எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது - விமர்சனம்

கவுண்டருக்காக விசிட் அடிக்கலாம்!

விமர்சனம் 27-Aug-2016 5:49 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Ganapathy Balamurugan
Production : Jayaram Productions
Starring : Goundamani, Soundararaja, Riythvika
Music : S. N. Arunagiri

‘49-ஓ’வை தொடர்ந்து கவுண்டமணி கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

கவுண்டமணி, ‘கேரவன் கிருஷ்ணன்’ என்ற பெயருடன் சென்னையில் சினிமா பிரபலங்களுக்கு கேரவன் வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலை செய்து வருகிறார். அத்துடன் பிரச்சனைகளால் திருமணம் செய்ய முடியாமல் தவிக்கும் காதலர்களை ஒன்று சேர்க்கும் சமூக சேவையிலும் ஈடுப்பட்டு வருகிறார். இந்நிலையில் மதுரையிலிருந்து அரசியல் பிரமுகர் ஒருவரின் மகளான ரித்விகா தன் காதலன் சௌந்தர் ராஜாவுடன் வீட்டை விட்டு ஓடி வர, அவர்களை ஒரு ரௌடி கும்பல் துரத்தி வருகிறது. இதனை சென்னையிலிருந்து தன் ஊழியர்களுடன் மதுரைக்கு சுற்றுலா செல்லும் வழியில் கவுண்டமணி பார்த்து விட, அந்த ரௌடி கும்பலிடமிருந்து காதலர்களை எப்படி பாதுகாத்து, அவர்களை வாழ்க்கையில் இணைய வைக்கிறார் கவுண்டமணி என்பது தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படத்தின் கதை!

படம் பற்றிய அலசல்

கவுண்டமணி சின்ன பையனாக இருக்கும்போது அவரது கிராமத்திற்கு படப்பிடிப்புக்கு வரும் ஒரு படக்குழுவினருக்கும், உடை மாற்ற வசதி இல்லாமல் தவிக்கும் அந்த பட ஹீரோயினுக்கும் இடையில் தகராறு ஏற்படுவதன் மூலம் கவுண்டமணி மூளையில் உதிக்கும் ஒரு ‘ஐடியா’ தான் கேரவன் உருவாக காரணம் என்ற ஃப்ளாஷ் பேக் காட்சியுடன் படம் துவங்குகிறது! எந்த ஒரு லாஜிக் விஷயங்களையும் கடைபிடிக்காமல் படம் பார்க்க வருபவர்களை இரண்டு மணி நேரம் சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவோடு இப்படத்தை முழுக்க முழுக்க கவுண்டமணியை நம்பியே படமாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் கணபதி பாலமுருகன்! அவரது நம்பிக்கையை ஓரளவுக்கு நிறைவேற்றியும் உள்ளார் கவுண்டமணி!
‘கௌதம் மேனன் இயக்கும் படமா, ஈ.சி.ஆர்.ரோட்டில் உள்ள காஃபி ஷாப்புக்கு கேரவனை அனுப்பு’, ‘விஷால் நடிக்கும் படமா, பின்னி மில்லுக்கு கேரவனை அனுப்பு… இப்படி தமிழ் சினிமாவிலுள்ள சில விஷயங்களை, அரசியலில் உள்ள கேலி கூத்துக்களை, மக்களின் மூட நம்பிக்கைகளை தனது பாணியில் கிண்டலடித்து படம் முழுக்க சிரிக்க வைக்கிறார் கவுண்டமணி! இப்படத்தை பொறுத்தவரையில் ஒளிப்பதிவு, இசை அமைப்பு, படத்தொகுப்பு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள் குறிப்பிடும்படியாக அமையவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

கேரவன் கிருஷ்ணனாக வரும் கவுண்டமணி படம் முழுக்க தனது வழக்கமான நக்கல், நய்யாண்டி நடிப்புடன் சில சமூக கருத்துக்களையும் சொல்லி சிரிக்கவும் வைக்கிறார், சிந்திக்கவும் வைக்கிறார். ‘ஒய்ஃப் இல்லாமல் கூட வாழலாம், ஆனால் ‘வைஃபை இல்லாமல் வாழ முடியாது’, ‘இப்போது ஒரு நாட்டின் பொருளாதாரமே பெண்கள் வாங்கும் தங்கத்தையும் ஆண்கள் வாங்கும் மது பாட்டில்களையும் நம்பிதான் இருக்கிறது’ என்பது போன்ற கவுண்டமணி பேசும் வசனங்களுக்கு தியேட்டரில் அப்படியொரு அப்ளாஸ்! காதலர்களாக வரும் சௌந்தர் ராஜா, ரித்விகா, கவுண்டமணியின் மனைவியாக வரும் சனா, மதுரையை சேர்ந்த அரசியல் பிரமுகராக வரும் ‘மூணார்’ ரமேஷ், அவரது அன்பு தம்பியாக வரும் ‘சதுரங்கவேட்டை’ வளவன், கவுண்டமணியின் உதவியாளராக வரும் பாடகர் வேல்முருகன் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பாத்திரங்களை சிறப்பித்துள்ளனர்.

பலம்

1.காமெடி ஸ்கிரிப்ட்
2.கவுண்டமணி

பலவீனம்

1. லாஜிக் விஷயங்களை கடைபிடிக்காதது
2. இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்..

கவுண்டமணியின் நக்கல், நய்யாண்டி, காமெடியை ரசிப்பவர்களுக்கு இந்த ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’ படம் மகிழ்ச்சியை தர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : கவுண்டருக்காக விசிட் அடிக்கலாம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தமிழ் நடிகைகள் மீதான பார்வையை இயக்குனர்கள் மாற்றவேண்டும் - ரித்விகா


;