குச் குச் ஹோத்தா ஹை, கபி குஷி கபி கம், மை நேம் இஸ் கான் போன்ற படங்களை இயக்கியவரும், சூப்பர்ஹிட் பாலிவுட் படங்களை தயாரித்தவருமான கரன் ஜோஹரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது ‘ஏ தில் ஹை முஷ்கில்’. இப்படத்தின் டிரைலர் வந்தபோதே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் அசரடித்தது. காரணம், ரன்கபீருடன் நெருக்கமாக நடித்திருந்த ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகள்.
திருமணத்திற்குப் பிறகு சினிமாவிற்கு தற்காலிக இடைவெளி விட்டிருந்த ஐஸ்வர்யா ராய், ‘ஜஸ்பா’ படம் மூலம் மீண்டும் நாயகியாக நடிக்கத் துவங்கினார். அந்தப் படமும் சரி, அதன் பிறகு வெளிவந்த ‘சர்ப்ஜித்’ படமும் சரி நாயகிக்கு முக்கியத்துவமுள்ள, ஐஸ்வர்யா ராயின் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களாக மட்டுமே அமைந்திருந்தன. ஆனால், கிளாமர் குயினாக மீண்டும் ஐஸ்வர்யா திரும்பி வருவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அதுவும் தன்னைவிட வயது குறைவான ரன்பீர் கபூருடன் அவர் இத்தனை நெருக்கமாக நடிப்பார் எனவும் யாரும் எதிர்பார்க்கவில்லை. இதுபோன்ற விஷயங்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக உயர்த்தின. ஒரு படம் வெற்றியடைவதற்கு இந்த ஒரு விஷயம் மட்டுமே போதுமா? ‘ஏ தில் ஹை முஷ்கில்’ படம் ரசிகர்களை கவர்வதற்கு வேறென்ன விஷயங்களையெல்லாம் கையாண்டிருக்கிறார் இயக்குனர் கரன் ஜோஹர்?
பாடகராக வலம் வர வேண்டும் என்ற கனவுடன் சுற்றிக் கொண்டிருக்கும் ‘பிரைவேட் ஜெட்’ பணக்கார இளைஞனான அயன் சங்கர் (ரன்பீர் கபூர்), விவாகரத்திற்குப் பிறகு தனக்கான துணைக்காக காத்திருக்கும் சபா தலியார் கான் (ஐஸ்வர்யா ராய்), தன் வாழ்க்கையை தன் மனம்போன போக்கில் வாழ ஆசைப்படும் பெண்ணான அலிஸா கான் (அனுஷ்கா சர்மா), அவரைக் காதலித்து கணவனாகும் டிஜே அலி (பவத் கான்) & இவர்களைச் சுற்றி நகரும் காதல், காமம், நட்பு, இலட்சியம், வாழ்க்கையின் யதார்ந்தங்கள் கலந்த கதையே ‘ஏ தில் ஹை முஷ்கில்’.
இப்படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும் முதல் விஷயம்... இப்படத்தில் நடித்திருக்கும் பிரபல நடிகர்களும், அவர்களின் அற்புதமான பங்களிப்பும். துறுதுறு இளைஞனாக ரன்பீரை எத்தனையோ படத்தில் இதற்கு முன்பே நாம் பார்த்திருந்தாலும், இப்படத்திலும் மனிதர் அசரடிக்கிறார். கொண்டாட்டம், அழுகை, காதல், சோகம் என அத்தனைவிதமான உணர்ச்சிகளையும் பார்வையாளனுக்கு அத்தனை யதார்த்தமாக கடத்தியிருக்கிறார் ரன்பீர். அவருக்கு சற்றும் சளைக்காத நடிப்பை வழங்கியிருக்கிறார் அனுஷ்கா! தைரியமான, தெளிவான, சிந்தித்து முடிவுகளை எடுக்கும் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். காதலுக்கும், நட்புக்கும் இடையே கிடந்து தவிக்கும் ரன்பீருக்கு தன் உணர்வுகளை புரிய வைப்பதற்காக அவர்படும் போராட்டங்களில் அத்தனை உணர்ச்சிகள். வெல்டன் அனுஷ்கா!
