‘அச்சம் என்பது மடமையடா’வை பார்க்கத் தூண்டும் 5 முக்கிய காரணங்கள்!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளிவரவிருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முன்னோட்டம்

கட்டுரை 8-Nov-2016 12:32 PM IST Chandru கருத்துக்கள்

‘விண்ணைத்தாண்டி வருவாயா’ கூட்டணி!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து 2010ல் வெளிவந்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. முழுக்க முழுக்க காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் சூப்பர்ஹிட் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அந்தவகையில், கௌதம், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் இணைந்திருக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் தற்போது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கௌதம் மேனனின் வித்தியாசமான ட்ரீட்மென்ட்!

கௌதம் மேனனின் படங்கள் பெரும்பாலும் ஒரேயொரு ஜேனரிலேயே முழுப்படமும் நகரும். மின்னலே, விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் போன்ற படங்கள் ரொமான்ஸை மையமாக வைத்து இயக்கியிருந்தால், காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற படங்களை ஆக்ஷன் படங்களாக கௌதம் மேனன் உருவாக்கியிருப்பார். ஆனால், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் முதல்பாதி முழுக்க ரொமான்ஸை மையமாக வைத்தும், இரண்டாம்பாதி முழுக்க ஆக்ஷன் த்ரில்லரை மையமாக வைத்தும் திரைக்கதை அமைத்திருக்கிறாராம் கௌதம். அவரின் இந்த வித்தியாசமான ட்ரீட்மென்ட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் படம் பார்க்கும் ஆவலை அதிகரித்திருக்கிறது.

வைரல் ஹிட்டான ‘தள்ளிப்போகாதே...’ பாடல்!

ஒரு பாடலுக்காக மொத்த படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் வகையில் அமைந்த படங்களின் வரிசையில் ‘அச்சம் என்பது மடமையடா’வும் இணைந்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருக்கும் ‘தள்ளிப்போகாதே...’ பாடல்தான் இன்றைய யுவன், யுவதிகளின் தேசியகீதம். இதன் லிரிக் வீடியோ மட்டுமே யு டயூபில் 2 கோடி பார்வையிடல்களை எட்டியுள்ளதென்றால் இப்பாடலின் வெற்றியை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த பாடல் மட்டுமல்லாமல் ஆல்பத்தின் அத்தனை பாடல்களுமே சூப்பர்ஹிட்டாகியுள்ளன.

கேரளத்து வரவான மஞ்சிமா மோகன்!

‘அச்சம் என்பது மடமையடா’தான் மஞ்சிமா மோகனுக்கு முதல் படம். ஆனால், இப்படம் வெளிவருவதற்கு முன்பே கிட்டத்தட்ட அரைடஜன் படங்களை கைவசப்படுத்தியிருக்கிறார் மஞ்சிமா. கீர்த்தி சுரேஷைத் தொடர்ந்து கேரளாவிலிருந்து தமிழ் சினிமாவிற்கு வருகை தந்திருக்கும் மஞ்சிமாவும், அவரைப்போலவே ரசிகர்களின் கனவுக்கன்னியாகியிருக்கிறார்.

டான் மெக்கார்தரின் ஒளிப்பதிவு

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த டான் மெக்கார்தர். இப்படத்தின் வெற்றியில் இவரின் ஒளிப்பதிவுக்கும் முக்கியப் பங்குண்டு. அந்தவகையில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்கும் இவரே ஒளிப்பதிவாளராகத் தொடர்ந்துள்ளார். இன்டர்நேஷனல் தரத்திலிருக்கும் அவரின் ஒளிப்பதிவை இப்படத்தின் டீஸர், டிரைலரில் பார்த்து வியந்த ரசிகர்கள் பெரிய திரையிலும் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

‘அச்சம் என்பது மடமையடா’ படம் வரும் 11ஆம் தேதி உலகமெங்கும் 400க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகின்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேவராட்டம் ட்ரைலர்


;