கொடி - விமர்சனம்

உச்சத்திற்கும் சற்றே கீழே பறக்கிறது!

விமர்சனம் 28-Oct-2016 11:28 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : R. S. Durai Senthilkumar
Production : Grass Root Film Company
Starring : Dhanush, Trisha Krishnan, Anupama Parameswaran, Saranya Ponvannan
Music : Santhosh Narayanan
Cinematography : Venkatesh S
Editing : Prakash Mabbu

தனது 31வது படத்தில் இரட்டை அவதாரம் எடுத்திருக்கிறார் தனுஷ். ‘கொடி’யை உயரப் பறக்கவிட்டிருக்கிறாரா இயக்குனர் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்?

கதைக்களம்

கருணாஸின் இரட்டை மகன்களாக இருக்கும் தனுஷ்களில், அண்ணன் தனுஷ் (கொடி) அப்பாவின் மறைவுக்குப் பிறகு அரசியலில் தீவிரமடைகிறார். அவருடைய காதலியாக இருக்கும் த்ரிஷா, தனுஷ் கட்சிக்கு எதிர்க்கட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சியடைகிறார். ஒருகட்டத்தில், தனுஷும் த்ரிஷாவும் அவரவர் கட்சியின் எம்.எல்.ஏ. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்கள். எப்படியாவது பதவியை அடைந்தே தீருவது என்ற வெறியுடன் நிற்கும் த்ரிஷா ஒருபுறம், தன் ஊரிலுள்ள முக்கிய பிரச்சனை ஒன்றை தீர்த்தே ஆகவேண்டும் என்ற லட்சிய வெறியுடன் நிற்கும் தனுஷ் இன்னொருபுறம்! இதில் யாருடைய ஆசை நிறைவேறியது..? தம்பி தனுஷ் என்ன செய்யப்போகிறார்? என்பதற்கான விடையாக விரிகிறது ‘கொடி’யின் மறுபக்கம்!

படம் பற்றிய அலசல்

இரட்டையர்களை வைத்து ஒரு வித்தியாசமான அரசியல் கதையை கையிலெடுத்திருக்கிறார் இயக்குனர் ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார். கேரக்டர்களுக்கான அறிமுகம், வழக்கமான கமர்ஷியல் விஷயங்கள் என முதல் 30 நிமிடங்களை பொறுமையாக கழித்தபிறகே, சொல்ல வந்த கதைக்குள் படம் பயணிக்கத் துவங்குகிறது. ஆனால், அதன்பிறகு சிற்சில சுவாரஸ்ய திருப்பங்களுடன் படம் வேகமெடுத்து இடைவேளை சமயத்தில் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார் இயக்குனர். இரண்டாம்பாதி நிச்சயமாய் இதைவிட விறுவிறுப்பாய் இருக்கும் என்ற நம்பிக்கையோடு வந்தமர்ந்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தையே தருகிறது ‘கொடி’. ஆங்காங்கே சுவாரஸ்யமான காட்சிகளும், ரசிகர்களை கைதட்ட வைக்கும் ‘மாஸ்’ காட்சிகளையும் இரண்டாம்பாதி கொண்டிருந்தாலும் திரைக்கதை யூகித்தபடி பயணிப்பாதலும், சிற்சில காட்சிகள் ‘டெம்ப்ளேட்’டாக அமைந்துவிட்டதாலும் உயரப்பறந்திருக்க வேண்டிய ‘கொடி’ இடையிடையே கீழிறங்கவும் செய்கிறது.

சந்தோஷ் நாராயணின் ‘ஏய் சுழலி...’ பாடல் கேட்பதற்கும், ‘வெட்டு போடு....’ பாடல் மாஸ் பிஜிஎம்மாகவும் கவர்கிறது. பின்னணி இசையிலும் பெரிதாக கைகொடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு ஓகே.

நடிகர்களின் பங்களிப்பு

கொடி, அன்பு என இரண்டு கேரக்டர்களிலும் அசத்தியிருக்கிறார் தனுஷ். ‘கொக்கி குமாரா’க ஏற்கெனவே அரசியல்வாதி கேரக்டரில் ஆச்சரியப்படுத்தியிருக்கும் தனுஷ் இந்தமுறையும் தக்க வைத்திருக்கிறார். இரண்டாம்பாதியில் தம்பி தனுஷின் ஆட்டமும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. நிச்சயமாக த்ரிஷாவுக்கு அவரின் கேரியரில் முக்கியமாக படமாக அமையும் இந்த ‘கொடி’. உடல்மொழி, பார்வை, வசனம் என ஒரு வித்தியாச த்ரிஷாவை ரசிகர்கள் கண்டிப்பாக உணரலாம். வெறும் பாட்டுக்கு மட்டும் வந்துபோகும் கதாநாயகி கேரக்டர்களுக்கு மத்தியில் மொத்த படமும் நாயகியையும் வைத்து நகர்வதுபோல் அமைந்திருப்பது சிறப்பு. ‘பிரேமம்’ அனுபமா பரமேஸ்வரனுக்கு பெரிய வாய்ப்பு வழங்கப்படவில்லையென்றாலும், கிடைத்த காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். அரசியல்வாதி கேரக்டரில் எஸ்.ஏ.சி. பங்களிப்பும் நன்றாக அமைந்திருக்கிறது. அம்மா கேரக்டரில் அதே சரண்யா... அட்டகாசம்! ரசிகர்களை ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க வைத்து கடைசியில் மிரள வைத்திருக்கிறார் காளி வெங்கட்.

பலம்

1. தனுஷ், த்ரிஷா
2. சந்தோஷ் நாராயணன்
3. படத்தின் அடிப்படை கதைக்களம்

பலவீனம்

1. எடிட்டிங்
2. சிற்சில இடங்களில் தொய்வடையும் திரைக்கதை

மொத்தத்தில்...

வழக்கமான ‘ட்வின்ஸ்’ படங்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாகவே தெரிகிறது கொடி. தனுஷ், த்ரிஷாவின் நடிப்பு, சந்தோஷின் இசை ஆகியவை ‘கொடி’யை உயரப்பறக்க வைக்க பெரிதாக உதவியிருக்கிறது. எடிட்டிங்கிலும், திரைக்கதையிலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் உச்சத்தில் பறந்திருக்கும் இந்த ‘கொடி’.

ஒரு வரி பஞ்ச் : உச்சத்திற்கும் சற்றே கீழே பறக்கிறது!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சமின்றி - டிரைலர் 2


;