M.S.தோனி - விமர்சனம்

களத்தில் மட்டுமின்றி அரங்கிலும் அசத்தியிருக்கிறார் M.S.D!

விமர்சனம் 30-Sep-2016 1:39 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Neeraj Pandey
Production : Arun Pandey, Fox Star Studios
Cast : Sushant Singh Rajput, Anupam Kher, Bhumika Chawla, Kiara Advani, Disha Patani
Music by Songs : Amaal Mallik, Rochak Kohli
Score: Sanjoy Chowdhury
Cinematography : Santosh Thundiyil
Editing : Shree Narayan Singh

இந்திய சினிமாக்களில் பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து வெளிவரும் படங்கள் சொற்பமே. அதிலும் அப்படிப்பட்ட படங்கள், சம்பந்தப்பட்ட பிரபலங்களின் மறைவுக்குப் பிறகோ அல்லது அவர்களின் இறுதிக்கட்ட காலத்திலோதான் எடுக்கப்பட்டவையாக இருக்கும். ஆனால், புகழின் உச்சத்திலிருக்கும் ஒரு காலகட்டத்திலேயே ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாற்றை இதற்கு முன்பு இங்கே சினிமாவாக்கியிருக்கிறார்களா என்பது சந்தேகமே... மைதானத்தில் மட்டை சுழற்றிக் கொண்டிருக்கும் தோனியை, இப்போது வெள்ளித்திரையில் ரசிகர்களின் பார்வைக்காக விளையாடவிட்டிருக்கிறார்கள். ஆட்டம் சூடு பிடித்துள்ளதா...?

ராஞ்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த மகேந்திர சிங் தோனி, பள்ளி கிரிக்கெட் அணிக்காக விக்கெட் கீப்பராக தனது வாழ்க்கையைத் துவங்கி, மெல்ல மெல்ல வளர்ந்து மாநில அணிக்குள் எப்படி நுழைகிறார்... பின்னர், தன் குடும்ப பொருளாதார சூழ்நிலையால் ரயில்வேயில் டிக்கெட் கலெக்ட்டராக தள்ளப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்து எப்படி இந்திய அணியில் இடம்பிடித்து, கோடான கோடி இந்திய ரசிகர்களின் நெஞ்சில் இடம்பிடித்தார் என்பதே இப்படத்தின் கதை.

பொதுவாக, வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் பெரும்பாலும் ‘டாக்கு டிராமா’ பாணியிலேயே அமைந்துவிடும். ஆனால், இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கும் அளவுக்கு சுவாரஸ்யமாகப் படைத்திருக்கிறார் இயக்குனர் நீரஜ் பாண்டே. திரைக்கதை மூலம் தோனியின் வாழ்க்கை வரலாற்றுக்கு இயக்குனருடன் இணைந்து உயிர் கொடுத்துள்ளார் திலீப் ஷா. ஆனால், எல்லாவற்றுக்கும்மேல் இப்படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்ததற்கு ஒரேயொரு ஒருவர்தான் காரணம்... அவர் தோனி!

பாலிவுட்டில் எடுக்கப்பட்டு, இங்கே மொழிமாற்றம் செய்யப்பட்ட ஒரு படத்திற்கு இத்தனை பெரிய வரவேற்பும், கொண்டாட்டங்களும் வேறெந்த படத்திற்கும் கிடைத்திருக்காது என்றே தோன்றுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் கேப்டனாக தோனி ஜொலித்ததும் இதற்கு ஒரு காரணம்.

சுவாரஸ்யமான திரைக்கதை, அதில் காமெடி, சென்டிமென்ட், ரொமான்ஸ், ஒரு ஸ்போர்ட்ஸ் படத்திற்கே உரிய விறுவிறுப்பான காட்சிகள் என படத்தை ஒரு ட்வென்டி20 மேட்ச் போல் பரபரப்பாக உருவாக்கியிருக்கிறார்கள். கிராபிக்ஸ், ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அத்தனை ஏரியாக்களிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறது டெக்னிக்கல் டீம். குறிப்பாக உண்மையான மேட்ச் வீடியோவில் படத்தின் நாயகனை மிக்ஸ் செய்து காட்டப்பட்டிருக்கும் காட்சிகளில் தியேட்டர் அதிர்ந்து தள்ளுகிறது.

3 மணி நேரம் ஓடுவது ஒன்றே இப்படத்தின் ஒரே நெகட்டிவ் பக்கம். இருந்தபோதும், படம் எந்த இடத்திலும் ரசிகர்களுக்குப் போரடிக்காத வகையில் உருவாக்கி அதையும் பாசிட்டிவாக்கியிருக்கிறார்கள்.

‘தோனி’ கதாபாத்திரத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத் அற்புதமான தேர்வு. தோனியின் பாடி லாங்குவேஜ், அவரின் மேனரிசங்கள், அவரைப்போன்றே சிரிப்பது என அச்சுஅசலாக தோனியை நம்முன் நிறுத்தியிருக்கிறார். குறிப்பாக ‘ஹெலிகாப்டர் ஷாட்’ கற்றுக்கொள்ளும் தோனி சம்பந்தப்பட்ட காட்சி அசத்தல். தோனியின் முதல் காதலியாக வரும் திஷா படானி, காதல் மனைவியாக வரும் கியாரா அத்வானி இருவருமே அந்தந்த கேரக்டரில் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அதேபோல், படத்தில் யுவராஜ் சிங் கேரக்டரில் நடித்திருக்கிறார் ஹெரி டேங்ரி எனும் இளைஞர். அப்படியே யுவராஜின் ஜெராக்ஸ்போல் இருக்கிறார் மனிதர். தோனியின் அப்பாவாக அனுபம் கெர், அக்காவாக பூமிகா சாவ்லா, ‘கோச்’சாக ராஜேஷ் ஷர்மா ஆகியோரும் நடிப்பும் யதார்த்தமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில்... ஒரு விறுவிறுப்பான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை ரசிகர்கள் எப்படி ரசிப்பார்களோ, அப்படியான ஒரு கொண்டாட்ட மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது M.S.தோனி திரைப்படம். கிரிக்கெட்டின்மேல் ஆர்வம் உள்ளவர்களை மட்டுமின்றி, கிரிக்கெட் பற்றி தெரியாவதர்களுக்கும்கூட இப்படம் பிடிக்க வாய்ப்புள்ளது.

ஒரு வரி பஞ்ச் : களத்தில் மட்டுமின்றி அரங்கிலும் அசத்தியிருக்கிறார் M.S.D!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நான் தான் ஷபானா - டிரைலர்


;