‘ரெமோ’வுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 5 முக்கிய விஷயங்கள்!

அக்டோபர் 7ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படம் பற்றிய முன்னோட்டம்

கட்டுரை 5-Oct-2016 3:02 PM IST Chandru கருத்துக்கள்

அறிமுகப்படமே இத்தனை பிரம்மாண்டமாக ஒரு இயக்குனருக்கு அமைவதென்பது தமிழ்சினிமாவில் எப்போதாவது மட்டுமே நிகழக்கூடிய ஒன்று. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான சூழல் வாய்த்திருக்கிறது இயக்குனர் பாக்யராஜ் கண்ணனுக்கு! அவரின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி, வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திய பல்வேறு விஷயங்களில் 5 முக்கிய விஷயங்களைப் பற்றி இங்கே காணலாம்.

சிவகார்த்திகேயனின் ‘நர்ஸ்’ அவதாரம்!
வேக வேகமாக உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் இதுவரை தான் நடித்த படங்களில் பெரிய கெட்அப் மாற்றம் எதையும் செய்தததில்லை. ‘டைமிங் காமெடி மூலம் மக்களைப் பொழுதுபோக்குவதே தனது பணி’ என இருந்த சிவகார்த்திகேயன் முதல்முறையாக ஒரு வித்தியாசமான கெட்அப்போடு வரவிருக்கிறார். அதுவும் நர்ஸ் வேடம் என்பதே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடை, உடை, பாவனை என ஒரு அழகான பெண்ணாகவே மாறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

உயர்தர டெக்னிக்கல் கூட்டணி!
மணிரத்னம், ஷங்கர் போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துவரும் பி.சி.ஸ்ரீராம், ‘ரெமோ’வுக்குள் நுழைந்ததுமே படம் வேறு லெவலுக்குப் பேசப்பட்டது. அதோடு, ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி ‘ரெமோ’க்கு ஒலிப்பதிவு செய்கிறார் என்பதும் கூடுதல் பலமாக அமைந்தது. தவிர, சிவகார்த்திகேயனின் நர்ஸ் மேக்அப்பிற்காக ‘ஐ’ புகழ் வேட்டா நிறுவனத்தை வரவழைத்தது ‘ரெமோ’ டீம். இதுபோன்ற உச்சபட்ச டெக்னிக்கல் விஷயங்கள் ‘ரெமோ’ படத்தின் எதிர்பார்ப்பை பன்மடங்காக்கின.

அனிருத்தின் இசை!
சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியின் ஹிட் காம்போ ‘ரெமோ’விலும் தொடர்ந்திருக்கிறது. ஃபர்ஸ்ட்லுக் மோஷன் போஸ்டரிலேயே பெரிய கவனம் பெற்றது அனிருத்தின் இசை. அதோடு, பாடல்களுக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்க, ரெமோ ஆல்பம் சூப்பர்ஹிட்டானது. இப்போது மூலைமுடுக்கெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கின்றன ‘ரெமோ’ பாடல்கள்!

கீர்த்திசுரேஷின் இளமைக்கூட்டணி!
ஏற்கெனவே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்ற கூட்டணி என்பதால் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணிக்கு ‘ரெமோ’விலும் ஏகோபித்த வரவேற்பு. அதோடு, ‘ரெமோ’வில் கீர்த்தியின் அழகை பன்படங்காக்கியிருக்கிறார் பி.சி.ஸ்ரீராம். டிரைலரில் அவர் தோன்றியிருக்கும் ஒன்றிரண்டு ‘ஷாட்’களிலேயே ஒட்டுமொத்த ‘யூத்’களையும் கிளீன்போல்டாக்கியுள்ளார் கீர்த்தி!

திட்டமிடப்பட்ட விளம்பர யுக்தி!
ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்தினால் வெற்றி கிடைக்கும் என்பதே வியாபார யுகத்தில் மிகப்பெரிய யுக்தி. அந்த யுக்தியை மிகச்சிறப்பாக கையாண்டு வருகிறார் ‘ரெமோ’ தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா. படம் துவங்கியதிலிருந்தே, அதை ஒவ்வொரு கட்டத்திலும் திட்டமிட்டு, முறையான அறிவிப்புகளையும், விளம்பரங்களையும் தொடர்ந்து செய்து வந்தது ‘ரெமோ’ டீம். டைட்டில் வெளியீட்டையே இயக்குனர் ஷங்கர் தலைமையில் பிரம்மாண்டமாக நடத்திய ஆர்.டி.ராஜா, டிரைலரையும் யு ட்யூபில் 5 மில்லியன் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தார். இப்போது படத்திற்கான விளம்பரங்களையும் பெரிய அளவில் சிறப்பாகச் செய்து, படம் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் பன்மடங்காக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;