பகிரி - விமர்சனம்

பொதுஜனங்களுக்கான மெசேஜ்!

விமர்சனம் 16-Sep-2016 12:43 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Isaki Karvannan
Production : Lakshmi Creations
Starring : Prabhu Ranaveeran, Sharavya
Music : Karunaas, S.N.Arunagiri
Cinematography : Veerakkumar
Editing : Athiyappan Siva

'வாட்ஸ்-அப்’பின் தமிழ் சொல்லான ‘பகிரி’ என்ற டைட்டிலுடன் வெளியாகியிருக்கும் படம் என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

தன்னைப் போலவே மகனும் விவசாயம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒரு அப்பா. அவரின் வற்புறுத்தலால் விவசாயம் படித்தாலும், தனக்கு அரசாங்க வேலைதான் வேண்டும் என்று மதுபானக் கடையில் வேலை பார்க்க ஆசைப்படும் மகன். இவ்விருவரின் ஆசையில் யாருடைய ஆசை நிறைவேறியது? அது ஏன், எப்படி? என்பதற்கான விடையாக விரியும் படமே ‘பகிரி’.

படம் பற்றிய அலசல்

இப்படத்தை இயக்கியிருக்கும் அறிமுக இயக்குனர் இசக்கி கார்வண்ணன், தமிழகத்தில் அண்மைக் காலமாக பேசப்பட்டு வரும் மதுவிலக்கு மற்றும் அதனை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் நிலைப்பாடுகளை, விவசாயம் செய்வதன் அவசியத்தை மைய கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார். அதனை ஒரு சில அரசியல் கட்சிகளை, ஒரு சில பிரபல அரசியல்வாதிகளை மறைமுகமாக நக்கல், நய்யாண்டி, விமர்சனம் செய்து படமாக்கியுள்ள விதம் ரசிக்க முடிகிறது. ஒரு தொலைகாட்சி விவாதத்துடன் துவங்கும் படம், அந்த விவாதத்திலேயே மது விலக்கு விஷயத்தில் அரசியல் கட்சிகளுக்குள் இருக்கிற சுயநல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அத்துடன் மதுபான கடைகள் மூலம் வருமானத்தைப் பெருக்க அரசு அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை, அதிலிருக்கிற லஞ்ச லாவண்யங்களை, மதுபான ஆலைகளை நடத்தும் பெண்களை என ஒரு பிடி பிடித்திருக்கும் இயக்குனர், லாஜிக் விஷயங்கள் மற்றும் காட்சிகளை கோர்வையாக்குவதில் சற்று சறுக்கியிருக்கிறார். படம் சென்சாரில் ஏராளமான ‘கட்’கள் வாங்கியிருப்பதால் கூட அப்படி நேர்ந்திருக்கலாம். அதைப் போல ‘பகிரி’ என்ற தலைப்புக்கான விஷயங்களை மையப்படுத்துவதிலும் கோட்டை விட்டிருக்கிறார்.

இருந்தாலும் மக்களை சிந்திக்க வைக்கக் கூடிய கூர்மையான வசனங்கள், நக்கல், நைய்யாண்டி கலந்த காட்சி அமைப்புகளுடன் படம் பயணிப்பதால் போரடிக்கவில்லை. ‘பகிரி’க்கு வீரக்குமாரின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளது. ஆனால் எஸ்.என்.அருணகிரியின் பின்னணி இசையும், அத்தியப்பன் சிவாவின் படத்தொகுப்பும் கவனம் பெறவில்லை. கருணாஸ் இசையில் அமைந்துள்ள பாடல்கள் இனிமை!

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக பிரபு ரணவீரன் ‘பகரி’யில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடும் காட்சிகளில் சீரியஸ், காதலி ஷ்ரவ்யாவுடன் ரொமான்ஸ், அப்பா, அம்மா, தங்கையுடன் சென்டிமென்ட் என எல்லா ஏரியாக்களிலும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளார் பிரபு. கதாநாயகியாக வரும் ஷ்ரவ்யா, குறும்புக்கார, அடாவடிப் பெண்ணாக கவர்கிறார். கதாநாயகனின் தந்தையாக ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி நடித்துள்ளார். ‘பசி இருக்கிற வரை விவசாயம் அழியாது, விவசாயம்தான் சோறு போடும்’ என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தும் விதமாக வரும் கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார் சுப்பிரமணி. படத்தை கலகலப்பாக கொண்டு செல்வதில் அரசியல்வாதியாக வரும் ரவி மரியா, மூன்று பொண்டாட்டிக்கார மந்திரியாக வரும் டி.பி.கஜேந்திரன், ஷ்ரவ்யாவின் குடிக்கார தந்தையாக வரும் இயக்குனர் வெங்கடேஷ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். இன்னொரு அரசியல்வாதியாக வரும் கே.ராஜன், மாரிமுத்து, ஆதிரா ஆகியோரும் தங்களது பங்கை சிறிப்பித்துள்னனர்.

பலம்

1. விவசாயம், மது ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கதைக்களம்
2. அரசியல் நய்யாண்டி கலந்த வசனங்கள்

பலவீனம்

1. பின்னணி இசை மற்றும் படத்தொகுப்பு
2. லாஜிக் விஷயங்களில் கவனம் செலுத்தாது

மொத்தத்தில்...

‘அரசாங்கம் என்பது மக்களை காப்பாற்றதான்... மக்களையும் அவர்களுக்கான வாழ்வாதாரத்தையும் அழிக்க அல்ல!’, ‘மதுவை விட விவசாயம் தான் வளரவேண்டும்!’ என்பன போன்ற கருத்துக்களை தாங்கி வந்துள்ள ‘பகிரி’க்கு மக்களது ஆதரவு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : பொதுஜனங்களுக்கான மெசேஜ்!

ரேட்டிங் : 4/10

#Pakiri #IsakiKarvannan #PrabhuRanaveeran #Sharavya #Karunaas #LakshmiCreations #PakiriMovieReview

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

அடுத்த பதிவு

தொடர்புடைய படங்கள்

;