தேவி - விமர்சனம்

மிரட்டவில்லை... அசத்தியிருக்கிறாள் இந்த தேவி!

விமர்சனம் 7-Oct-2016 5:17 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : A. L. Vijay
Production : Prabhu Deva Studios
Starring : Prabhu Deva, Tamannaah, Sonu Sood, RJ Balaji
Music : Sajid-Wajid
Background score : Gopi Sundar
Cinematography : Manush Nandan
Editing : Anthony

‘எங்கள் அண்ணா’ படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து மீண்டும் தமிழில் பிரபுதேவாவை பெரிய திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது ரசிகர்களுக்கு. ‘தேவி’யின் தரிசனம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறதா?

கதைக்களம்

மும்பையில் வேலை பார்க்கும் பிரபுதேவாவிற்கு மாடர்ன் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என ஆசை. ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, படிப்பறிவில்லாத கிராமத்துப் பெண்ணான தமன்னாவை திருமணம் செய்து மும்பைக்கு அழைத்து வருகிறார் பிரபுதேவா. தனக்குப் பிடிக்காத தமன்னாவை எப்படியாவது ஊருக்கு திருப்பி அனுப்பிவிட வேண்டுமென பிரபுதேவா தவித்துக் கொண்டிருக்கும்போது, விருது விழா ஒன்றிற்கு பிரபுதேவாவும் தமன்னாவும் போகிறார்கள். அங்கே நடக்கும் பார்ட்டி ஒன்றில் திடீரென மாடர்ன் டிரெஸ்ஸில் தோன்றி, ஸ்டைலிஷ் ஆட்டம் ஒன்றைப்போட்டு அனைவரையும் அதிர வைக்கிறார் தமன்னா. இதில் பிரபுதேவாவும் வாயடைத்துப்போகிறார். அதோடு, அந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் பிரபல தமிழ் நடிகர் சோனு சூட்டுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பும் தமன்னாவைத் தேடி வருகிறது.

திடீரென தமன்னா இப்படி ஆனது ஏன்? அதன்பிறகு பிரபுதேவா என்ன செய்கிறார்? என்பதற்கான விடையை காமெடி, சென்டிமென்ட் கலந்து யதார்த்தமாகப் படமாக்கியுள்ளார் இயக்குனர் விஜய்

படம் பற்றிய அலசல்

‘தேவி’ ஒரு பேய்ப்படம் எனச் சொன்னால் பேய்கூட நம்பாது. அந்தளவுக்கு படத்தின் எந்த இடத்திலும் கோரமான முகங்களோ, ரத்தம் தெறிக்கும் காட்சிகளோ, திகிலடைய வைக்கும் ‘திடுக்’ சந்தர்ப்பங்களோ எதுவுமில்லாமல் முழுக்க முழுக்க காமெடியையும், எமோஷனையும் யதார்த்தமாக கலந்து உருவாக்கியிருக்கிறார்கள். வழக்கமான பேய்ப் படங்களிலிருந்து தனித்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விஷயம்தான் இப்படத்தின் பலமே! ஒரு சாதாரணமான கதைக்கு, ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கி... அதில் பிரபுதேவா, தமன்னாவின் நடனம், காதல், சென்டிமென்ட், ஹ்யூமர் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து ஒரு தரமான பொழுதுபோக்கு படத்தைத் தந்திருக்கிறார்கள்.

‘தேவி’யின் நெகடிவ் பக்கங்கள் என்று பார்த்தால், இரண்டாம்பாதியில் ஆங்காங்கே கொஞ்சம் படம் தொய்வடைகிறது. அதோடு, ‘சல்மார்...’ பாடலைத் தவிர வேறெந்த பாடலையும் பெரிதாக ரசிக்க முடியவில்லை. தமிழ் படத்தில் ஹிந்தி டப்பிங் பாடலை கோர்த்துவிட்டதுபோல் தெரிகிறது. அதேபோல் ‘இது ஒரு டப்பிங் படமோ’ என்ற உணர்வு சில காட்சிகளில் ஏற்படுவதையும் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி படத்தின் ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கின்றன.

நடிகர்களின் பங்களிப்பு

தனது 43வது வயதில் பயணித்துக் கொண்டிருக்கிறார் பிரபுதேவா. விக்கிபீடியாவில் பார்த்துதான் இதை உண்மை என்று நம்ப வேண்டியிருக்கிறது. இன்னமும் பிரபுதேவாவின் டான்ஸில் ஒரு இளைஞருக்கான அத்தனை எனர்ஜிகளும் கொட்டிக் கிடக்கின்றன. டான்ஸ் மட்டுமின்றி பாடி லாங்வேஜிலும், எக்ஸ்பிரஷன்களிலும் அசத்தியிருக்கிறார் பிரபுதேவா. நிச்சயம் அவருக்கான ‘கம்பேக்’ படமாக தேவி இருக்கும். தமன்னாவைத் தவிர இந்த கேரக்டரில் வேறெந்த தமிழ் நடிகையும் யோசித்துக்கூட பார்க்க முடியவில்லை. கிராமத்துப் பெண்ணாகவும், அல்ட்ரா மாடர்ன் ஹீரோயினாகவும் அசத்தியிருக்கிறார். கூடுதலாக இப்படத்தில் டான்ஸிலும் அப்ளாஸ் அள்ளியிருக்கிறார் தமன்னா.

லாஜிக்கலாக ‘தேவி’யில் ஒரு தமிழ் ஹீரோ கேரக்டரில் சோனு சூட் ஒட்டவில்லையென்றாலும் தன் பங்கு வேலைகளை கச்சிதமாக செய்துள்ளார். அவரின் மேனேஜராக வரும் முரளி ஷர்மா, அந்த கேரக்டருக்கான அற்புதமான தேர்வு. அவரின் மேனரிஷங்கள் அப்படியே ஒரு சினிமா மேனேஜரை கண்முன் நிறுத்துகிறது. ஆர்.ஜே. பாலாஜி கொஞ்ச நேரமே வந்தாலும், ஒவ்வொரு காட்சியிலும் சிரிக்க வைத்திருக்கிறார்.

பலம்

1. வழக்கமான பேய்ப்படங்களிலிருந்து தனித்து உருவாக்கியிருக்கும் விதம்
2. பிரபுதேவா, தமன்னாவின் அற்புதமான பங்களிப்பு
3. டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. பாடல்கள்
2. டப்பிங் பட உணர்வு சில இடங்களில் ஏற்படுவது

மொத்தத்தில்...

குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் கண்டு ரசிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்கு பேய் படத்தை கொடுத்ததற்காகவே ‘தேவி’ குழுவை தாராளமாகப் பாராட்டலாம். போனஸாக பிரபுதேவா, தமன்னாவின் அசத்தல் நடனங்களையும் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்குமேயானால் வேறென்ன வேண்டும்... புக் யுவர் டிக்கெட்ஸ்!

ஒரு வரி பஞ்ச் : மிரட்டவில்லை... அசத்தியிருக்கிறாள் இந்த தேவி!

ரேட்டிங் : 5.5 / 10

#DeviMovieReview #Devi #PrabhuDeva #Tamannaah #SonuSood #RJBalaji #GopiSundar #Anthony #ALVijay

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;