‘சைத்தான்’ - இசை விமர்சனம்

‘சைத்தான்’ பாடல்கள் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கேட்டால் மிரட்டும்!

இசை விமர்சனம் 4-Nov-2016 12:55 PM IST Chandru கருத்துக்கள்

நடிப்பு, இசை என இரட்டை குதிரைகளிலும் வெற்றிகரமாக சவாரி செய்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவரின் அடுத்த வரவு ‘சைத்தான்’. ஹாரர் த்ரில்லராக எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை எந்தளவுக்கு கவர்ந்துள்ளது?

லடுக்கியோ...
பாடியவர் : யாஸின் நிஸார்
பாடலாசிரியர் : அண்ணாமலை


ஆல்பத்தின் முதல் பாடல் துள்ளும் எனர்ஜியுடன் துவங்கினாலும், ஏற்கெனவே விஜய் ஆண்டனி இசையில் கேட்ட ஏதோ ஒரு பாடலை நினைவு படுத்தவும் தவறவில்லை. எலக்ட்ரிக் கிடாரின் இசைகளுக்கு நடுவே யாஸின் நிஸாரின் ‘பளிச்’ குரலில் லடுக்கியோ பாடல் கேட்க கேட்க வசீகரிக்கும் என்றே தோன்றுகிறது. அண்ணமாலையின் வரிகள் கவிதைத்துவமாக இல்லாமல், ரொம்பவும் யதார்த்தமாக இருக்கிறது.

ஜெயலக்ஷ்மி...
பாடியவர் : யாஸின் நிஸார்
பாடலாசிரியர் : அண்ணாமலை


படத்தின் மையக்கதையை பிரதிபலிக்கும் பாடலாக அமைந்துள்ளது ஆல்பத்தின் 2வது பாடல். பயமுறுத்தும் இசை, மிரளச் செய்யும் வரிகள், நடுநடுங்க வைக்கும் பின்னணி குரல் என ஹாரர் பாடலாக அமைந்துள்ளது இந்த ‘ஜெயலக்ஷ்மி...’. படத்தின் முக்கியத் தருணத்தில் இடம்பெற வாய்ப்பிருக்கும் இந்தப்பாடல் காட்சிகளோடு பார்க்கும்போதுதான் முழு உணர்வைத் தரும் எனத் தெரிகிறது.

ஏதேதோ...
பாடியவர் : விஜய் ஆண்டனி
பாடலாசிரியர் : ஏக்நாத்


காதல் தோல்வி பாடல். ஆனால், வலியை வெளிப்படுத்தும் சோகப்பாடலாக அமையாமல் கொஞ்சம் வேறொரு தொணியில் பயணிக்கிறது இந்த ‘ஏதேதோ...’. பியானோவின் இசையும் விஜய் ஆண்டனியின் குரலும் ஒன்றோடொன்று இணைந்து பாடலின் உணர்ச்சியை ரசிகர்களின் காதுகளுக்கு நகர்த்துகிறது. பெரிதாக வசீகரிக்கவில்லை!

ஒப்பாரி...
பாடியவர் : சின்ன பொண்ணு
பாடலாசிரியர் : சின்ன பொண்ணு


நிச்சயமாக புதிய முயற்சி என தாராளமாகச் சொல்லலாம். ஒரு ஒப்பாரிப் பாடலை சுவாரஸ்யமாகக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பு விஜய்ஆண்டனியின் இசையிலும், சின்ன பொண்ணுவின் குரலிலும் தெரிகிறது. கேட்பவர் மனங்களை நிச்சயமாக கலங்கடிக்கும் இந்த ‘ஒப்பாரி...’ பாடல். இப்பாடலும் காட்சிகளோடு கேட்கும்போது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த நான்கு பாடல்களோடு டீஸரின் பின்னணி இசையாக இடம்பெற்ற தீம் மியூசிக் ஒன்றும், ‘ஜெயலக்ஷ்மி...’ பாடலின் வேறொரு வெர்ஷனாக டைட்டில் டிராக் ஒன்றும் ‘சைத்தான்’ ஆல்பத்தில் இடம்பெற்றது. ‘லடுக்கியோ...’ பாடலைத் தவிர மற்ற அனைத்தும் படத்தின் கதையோட்டத்திற்கு பயன்படும் வகையில் அமைந்திருப்பதால், பட ரிலீஸிற்குப் பிறகு இந்த ஆல்பத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில்... ‘சைத்தான்’ பாடல்கள் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே கேட்டால் மிரட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொலைகாரன் -டீஸர்


;