குகிறார். பார்த்தவுடன் மஞ்சிமா மேல் காதல் கொள்ளும் சிம்பு, கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சிமாவிடம் நெருக்கமாகிறார். படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊரான மகாராஷ்டிராவிற்கு கிளம்பத் தயாராகிறார் மஞ்சிமா. அந்த நேரத்தில் சிம்புவும் பைக்கிலேயே தென்னிந்தியா முழுக்க கிளம்பத் திட்டமிடுகிறார். கடைசி நேரத்தில் சிம்புவுடன் மஞ்சிமாவும் ரோடு டிராவலில் இணைந்து கொள்கிறார். இந்த பயணத்தின் முடிவில் சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. அது சிம்புவின் வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப்போடுகிறது. அது என்ன? அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்னென்ன என்பதுதான் ‘அச்சம் என்பது மடமையடா’வின் 2ஆம் பாதி.

படம் பற்றிய அலசல்

இது கௌதம், சிம்பு படம் என்பதையும் தாண்டி அனைத்துவிதமான ரசிகர்களையும் ‘அச்சம் என்பது மடமையடா’வை பார்க்கத் தூண்டியதற்கு முக்கிய காரணம் ஏ.ஆர்.ரஹ்மானின் அட்டகாசமான பாடல்கள். குறிப்பாக ‘தள்ளிப்போகாதே...’! பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார் ரஹ்மான். நிச்சயமாக ரஹ்மானின் சிறந்த இசைக்காகவே இப்படம் பெரிதும் பேசப்படும். ரொமான்ஸ், த்ரில்லர் என இரண்டுவித ஜேனர்களையும் அழகாக வித்தியாசப்படுத்தியிருப்பதில் ரஹ்மானின் இசைக்கு பெரிய பங்குண்டு. ‘தள்ளிப்போகாதே...’ பாடலுக்கான சூழ்நிலையிலும், அதை படமாக்கியிருக்கும் விததத்திலும் கௌதம் மேனன் இயக்குனராக ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். இசைக்குப் பிறகு பெரிய அளவில் ரசிக்க வைத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் டான் மெக்கார்தர். ‘நான் லீனியர் எடிட்டிங்’கை திறமையாகக் கையாண்டிருக்கிறார் ஆண்டனி.

ஒட்டுமொத்த பாடல்களும் முதல்பாதியிலேயே முடிந்துவிடுவதால், இரண்டாம்பாதி முழுக்க ஆக்ஷன் த்ரில்லராகவே நகர்கிறது. வசனம், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றில் கௌதம் மேனனின் ஸ்டைல் இருந்தாலும், திரைக்கதையை கையாண்டிருப்பதில் தனது முந்தைய பாணியிலிருந்து சற்றே வேறுவிதமாக யோசித்திருக்கிறார். குறிப்பாக இரண்டாம்பாதி திரைக்கதையில் கௌதம் ஸ்டைல் கொஞ்சம் மிஸ்ஸிங். அதேபோல் இது கௌதம் மேனன் பட க்ளைமேக்ஸா? என்ற ஆச்சரியத்தையும் ஏற்படுத்துகிறது ‘அச்சம் என்பது மடமையடா’. முழுக்க முழுக்க சிம்பு ரசிகர்களை திருப்திப்படுத்துவதற்காக இப்படிப்பட்ட மாஸ் க்ளைமேக்ஸை கௌதம் யோசித்திருப்பாரென்றே தெரிகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

கௌதம் படத்தில் மட்டுமே இதுபோன்ற அமைதியான, அதேநேரம் ‘மாஸ்’ குறையாத சிம்புவை பார்க்க முடியும். குறிப்பாக சிம்புக்குள் இருக்கும் அற்புதமான நடிகனை அவர்மட்டுமே சிறப்பாகக் கையாள்கிறாரோ என்ற எண்ணத்தையும் தருகிறது சிம்புவின் பெர்ஃபாமென்ஸ். எந்த பயமும் இல்லாத ஒரு சாதாரண இளைஞனாக பெரிய அளவில் கவர்ந்திழுக்கிறார் சிம்பு. சிம்புவின் கேரக்டர் பெயரும், அவரின் க்ளைமேக்ஸ் ரீ என்ட்ரியும் அவரின் ரசிகர்களுக்கு ‘ஷாக்’ சர்ப்ரைஸாக இருக்கும்.

நாயகி மஞ்சிமாவிற்கு பெரிய வசனமெல்லாம் எதுவுமே இல்லை. சின்ன சின்ன க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் மூலமே ரசிகர்களை கவர்ந்து செல்கிறார். ஆனாலும், கௌதம் மேனனின் முந்தைய பட ஹீரோயின்களிடம் இருக்கும் ‘ஏதோ’ ஒன்று மஞ்சிமாவிடம் மிஸ்ஸிங். கொஞ்ச நேரமே வந்தாலும் ‘டான்ஸர்’ சதீஷின் பங்களிப்பு ரசிகர்களுக்கு பெரிய ரிலாக்ஸ். படத்தில் ரசிகர்களை கொஞ்சமே கொஞ்சம் சிரிக்க வைத்திருக்கும் ஒரே ஆத்மா அவர்தான். டெரர் போலீஸாக ரசிகர்களை கலங்கடித்திருக்கிறார் பாபா சேஹல். மகாராஷ்டிரா போலீஸாக கச்சிதமாகப் பொருந்திருக்கிறார் அவர். டேனியல் பாலாஜி இரண்டு காட்சிகளில் தலைகாட்டி மறைகிறார். இவர்களைத் தவிர இன்னும் படத்தில் ஏகப்பட்ட கேரக்டர்கள் வந்துபோகின்றன. ஆனால், மனதில் யாருமே நிற்கவில்லை.

பலம்

1. ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும், பின்னணி இசையும்
2. படத்தின் முதல்பாதி
3. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்

பலவீனம்

1. இரண்டாம்பாதி
2. க்ளைமேக்ஸ்

மொத்தத்தில்...

ரொமான்ஸ், த்ரில்லர் என இரண்டுவிதமான ’கதைநடை’யை படத்தின் முதல்பாதியிலும், இரண்டாம்பாதியிலும் தனித்தனியாகப் பிரித்து கையாள முயன்றிருக்கிறார் கௌதம் மேனன். இதில் அவரின் ஆஸ்தான ஏரியாவான ரொமான்ஸில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறார். த்ரில்லர் பகுதிக்கான திரைக்கதை அமைப்பில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும், பிடிப்பையும் ஏற்படுத்தியிருந்தால் பெரிதாக கவரப்பட்டிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’.

ஒரு வரி பஞ்ச் : கண்களுக்கும், காதுகளுக்கும் விருந்து படைத்திருக்கிறது ரஹ்மான், டான் கூட்டணி!

ரேட்டிங் : 5/10

#AchchamYenbadhuMadamaiyada #GauthamMenon #Silambarasan #ManjimaMohan #BabaSehgal #OndragaEntertainment #ARRahman #DanMacarthur #Anthony

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;