‘மாவீரன் கிட்டு’ ஆடியோ வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

விஷ்ணு, மகாவிஷ்ணுவாக மாறிவிடுவார்! - ‘மாவீரன் கிட்டு’ விழாழில் பார்த்திபன்!

செய்திகள் 4-Nov-2016 2:53 PM IST Top 10 கருத்துக்கள்

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணுவிஷால், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்துள்ள ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன், விஷ்ணு விஷால், பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி, D.N. தாய் சரவணன், இசையமைப்பாளர் டி.இமான், ஒளிப்பதிவாளர் ஏ.ஆர். சூர்யா, எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி மற்றும் சிறப்பு விருந்தினர்களாக ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவா, இயக்குநர்கள் பா.ரஞ்சித், பாண்டிராஜ், ரவிஅரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் கவிஞர் யுகபாரதி பேசியது, ‘‘மாவீரன் கிட்டு திரைப்படம் எனக்கு மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இப்படத்தில் நான் முதன் முறையாக வசனம் எழுதியுள்ளேன். இப்படம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த அரசியல் படங்களில் ஒன்றாக இருக்கும். நான் எதிர்காலத்தில் வாய்ப்பு வந்தால் திரைக்கதை எழுத்தாளராகவும் மாறவுள்ளேன்’’ என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசும்போது, ‘‘இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை. இப்படம் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமான கதையை பேசும் திரைப்படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்குநர் சுசீந்திரன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. அவர் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு’ திரைப்படம் எனக்கு பிடித்த திரைப்படம். அப்படத்தில் கிராமத்து விளையாட்டு போட்டிகளில் நடக்கும் அரசியலை பற்றி தெளிவாக பேசி இருப்பார் இயக்குநர். இப்படத்தில் ‘காதல் பற்றி ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. காதல் நிச்சயம் இச்சமூகத்தை மாற்றும். ‘மாவீரன் கிட்டு’ கமர்ஷியல் ரீதியாகவும் வெற்றி படமாக அமையும்’’ என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது, ‘‘எனக்கு இப்படத்தின் கதை மனதுக்கு நெருக்கமான கதையாகும். இப்படம் தென்னகத்தில் நடந்த மிக முக்கியமான சம்பவத்தை பற்றி பேசும் படமாக இருக்கும். தமிழ் சினிமாவில் எனக்கு தெரிந்து மிகவும் வேகமாக படத்தை இயக்கி முடிக்கும் இயக்குநர் சுசீந்திரன் தான்! எனக்கு அவருடைய வேகம் மிகவும் பிடிக்கும். ‘மாவீரன் கிட்டு’ சமூகத்துக்கு மிக முக்கியமான திரைப்படம். அது நிச்சயம் வெற்றி பெறும்’’ என்றார்.

இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பேசியது, ‘‘ இக்காலத்தில் சினிமா ரசிகர்கள் அனைவரும் சினிமாவை மிகவும் கவனமாக பார்க்கிறார்கள். நாம் சின்ன தவறு செய்தால் கூட அதை கண்டுபிடித்து விடுகிறார்கள். உதாரணத்துக்கு இதை எடுத்துகொள்ளலாம். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் ‘தொடரி’ திரைப்படத்தில் 150 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் இரயிலில் கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் தூக்கவில்லை? என்ற விஷயம் ரசிகர்களால் வாட்ஸ்அப்பில் பகிரப்படுகிறது. இயக்குநர் சுசீந்திரன் எப்போதும் பெர்ஃபெக்ட்டாக படத்தை இயக்கும் ஓர் இயக்குநர். இயக்குநர் பிரபுதேவா ஒரு நாயகிக்கு நடனம் கற்று கொடுக்க இரண்டு நாள், பெர்ஃபெக்‌ஷனுக்கு 8 நாள் ஆகும் என்று கூறினார். அதே போல் பெர்ஃபெக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர் சுசீந்திரன். இப்படத்தில் நாயகன் விஷ்ணு விஷால் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாக நடித்தார்கள். இப்படத்துக்கு பின்னர் விஷ்ணு மகா விஷ்ணுவாக மாறிவிடுவார்’’ என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, ‘‘ இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச்சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார். எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும். ஏன்னென்றால் அவர் உலக நாயகன் கமல்ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர். விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. ‘மாவீரன் கிட்டு’ நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும், கமர்ஷியலாக வெற்றி பெறும் படைப்பாகவும் இருக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;