குற்றமே தண்டனை - விமர்சனம்

சுவாரஸ்யமில்லாத க்ரைம் த்ரில்லர்!

விமர்சனம் 2-Sep-2016 4:35 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Manikandan
Production : Don Production, Tribal Art Productions
Starring : Vidharth, Pooja Devariya, Aishwarya Rajesh, Rahman
Music : Ilaiyaraaja
Cinematography : Manikandan
Editing : Anucharan

‘காக்கா முட்டை’ தந்த மணிகண்டனிடமிருந்து இன்னொரு படம் என்ற ஒற்றை விஷயமே போதுமானது ‘குற்றமே தண்டனை’ படத்தை ரசிகர்கள் எதிர்பார்ப்பதற்கு... பிறகென்ன எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறாரா தேசிய விருதுப் பட இயக்குனர்?

கதைக்களம்

‘டன்னல் வியூ’ என்ற வித்தியாசமான கண் பார்வை குறைபாடு கொண்ட நாயகன் விதார்த் பேச்சிலராகத் தங்கியிருக்கும் அபார்ட்மென்டில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷும் இன்னொரு வீட்டில் தனியாக வசிக்கிறார். அந்த வீட்டிற்கு அடிக்கடி ரஹ்மானும், இன்னொரு இளைஞனும் வந்துபோகிறார்கள். இதனை தன் வீட்டு பால்கனியிலிருந்து அவ்வப்போது பார்க்கிறார் விதார்த். அதோடு ஐஸ்வர்யாவுக்கே தெரியாமல் மறைமுகமாக அவரையும் ரசிக்கிறார். இந்நிலையில், திடீரென ஒருநாள் இரவில் ஐஸ்வர்யா வீட்டில் ரஹ்மானின் நடமாட்டம் தெரிகிறது. என்ன ஏதென்று விசாரிப்பதற்கு விதார்த் உள்ளே சென்றால், அங்கே ஐஸ்வர்யா ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடக்கிறார்.

ஐஸ்வர்யாவை கொலை செய்தது யார்? ஏன்? ரஹ்மான் அங்கே என்ன செய்து கொண்டிருந்தார்? கொலையைப் பார்த்த விதார்த் அதன் பிறகு என்ன செய்கிறார்? என்பதற்கான விடைகளாய் விரிகிறது ‘குற்றமே தண்டனை’யின் இரண்டாம்பாதி.

படம் பற்றிய அலசல்

‘காக்கா முட்டை’ தந்த இயக்குனர் என்பதோடு ‘குற்றமே தண்டனை’ படத்தின் விறுவிறுப்பான டிரைலரும் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு சுவாரஸ்யமான க்ரைம் த்ரில்லர் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதோடு, கடைசி நேரத்தில், சமீபத்தில் நடந்த பெண் கொலை வழக்கை மையமாக வைத்தே இப்படம் உருவாகியிருக்கிறது என்ற பரபரப்பும் படத்திற்கு வேறுவிதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக, இப்படம் மெதுவாகவும் விறுவிறுப்பின்றியும்தான் பயணிக்கிறது. அதோடு, இப்படம் ரசிகர்களுக்கு என்னமாதிரியான கருத்தைச் சொல்ல வருகிறது என்பதையும் எளிதில் யூகிக்க முடியவில்லை. சரி, விருதுக்குரிய அளவிற்கான யதார்த்தங்கள் நிறைந்த படமாகவாவது இதனை அணுகலாம் என்றால், அதிலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. மொத்தம் 95 நிமிடங்களே ஓடும் இப்படம் ஒரு பெரிய குறும்படத்தைப் பார்த்த அனுபவத்தை தந்து போகிறது.

இருந்தபோதிலும், டெக்னிக்கல் ஏரியாக்களில் பெரிய அளவில் கவனிக்க வைத்திருக்கிறது ‘குற்றமே தண்டனை’. நாயகன் வியூ ஃபைண்டர் வழியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வை ரசிகர்களுக்கு எளிதில் ஏற்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். காட்சிகளின் உணர்ச்சிகளைக் கடத்துவதில் ராஜா முக்கிய பங்கு வகித்திருக்கிறார். எடுத்துக்கொண்ட திரைக்கதைக்கு என்ன தேவையோ அதனை எடிட்டிங் சரியாகவே பிரதிபலித்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

நல்ல படத்தில் நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற வேண்டும் என்ற காத்திருப்பு விதார்த்திடம் தனியாகத் தெரிகிறது. தனக்குக் கிடைத்த கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஐஸ்வர்யாவின் கதாபாத்திர வடிவமைப்பு சரியாக அமையவில்லை என்றாலும், நடிப்பில் எந்த குறையும் வைக்கவில்லை. பூஜா தேவார்யாவும் அப்படியே. ரஹ்மான், நாசர் ஆகியோரும் தத்தமது கேரக்டர்களை உள்வாங்கி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பலம்

1. நடிகர்களின் பங்களிப்பு
2. இளையராஜாவின் பின்னணி இசை
3. ஒளிப்பதிவு

பலவீனம்

1. எந்த விறுவிறுப்புமின்றி பயணிக்கும் திரைக்கதை அமைப்பு
2. கதாபாத்திர வடிவமைப்பு

மொத்தத்தில்...

அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட், பரபரக்கும் காட்சிகள் என்பதே நம்மூர் ரசிகர்களைப் பொறுத்தவரை ‘க்ரைம் த்ரில்லர்’ படங்களுக்கான இலக்கணம்! ஆனால், இதிலிருந்து முற்றிலுமாக விலகி வேறொரு பாணியில் மெதுவாகவும், விறுவிறுப்பின்றியும் ஒரு படத்தைக் கொடுத்து அதில் ஒரு கருத்தையும் முன்வைக்க முயன்றிருக்கிறார் மணிகண்டன். ‘குற்றமே தண்டனை’ படத்தின் தன்மைக்கேற்ற ஒரு டிரைலரை ரசிகர்கள் மத்தியில் முன்வைத்து, அதற்குத்தகுந்த விளம்பரங்களையும் செய்திருந்தால் ஒருவேளை இப்படம் ஏமாற்றாமல் இருந்திருக்கலாம்.

ஒரு வரி பஞ்ச் : சுவாரஸ்யமில்லாத க்ரைம் த்ரில்லர்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;