34 லட்சத்திற்கு வாங்கப்பட்டு, 30 கோடி வசூல் குவித்த படம்!

தெலுங்கிலும் முன்னணி இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி!

செய்திகள் 3-Nov-2016 1:05 PM IST VRC கருத்துக்கள்

விஜய் ஆண்டனி நடிப்பில் அறிமுக இயக்குனர் பிரதீப் குமார் இயக்கியிருக்கும் படம் ‘சைத்தான்’. விஜய் ஆண்டனி இசை அமைத்து கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது. ஆடியோவை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன் வெளியிட, ‘தேவி’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஐசரி கணேஷ் பெற்றுக் கொண்டார். இவ்விழாவில் கலந்துகொண்ட பிரபல தமிழ், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான காட்ரகட்ட பிரசாத் பேசும்போது,

‘‘விஜய் ஆண்டனிக்கு தெலுங்கிலும் பெரிய மார்க்கெட் உருவாகியிருக்கிறது. அவர் நடிக்கும் படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடைசியாக அவர் நடிப்பில் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் தெலுங்கில் ‘பிச்சாகாடு’ என்ற பெயரில் வெளியாகி நல்ல வசூலை குவித்தது. 34 லட்சத்திற்கு வாங்கப்பட்ட இந்த படம் தெலுங்கில் 30 கோடி ரூபாய் வசூல் செய்தது. (இது கிட்டத்தட்ட முதலீட்டு தொகையின் 100 மடங்கு தொகையாகும்!) இந்த படம் பல தியேட்டர்களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடவும் செய்தது. அதைப் போல இந்த ’சைத்தான்’ படமும் தெலுங்கில் மாபெரும் வெற்றி பெறும் என்பது என் நம்பிக்கை’’ என்றார்.

’சைத்தான்’ படத்தை தெலுங்கில் வெளியிடவிருக்கும் விநியோகஸ்தர் வேணுகோபால் பேசும்போது, ‘‘பிச்சைக்காரன்’ படத்தை தொடர்ந்து விரைவில் வெளியாகவிருக்கும் ‘சைத்தான்’ படமும் தெலுங்கில் ‘பெத்தாலடு’ என்ற பெயரில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை நாங்கள் வாங்கியிருக்கிறோம். ‘பெத்தாலடு’வை 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம். ‘பிச்சைக்காரன்’ தெலுங்கில் வசூல் குவித்ததை போல ‘பெத்தாலடு’வும் வசூல் குவிக்கும் என்பதை படத்தின் டீசர் மற்றும் இங்கு திரையிடப்பட்ட படத்தின் 5 நிமிட காட்சிகளை பார்த்தபோது உணர்ந்துகொண்டேன்’’ என்றார்.
‘விஜய் ஆன்டனி ஃபிலிம் கார்பரேஷன்’ நிறுவனம் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆன்டனி தயாரித்திருக்கும் ‘சைத்தான்’ படத்தை தமிழகமெங்கும் ‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது. இம்மாதம் 18-ஆம் தேதி ‘சைத்தான்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#Saithan #VijayAntony #Sibiraj #SAChandrasekar #Shoba #Pichaikkaran #AuraaCinemas #PradeepKrishnamoorthy

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;