மீண்டும் ஒரு காதல் கதை - விமர்சனம்

நிஜமான காதல்!

விமர்சனம் 26-Aug-2016 3:22 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Mithran Jawahar
Production : Block Ticket Films
Starring : Walter Phillips, Isha Talwar
Music : G. V. Prakash Kumar
Cinematography : Vishnu Sharma
Editing : Thiyagarajan

நிவின் பாலி, இஷா தல்வர் நடித்து, மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தட்டத்தின் மறையத்து’ படத்தின் ரீ-மேக்கான ‘மீண்டும் ஒரு காதல் கதை’ எப்படி?

கதைக்களம்

ஏற்கெனவே நாம் பல படங்களில் பார்த்த ஹிந்து, முஸ்லிம் காதல் கதைதான் இப்படமும்! ஹிந்து மதத்தை சேர்ந்த வால்டர் ஃபிலிப்ஸ், ஆச்சாரம் மிக்க முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்த இஷா தல்வரை காதலிக்கிறார். இஷா தல்வருக்கும் வால்டர் ஃபிலிப்ஸ் மீது காதல் வருகிறது. இவர்களது காதல் விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்து பிரச்சனைகள் உருவாகிறது. வால்டர் பிலிப்ஸ் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறார்! அதைப்போல இஷா தல்வரின் குடும்பமும் இருக்கிற ஊரைவிட்டு வேறு ஊருக்கு போக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது! இந்நிலையில் இவர்களது காதல் என்னவாகிறது? என்ற ஒரு வரி கதைதான் ‘மீண்டும் ஒரு காதல் கதை’.

படம் பற்றிய அலசல்

இப்படத்தை, ‘யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ’உத்தம புத்திரன்’ முதலான படங்களை இயக்கிய மித்ரன் ஆர்.ஜவஹர் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். இது ஒரு ரீமேக் படம் என்பதால், இப்படத்திற்காக அவர் அதிகமாக மெனக்கெட்டதாக தெரியவில்லை. காரணம், ஒரு சில காட்சிகளை தவிர்த்து ‘தட்டத்தின் மறையத்து’வை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஹிந்து, முஸ்லிம் காதல் கதை என்று வரும்போது அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்தவகையில் யார் மனதும் புண்படாதபடியான வசனங்களுடன், அழகான காட்சியமைப்புகளுடன் கண்ணியமான ஒரு காதல் கதையாக இப்படத்தை இயக்கியுள்ளார் மித்ரன் ஜவஹர்! ஆனால் நம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் வேகம், விறுவிறுப்பு, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாமல் படம் 142 நிமிடங்கள் பயணிப்பதால் கொஞ்சம் போரடிக்கத்தான் செய்கிறது.

படத்தின் முதல்பாதியில் அடிக்கடி வரும் பாடல்கள், இரண்டாம்பாதி திரைக்கதையில் விறுவிறுப்பு, பரபரப்பு இல்லாது குறைகளாகவே தெரிகிறது. இதுபோன்ற விஷயங்களில் இயக்குனரும், படத்தொகுப்பாளரும் அதிக கவனம் செலுத்திருந்தால் ‘மீண்டும் ஒரு காதல் கதை’ விறுவிறுப்பான ஒரு காதல் கதையாக அமைந்திருக்கும். மற்றபடி ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, விஷ்ணு ஷர்மாவின் ஒளிப்பதிவு முதலான விஷயங்கள் படத்திற்கு ப்ளஸ்ஸாகவே அமைந்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக நடித்திருக்கும் அறிமுகம் வால்டர் ஃபிலிப்ஸ் நடிப்பில் புதுமுகமாக தெரியவில்லை! அன்பு, அமைதி, அடக்கம், ஏக்கம் என பல்வேறு குணாதிசயங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்! கட்டுப்பாடுகள் நிறைந்த முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த பெண் ஆயிஷாவாக வரும் இஷா தல்வர் அந்த கேரக்டருக்கு மிகவும் பொருந்தியுள்ளார். அழகாக தோன்றி அழகான நடிப்பையும் வழங்கியுள்ளார். ஆயிஷாவின் அப்பாவாக வரும் ‘தலைவாசல்’ விஜய், பெரியப்பாவாக வரும் நாசர், வால்டர் ஃபிலிப்ஸின் காதலுக்கு உதவும் போலீஸ் அதிகாரியாக வரும் மனோஜ் கே.ஜெயன், நண்பர்களாக வரும் அர்ஜுனன், வெங்கட் மற்றும் வித்யூலேகா, திவ்யா ஆகியோரும் தங்கள் ஏற்ற பாத்திரங்களை நிறைவு செய்துள்ளனர்.

பலம்

1. யதார்த்தமான கதைக்களம்
2. நடிகர்களின் சிறந்த பங்களிப்பு
3. இசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை
2. படத்தின் நீளம்
3. படத்தொகுப்பு

மொத்தத்தில்...

உண்மையான காதல், மதம், ஜாதி ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது என்பதை மீண்டும் வலியுறுத்தப்பட்டு வெளியாகியுள்ள இப்படம் இளைஞர்களை கவர வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : நிஜமான காதல்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜானி ட்ரைலர்


;