அடுத்தது ஐஸ்வர்யா ராய். இடைவேளைக்குப் பிறகு கொஞ்ச நேரமே வந்தாலும் தன் கதாபாத்திரம் மூலம் தான் எத்தனை பெரிய அனுபவசாலி நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார். அவரின் முன்னாள் கணவராக ஒரேயொரு காட்சியில் தோன்றி, அழுத்தமான வசனங்கள் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஒரு நொடியில் கவர்ந்து செல்கிறார் ‘கிங் கான்’ ஷாரூக். பவத் கானுக்கு பெரிய கேரக்டர் இல்லையென்றாலும், கிடைத்த வேடத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவர்களோடு ‘கெஸ்ட் ரோலி’ல் தலைகாட்டியிருக்கிறார் அலியா பட்.
இப்படத்தின் அடுத்த ப்ளஸ்... லொக்கேஷன்களும், அதை அற்புதமாக படம்பிடித்திருக்கும் ஒளிப்பதிவும். லண்டன், பாரிஸ், வியன்னா, நியூ யார்க் என படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாடுகளிலேயே படமாக்கப்பட்டுள்ளன. காட்சிக்கு, காட்சி வண்ணமயமாக நகரும் காட்சிகள் மூலம், படம் பார்க்கும் ரசிகர்களை அந்தந்த இடங்களுக்கே அழைத்துச் சென்றிருக்கிறது அனில் மேத்தாவின் கேமரா. அதேபோல் படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் இன்னொரு தூண் என்று சொல்லலாம். இப்படத்தின் ‘பிரேக்அப் சாங்...’, ‘சன்ன மெரேயா’ பாடல்கள் கிட்டத்தட்ட 3 கோடி பார்வையிடல்களையும், ‘ஏ தில் முஷ்கில் ஹை’ பாடல் 5 கோடி பார்வையிடல்களையும், ‘புல்லேயா...’ 6 கோடி பார்வையிடல்களையும் யு டியூபில் பெற்றிருக்கிறதென்றால் இப்படத்தின் பாடல்கள் எத்தனை பெரிய ஹிட் என்பதை சொல்லவும் வேண்டுமா...? பின்னணி இசையிலும் அசத்தித்தள்ளியிருக்கிறார் ப்ரிதம்.
இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்களும் காட்சிகளும் ஏற்கெனவே பார்த்துவிட்டதைப் போன்ற உணர்வைத் தருவது, இரண்டாம்பாதியின் சிற்சில காட்சிகள் தொய்வதை சந்தித்திருப்பது, இப்படத்தின் கதையம்சம் நம் இந்திய கலாச்சாரத்திலிருந்து விலகி நிற்பது (படத்தின் கேரக்டர்கள் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாகவே காட்டப்பட்ட போதும்), ஆங்காங்கே தோன்றும் சிற்சில லாஜிக் கேள்விகள் போன்றவை இப்படத்தின் பலவீனங்கள்.
ஆனால், இவையெல்லாவற்றையும் மறக்கடிக்கச் செய்கிறது படத்தின் பாசிட்டிவ் பக்கங்கள். குறிப்பாக ரன்பீர், அனுஷ்காவின் அட்டகாசமான நடிப்பிற்காக இப்படத்தை தாராளமாக தியேட்டருக்குச் சென்று ரசிக்கலாம்.
மொத்தத்தில்.... ‘ஏ தில் ஹை முஷ்கில்’ கரன் ஜோஹரின் இயக்கத்தில் மீண்டுமொரு உணர்ச்சி காவியம்!
#AeDilHaiMushkil #KaranJohar #AishwaryaRai #RanbirKapoor #AnushkaSharma #Pritam
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...
‘குறும்பு’, ‘அறிந்தும் அறியாமலும்’, அஜித் நடிப்பில் வெளியான ‘பில்லா’, ‘ஆரம்பம்’ உள்ளிட்ட படங்களை...