‘போகன்’ கதை விவகாரம் - இயக்குனர் லட்சுமணன் போலீஸில் புகார்!

‘போகன்’ கதை விவகாரம் – போலீஸில் புகார்!

செய்திகள் 20-Oct-2016 3:21 PM IST VRC கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, அர்விந்த சாமி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் ‘போகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் லட்சுமணன். இந்த படத்தை பிரபு தேவாவின் ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் சென்னையை சேர்ந்த அந்தோணி தாமஸ் என்பவர் ‘போகன்’ படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி தென்னிந்திய வர்த்தக சங்கத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனால் அந்தோணி தாமஸுக்கும், இயக்குனர் லட்சுமணனுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இயக்குனர் லட்சுமணன், சென்னை மாநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரின் சுருக்கமான விவரம் வருமாறு:

‘‘நான் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸ்’ நிறுவன தயாரிப்பில் நடிகர்கள் ‘ஜெயம்’ ரவி, அரவிந்த சாமி, நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்க ‘போகன்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறேன். அவ்வாறு இருக்க, சென்னை மேட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த திரு.அந்தோணி தாமஸ் என்பவர் தன்னுடையை கதையை நான் படமாக்குவதாக கூறி தென்னிந்திய வர்த்தக சங்கத்தில் ஒரு பொய் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் குறித்து மேற்படி சங்கத்தினர் விசாரணை செய்து ‘இருவரும் கதையை அவரவர் பாணியில் எழுதப்பட்டுள்ளது’ என்று முடிவு செய்தனர். இதனை தொடர்ந்தும் திரு. அந்தோணி தாம்ஸ் என் மீதும் தயாரிப்பாளர் மற்றும் மூன்று நபர்கள் மீது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கையும் நாங்கள் சட்டப்படியாக சந்தித்து வரும் நிலையில் மேலும் திரு அந்தோணி தாமஸ் வாட்ஸ்-அப் மூலம் என் பெயருக்கும் நான் இயக்கி வரும் ‘போகன்’ படத்திற்கும் களங்கம் எற்படுத்தும் விதமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அத்துடன் என் மீதும், என் தயாரிப்பாளர்கள் மீதும் பொய்யான புகார்களை பல்வேறு காவல் நிலையங்களில் தாக்கல் செய்து வருகிறார். இதனால் நாங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் திரு.அந்தோணி தாமஸ் மீது சட்டப்படியாக தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் லட்சுமணன்.

கடந்த சில மாதங்களாக இருந்து வரும் இந்த பிரச்சனைக்கு விரைவில் தகுந்த தீர்வு கிடைக்கும் என்றும் ‘போகன்’ படக்குழுவினர் அறிவித்திருப்பதை போல ‘போகன்’ திரைப்படம் டிசம்பர் 23-ஆம் தேதி ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கலாம்!

#Bogan #JayamRavi #AravindSwamy #Hansika #Lakshman #PrabhudevaStudios #AntonyThamos #DImman

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;