‘‘ஒருவித போதையை தந்த படம் ‘றெக்க’’ – விஜய்சேதுபதி

மிகவும் ரசித்து நடித்த படம் ‘றெக்க’ - விஜய் சேதுபதி

செய்திகள் 27-Sep-2016 4:45 PM IST VRC கருத்துக்கள்

விஜய்சேதுபதி நடிப்பில் இந்த வருடம் வெளியாகவிருக்கும் 6-வது திரைப்படம் ’றெக்க’. ‘வா டீல்’ படத்தை இயக்கியிருக்கும் ரத்தின சிவா இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி இதுவரை நடித்திராத வகையில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ளார். ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் 7 ஆம் தேதி ரிலீசாகவிருக்கிற இப்படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விஜய்சேதுபதி பேசும்போது,

‘‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களுக்கு நீங்கள் அனைவரும் ஆத்மார்த்தமாகவும், நல்ல முறையிலும் விமர்சனங்களை எழுதியிருந்தீர்கள். அதற்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அதே நேரம் விஜய் சேதுபதி நடிப்பில இரண்டு வாரத்துக்கு ஒரு படம், மாதத்துக்கு ஒரு படம் வெளியாகிறது என்ற முறையிலும் மீம்ஸ் பண்ணுகிறீர்கள்! இது என் தப்பு கிடையாது. தானா அமைகிற விஷயம்! ஆனால் நான் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை!

‘ஆண்டவன் கட்டளை’ வெளியாகி இரண்டு வார இடைவெளியில் ‘றெக்க’ வெளியாகவிருக்கிறது. ஆனால் இப்படம் நான் இதுவரை நடித்த படங்களிலிருது முற்றிலும் மாறுபட்ட படமாக இருக்கும். அது மாதிரியான ஒரு ஸ்கிரிப்ட்டை தான் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரத்தின சிவா. இவர் இயக்கிய ‘வா டீல்’ படத்தின் டிரைலரை பார்த்தபோதே அவரது திறமையை உணர்ந்தேன். அப்போதே முடிவு செய்தேன் ரத்தின சிவா இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று! அதன் பிறகு இந்த ஸ்கிரிப்ட்டை என்னிடம் வந்து சொன்னதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். காரணம் இதில் நான் இதுவரை செய்திராத பல விஷயங்கள் செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. அது என்ன என்பதை நீங்கள் படம் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள். சொல்லப் போனால் இந்த ‘றெக்க’ எனக்கு ஒரு வித போதையை தந்த படமாகும். காரணம் இதில் என் கேரக்டர் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது. அதனால் மிகவும் ரசித்து நடிக்க முடிந்தது. அந்த சந்தோஷத்தை, மகிழ்ச்சியை வெளிப்படுத்த தான் போதை என்ற வார்த்தைய குறிப்பிட்டேன். மத்தபடி வேறு எதுவும் இல்லை (சிரிக்கிறார்). இந்த படமும் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ஆயுதபூஜை விடுமுறையை இப்படத்துடன் சந்தோஷமாக கொண்டாடுங்கள்’ என்றார் விஜய்சேதுபதி!

‘காமன் மேன் புரொடக்‌ஷன்ஸ்’ சார்பில் கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க, இவர்களுடன் சதீஷ், ஹரீஷ் உத்தமன் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளார்கள். டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தை தமிழகம் முழுக்க ‘சிவபாலன் பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;