தொடரி - விமர்சனம்

ஆங்காங்கே அலுப்பு... அவ்வப்போது பரபரப்பு... படம் நெடுக கலகலப்பு!

விமர்சனம் 22-Sep-2016 12:31 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Prabhu Solomon
Production : Sathya Jyothi Films
Starring : Dhanush, Keerthy Suresh, Thambi Ramaiah, Radha Ravi
Music : D. Imman
Cinematography : Vetrivel Mahendran
Editing : L.V.K. Doss

‘கும்கி’யில் யானையுடனும், ‘கயலி’ல் சுனாமியுடனும் களமிறங்கிய இயக்குனர் பிரபுசாலமன் இந்தமுறை ரயிலோடு நம்மை சந்திக்க வருகிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ், காட் ஃபிலிம்ஸ் நிறுவனஙகளின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘தொடரி’ படத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்க தம்பி ராமையா, கருணாகரன், கணேஷ் வெங்கட்ராம் உட்பட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். இசைக்கு இமான், ஒளிப்பதிவுக்கு வெற்றிவேல் மகேந்திரன், எடிட்டிங்கிற்கு எல்.வி.கே.தாஸ் ஆகியோர் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இன்று வெளியாகியிருக்கும் ‘தொடரி’ பயணம் பரபரப்பாக அமைந்துள்ளதா?

கதைக்களம்

டெல்லியிலிருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் ஒரு ரயில். சிற்சில தவறுகளாலும், திடீரென இஞ்சின் டிரைவர் மாரடைப்பு வந்து இறந்துவிடுவதாலும், யாராலும் நிறுத்த முடியாத வேகத்தில் அது பயணிக்கத் தொடங்குகிறது. அடுத்தடுத்த ஸ்டேஷனில் ரயில் நிற்காமல் போகவே, ரயில்வே கன்ட்ரோல் ரூம் பரபரப்புக்குள்ளாகிறது. அந்த பதட்டம் போலீஸ், மீடியா என பற்றி எரியத் தொடங்குகிறது. 700க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு என்ன நடக்குமோ என்ற அச்சத்துடன் ரயிலுக்குள் இருக்கிறார்கள். அதில் காதலர்களாக தனுஷும், கீர்த்தி சுரேஷும். இந்த பரபரப்பின் முடிவு எப்படி இருக்கும் என்பதை ‘தொடரி’யாக்கியிருக்கிறார் பிரபு சாலமன்.

படம் பற்றிய அலசல்

முழுப்படமும் ரயிலுக்குள்ளேயே நடப்பதுபோன்ற ஒரு சவாலான கதைக்களத்தைக் கையிலெடுத்து அதில் காதல், காமெடி, ஆக்ஷன், பரபரப்பு ஆகியவற்றைக் கலந்து ஒரு சுவாரஸ்யமான படைப்பை கொடுக்க முயன்றியிருக்கிறார் இயக்குனர் பிரபு சாலமன். இந்த சவாலான காரியத்தில் வெற்றிவேல் மகேந்திரனின் அற்புதமான ஒளிப்பதிவின் உதவியுடன் ஓரளவு வெற்றியும் கிடைத்திருக்கிறது ‘தொடரி’ டீமிற்கு.

முதல்பாதியில் ஹீரோ, ஹீரோயினுக்கிடையே காதலை மலர வைப்பது, தேவையில்லாத ஒரு வில்லனை உருவாக்கி ஹீரோவுடன் மோதவிடுவது, வலிய திணிக்கப்பட்ட காமெடிகள் என ‘தொடரி’யின் பயணம் கொஞ்சம் அலுப்பையே தருகிறது. ஆனால், இடைவேளை சமயத்தில் அந்த ரயிலுக்கு அடுத்து என்ன ஆகுமோ? என்ற பரபரப்பு பட்டாசு கொளுத்தியிருக்கிறார் இயக்குனர் பிரபுசாலமன். அதற்குப் பிறகான காட்சிகள் ஆங்காங்கே கொஞ்சம் அபத்தமாக இருந்தாலும், விறுவிறுப்புக்கும் சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லாமல் படமாக்கியிருக்கிறார்கள்.

பாடல்களே தேவையில்லாத ஒரு திரைக்கதையில் கேட்பதற்கு சுகமாக இருக்கும் பாடல்களை யாருக்காக சேர்த்தார்களோ? அதுவும் பரபர க்ளைமேக்ஸ் சமயத்தில் ஒட்டுமொத்த பயணிகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்போது ‘போன உசிரு.....’ என ஹீரோ ரயில் மீது ஆடுவது அபத்தத்தின் உச்சம். படம் நெடுக லாஜிக் ஓட்டைகளும் ஏராளம். அதேபோல் பிரபுசாலமனின் பலமே காதல்தான். இப்படத்தின் காதல் ரொம்பவே ‘வீக்’!

நடிகர்களின் பங்களிப்பு

‘மாரி’ போன்ற மாஸ் ஹீரோ படத்தில் நடித்த தனுஷ், இதுபோன்ற கேரக்டர்களுக்காக இறங்கி வந்து நடித்திருப்பது பாராட்டுக்குரியது. ஹீரோயிஸம் காட்டுவதற்கும், நடிப்பதற்கும் பெரிய வேலையில்லையென்றாலும் காமெடியில் அசத்தியிருக்கிறார் தனுஷ். மேக்அப்பே இல்லாமல் முழுப்படத்திலும் அழகாகத் தோன்றியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கொஞ்சம் லூஸுப் பெண் கேரக்டர்தான் என்றாலும், தன்னுடைய வெள்ளந்தியான நடிப்பாலும், சிரிப்பாலும் ரசிகர்கள் மனதை அள்ளியிருக்கிறது இந்த கேரளத்துப் பைங்கிளி. ஒன்றிரண்டு காட்சிகளைத் தவிர்த்து தம்பி ராமையாவின் காமெடிகள் படத்தில் பெரிதாக எடுபட்டுள்ளன. அவருடன் கைகோர்த்து கருணாகரனும் படத்தைப் போரடிக்காமல் நகர்த்துவதற்கு பெரிதாக உதவியிருக்கிறார். ராதாரவி, ஹரிஷ் உத்தமன் போன்றோருக்கு கதையில் வேலையில்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

பலம்

1. சவாலான கதைக்களம்
2. இரண்டாம்பாதி
3. ஒளிப்பதிவும், பின்னணி இசையும்

பலவீனம்

1. படத்தின் முதல்பாதி
2. லாஜிக் ஓட்டைகளும், சில அபத்தமான காட்சிகளும்
3. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

2 மணி நேரத்தில் பரபரப்பாக சொல்ல வேண்டிய ஒரு கதையை, கொஞ்சம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார் பிரபுசாலமன். இருந்தபோதும், படத்தின் இரண்டாம்பாதியை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் உருவாக்கி முதல்பாதியில் ஏற்பட்ட அலுப்பை மறக்கச் செய்திருக்கிறார். படத்தின் நீளத்தைக் குறைத்து, இன்னும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருந்தால் ‘தொடரி’யின் முழுப்பயணமும் திருப்தியாக இருந்திருக்கும்.

ஒரு வரி பஞ்ச் : ஆங்காங்கே அலுப்பு... அவ்வப்போது பரபரப்பு... படம் நெடுக கலகலப்பு!

ரேட்டிங் : 5/10

#Thodari #Dhanush #KeerthySuresh #PrabhuSolomon #DImman #RadhaRavi #SathyaJyothiFilms

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;