ஆண்டவன் கட்டளை - விமர்சனம்

வெற்றிக்கான கடவுச்சீட்டு!

விமர்சனம் 23-Sep-2016 3:11 PM IST Chandru கருத்துக்கள்

Direction : M. Manikandan
Production :Gopuram Films,Tribal Arts
Starring : Vijay Sethupathi,Ritika Singh,Nassar,Pooja Devariya
Music : K
Cinematography : N. Shanmuga Sundaram
Editing : Anucharan

‘தர்மதுரை’ வெளியாகி இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்குள்ளாகவே விஜய்சேதுபதியின் இன்னொரு படமும் தற்போது ரசிகர்களின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அதுவும் காக்கா முட்டை, குற்றமே தண்டனை இயக்குனரின் கைவண்ணத்தில் என்பதால் ‘ஆண்டவன் கட்டளை’க்கு அனேக பேர் வெயிட்டிங்! படம் எப்படி?

கதைக்களம்

ஊரில் கடன் பிரச்சனை என்பதால் டூரிஸ்ட் விசாவில் லண்டனுக்குச் சென்று, இலங்கை வாழ் தமிழ் அகதியாக அங்கேயே தங்கி வேலை பார்க்கத் திட்டமிடுகிறார்கள் விஜய்சேதுபதியும், யோகி பாபும். அதற்காக சென்னை வந்து பாஸ்போர்ட், விசாவுக்காக குறுக்கு வழியை நாடுகிறார்கள். அதனால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன.... அவர்களின் எண்ணம் ஈடேறியதா இல்லையா? என்பதே ‘ஆண்டவன் கட்டளை’யின் அடுத்தடுத்த பக்கங்கள்!

படம் பற்றிய அலசல்

நமக்கான எந்த ஒரு அடையாளத்தையும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, அதற்காக உள்ள நடைமுறைகளைப் பின்பற்றிப் பெறுவதே நல்லது. மீறி, குறுக்குவழியைத் தேடி விரைவாகப் பெற முயன்றால் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை ஒரு அருமையான ‘மெலோ டிராமா’ படமாக இயக்கியிருக்கிறார் மணிகண்டன். ரொம்பவும் சாதாரணமான ஒரு கதைதான். ஆனால், அதை இயக்கிய விதமும், நடிகர்களின் அட்டகாசமான நடிப்பும், இறுதியில் சொல்லியிருக்கும் சேதியும் ‘ஆண்டவன் கட்டளை’க்கு சபாஷ் போட வைத்திருக்கிறது.

இது ஒரு டிராமா வகையறா என்றாலும், அதிலும் திரைக்கதையோடு ஒன்றிய காமெடியை கலந்துவிட்டிருப்பது நல்ல யுக்தி. பாடல்களும் இடைச்செருகலாக இல்லாமல், காட்சிகளின் பின்னணி இசையாகவே படம் முழுக்க பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒளிப்பதிவு, எடிட்டிங்கிலும் பழைய பாணியைப் பின்பற்றி படத்திற்கு வேறொரு டோனைக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள். ஆங்காங்கே ஸ்லோவாகப் பயணிப்பது ஒன்றே இப்படத்தின் ஒரே நெகடிவ் பக்கம்.

நடிகர்களின் பங்களிப்பு

இதுபோன்ற கேரக்டர்களில் வேறு யாரையுமே யோசித்துப் பார்க்க முடியாதபடி அட்டகாசமாக நடித்து அசத்திவிடுகிறார் விஜய்சேதுபதி. எந்த ஒரு இடத்திலும் அவரின் நடிப்பை தனியாகப் பிரித்துப் பார்க்க முடியவில்லை. அத்தனை யதார்த்தம். சின்னச் சின்ன டைமிங் காமெடிகள் மூலம் படம் நெடுக கைதட்டல்களையும் அள்ளியிருக்கிறார் மனிதர்.

இறுதிச்சுற்றிலிருந்து முழுதாக வெளியே வருவதற்கு ரித்திகா சிங்கிற்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டியது அவசியம் என்றே தோன்றுகிறது அவர் இந்தப் படத்தில் ஏற்றிருக்கும் கார்மேக குழலி கேரக்டரைப் பார்க்கும்போது. அவரின் பெண்மைக்குள் ஒளிந்திருக்கும் ஆண்மையை ‘ஜர்னலிஸ்ட்’ கேரக்டர் கொடுத்து சரி செய்ய முயன்றிருக்கிறார் மணிகண்டன்.

யோகிபாபுவின் காமெடி காட்சிகள் படத்திற்கு மிகப்பெரிய பலம். முதல் 40 நிமிடங்கள் அவரின் ஆட்டம்தான். அதேபோல் இலங்கை வாழ் தமிழராக நடித்திருப்பவரும், இறுதியில் வரும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாரியும் இப்படத்தில் அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். இயக்குனரின் சிறந்த தேர்வு இவர்கள் இருவரும். இவர்களைத் தவிர நாசர், சிங்கம் புலி, பூஜா தேவரியா என இன்னும் பெரிய நட்சத்திர பட்டாளமே படத்தில் அந்தந்த கேரக்டர்களாக யதார்த்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

பலம்

1. எளிமையான கதையும், அது சொல்ல வரும் சமூக விழிப்புணர்வும்
2. மணிகண்டனின் இயக்கம்
3. நடிகர்களின் யதார்த்தமான சிறந்த நடிப்பு

பலவீனம்

இது ஒரு ‘டிராமா’ ஜர்னர் படம் என்பதால் கொஞ்சம் மெதுவாக பயணிக்கிறது. இதைத் தவிர்த்து படத்தில் பெரிய குறைகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்...

ஒரு விழிப்புணர்வு கதையை ‘டாக்குமென்ட்ரி’யாக சொல்ல முயலாமல், ‘வாழைப்பழத்தில் ஊசி’ ஏற்றுவதுபோல் அத்தனை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் மணிகண்டன். கதையும், கதாபாத்திரத்தில் நடித்தவர்களின் பங்களிப்பும் ஒன்றோடு ஒன்றாகக் கலந்து ‘ஆண்டவன் கட்டளை’யை அழகான படைப்பாக்கியிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச்: வெற்றிக்கான கடவுச்சீட்டு!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புரியாத புதிர் - டிரைலர்


;