கிடாரி - விமர்சனம்

வன்முறை ஆட்டம்!

விமர்சனம் 3-Sep-2016 10:22 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Prasath Murugesan
Production : Company Productions
Starring : M. Sasikumar, Nikhila Vimal, Napoleon, Suja Varunee
Music : Darbuka Siva
Cinematography : S. R. Kathir
Editing : Praveen Antony

இயக்குனர் வசந்த பாலனிடம் உதவியாளராக இருந்த பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘கிடாரி’யின் பாய்ச்சல் எப்படி?

கதைக்களம்

சாத்தூரில் பெரிய தலை கொம்பையா பாண்டியன் (வேல ராமமூர்த்தி). இவரது பெயரைக் கேட்டால் ஊரே நடுங்கும்! ஆட்டுச்சந்தை தொழில் உட்பட பல தொழில் செய்து வரும் கொம்பையா பாண்டியனுக்கு பெற்ற பிள்ளை, வளர்ப்பு பிள்ளை என இரண்டு மகன்கள். வளர்ப்பு மகன்தான் கிடாரி (சசிகுமார்). கொம்பையா பாண்டியனுக்கு மிகவும் விசுவாசமானவர் கிடாரி என்பதால் அது சொந்த மகனுக்கு பொறுக்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனைகள் வரும். இந்நிலையில் ஒரு நாள் இரவில் கொம்பையா பாண்டியனின் கழுத்தில் யாரோ கத்தியால் குத்தி விட, உயிருக்கு போராடிய நிலையில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். கொம்பையா பாண்டியன் உயிர் பிழைத்தாரா? அவரை கத்தியால் குத்தியது யார்? என்பதற்கு விடை தரும் படமே கிடாரி.

படம் பற்றிய அலசல்

கொம்பையா பாண்டியன் கத்தியால் குத்தப்பட்ட, அது யாரக இருக்கும்? என்ற வாய்ஸ் ஓவரோடு கதை துவங்குகிறது. அதன் பிறகு வில்லன்கள் இரண்டு இரண்டு பேராக அறிமுகமாக, கொம்பையா பாண்டியனின் வாழ்க்கை வரலாறு காட்டப்படுகிறது! அந்த வரலாறு முழுக்க பகை, கொலை, ரத்தம், சதை என்று பயணிப்பதோடு, கிடாரி யார் என்பதும் விளக்கப்படுகிறது! வழக்கமான பழிக்கு பழி வாங்கும், வன்முறைகள் நிறைந்த கதைதான் என்றாலும் அதை தனது வித்தியாசமான ‘மேக்கிங்’கால் ஓரளவுக்கு ரசிக்க வைக்கும் விதமாக இயக்கியுள்ளார் பிரசாத் முருகேசன். ஒவ்வொரு கேரக்டரை அவர் உருவாக்கிய விதமும், அந்த கேரக்டர்களை கையாண்டுள்ள விதமும், மாறுபட்ட கிளைமேக்ஸும் கவனம் பெறுகிறது! இயக்குனரின் எண்ணங்களுக்கு ஈடு கொடுத்துள்ளது எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவும், அறிமுக இசை அமைப்பாளர் தர்புகா சிவாவின் இசையும்! பாடல்களை விட பின்னணி இசையில் தர்புகா சிவா அதிக கவனம் பெறுகிறார்! காமெடி, சென்டிமென்ட் போன்ற விஷயங்கள் இல்லாமல் படம் முழுக்க சீரியஸாக பயணிப்பதால் இப்படம் ஃபேமிலி ஆடியன்ஸை கவருமா என்பது சந்தேகமே!

நடிகர்களின் பங்களிப்பு

கிடாரியாக வரும் சசிகுமார் அருவா, வெட்டு, குத்து, ரத்தம் என்று தனக்கு பழக்கப்பட்ட வேலையை இப்படத்திலும் சிறப்பாக செய்துள்ளார். ஆனால், இன்னும் இதேபோன்ற சசிகுமார்களை எத்தனைமுறைதான் பார்ப்பது என்ற லேசான அயர்ச்சி ஏற்பதையும் தவிர்ப்பதற்கில்லை. கொம்பையா பாண்டியனாக வரும் வேல ராமமூர்த்தி நடிப்பிலும், தோற்றத்திலும் மிரட்டியுள்ளார். கிடாரியை காதலிப்பவராக வரும் நிகிலா விமலின் அழகு, பெர்ஃபார்மென்ஸ், ரொமான்ஸ் ரசிக்க முடிகிறது. கொம்பையா பாண்டியனின் கணக்கு பிள்ளையாக வரும் ‘ஜோக்கர்’ பட புகழ் மு.ராமசாமிக்கு இப்படத்திலும் நல்ல கேரக்டர்! கொம்பையா பாண்டியனின் ஒவ்வொரு அக்கிரமங்களையும் உள்ளுக்குள் புதைத்து வைத்துக்கொண்டு ஒரு கட்டத்தில் அதை வெளிப்படுத்தும் கேரக்டரில் வாழ்ந்துள்ளார் மு.ரா. வசுமித்ரா, சுஜா வருண்ணி, ஷோபா மோகன், கே.என்.காளை, தெனாலி, நெப்போலியன் என படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.

பலம்

1. நடிகர்களின் சிறந்த பங்களிப்பு
2. கதாபாத்திர வடிவமைப்பு, மேக்கிங்
3. இசை, ஒளிப்பதிவு

பலவீனம்

1. வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கதை
2. அதிகபடியான வன்முறை காட்சிகள்
3. படம் முழுக்க சீரியஸாக பயணிப்பது

மொத்தத்தில்...

வழக்கமான பழிக்கு பழி வாங்கும் கிராமத்து கதையாக இந்த ‘கிடாரி’ உருவாக்கப்பட்டுள்ளது என்றாலும் வித்தியாசமான மேக்கிங் என்பதால் இப்படம் ரசிகர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : வன்முறை ஆட்டம்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - டீசர்


;