இந்த வார ரிலீஸில் என்னென்ன படங்கள்?

இந்த வாரம் வெளியாகவிருக்கும் முக்கிய படங்களைப் பற்றிய ஒரு சிறு பார்வை

கட்டுரை 31-Aug-2016 11:46 AM IST Chandru கருத்துக்கள்

கிடாரி

‘கம்பெனி புரடொக்ஷன்’ சார்பில் எம்.சசிகுமார் தயாரித்து நடித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கிறது கிடாரி. அறிமுக இயக்குனர் பிரசாந்த் முருகேசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நிகிலா விமல் (வெற்றிவேல்), நெப்போலியன், சுஜா வாருணி உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார் ‘டர்புகா’ சிவா. கிராமத்துப் பின்னணியை கதைக்களமாகக் கொண்டு ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறதாம் கிடாரி.

குற்றமே தண்டனை

தேசிய விருதை வென்ற ‘காக்க முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2வது படம் என்ற ஒரு காரணமே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அதோடு சமீபத்தில் இப்படத்திற்காக செய்யப்பட்ட விளம்பரம் ஒன்று சென்னையில் பரபரப்பையும் கிளப்பியது. மேலும் இப்படம் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற கொலை வழக்கு ஒன்றை மையமாக உருவாகியிருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவரியா, குரு சோமசுந்தரம் ஆகியோர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

அகிரா (ஹிந்தி)

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சேனாக்ஷி சின்ஹா நாயகியாக நடித்திருக்கும் பாலிவுட் படம் ‘அகிரா’. கஜினி, ஹாலிடே படங்களைத் தொடர்ந்து முருகதாஸ் இயக்கியிருக்கும் 3வது நேரடி ஹிந்தி படம் இது. இப்படம் தமிழில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக்காம். சேனாக்ஷியுடன் இப்படத்தில் லக்ஷ்மி ராய், அனுராக் காஷ்யப், அதுல் குல்கர்னி உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்க, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இரு கில்லாடிகள் (தமிழ் டப்பிங்)

ஜாக்கி சான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள ஸ்கிப் டிராஷ் படம் தமிழில் ‘இரு கில்லாடிகள்’ என்ற பெயரில் இந்த வாரம் வெளியாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆங்கிலப் படங்களை விநியோகம் செய்திருக்கும் சன்மூன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக விஸ்வாஸ் சுந்தர் ‘இரு கில்லாடிகள்’ படத்தை வெளியிடுகிறார்.

ஜனதா கராஜ் (தெலுங்கு)

கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், சமந்தா, நித்யா மேனன் ஆகியோர் நடித்திருக்கும் தெலுங்கு படம் ஜனதா கராஜ். அதோடு, ‘பக்கா லோக்கல்...’ என்றொரு குத்துப் பாடலுக்கு நடிகை காஜல் அகர்வால் நடனமாடியிருக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இப்படம் நாளை (செப்டம்பர்) 1ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் நடிகர் மோகன் லாலும் முக்கிய வேடமொன்றில் நடித்திருப்பதால் கேரளாவிலும் பெரிய அளவில் வெளியாகிறது ‘ஜனதா கராஜ்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;