‘‘ஜோக்கர்’ மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்!’’ – நல்லக்கண்ணு

‘‘ஜோக்கர்’ மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும்!’’ – நல்லக்கண்ணு

கட்டுரை 24-Aug-2016 3:21 PM IST VRC கருத்துக்கள்

கடந்த 12-ஆம் தேதி வெளியாகி ஏராளமான சினிமா பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் முதலானோரின் பாராட்டுக்கள் பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் ராஜுமுருகனின் ‘ஜோக்கர்’. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்த இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நேற்று இப்படக் குழுவின் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்ச்சியில் இப்படத்தை பார்த்து பெரிதும் பாராட்டிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நல்லகண்ணு, படத்தொகுப்பாளரும், தயாரிப்பாளருமான மோகன், நடிகர் சிவக்குமார், இயக்குனர் லிங்குசாமி முதலானோரும் கலந்து கொண்டு ‘ஜோக்கர்’ குறித்து பேசினார்கள்.

இயக்குனர் லிங்குசாமி

இது மாதிரி ஒரு படத்தை எடுக்க மிக மிக தைரியமும், துணிச்சலும் வேண்டும்! அதை இப்படத்தின் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரகாஷ் பாபுவும், எஸ்.ஆர்.பிரபுவும் செய்து காட்டியிருக்கிறார்கள். ‘பீமா’ படம் முதற்கொண்டு ஒரு சில படங்களில் என்னுடன் பணியாற்றியுள்ளார் ராஜு முருகன்! அந்த சமயத்திலேயே எனக்கு முருகனோட திறமை பற்றி தெரியும். சொல்லப் போனால் அவன் என்னிடமிருந்து எதையும் கற்கவில்லை! நான் தான் அவனிடமிருந்து கற்றுக் கொண்டுள்ளேன். நான் தயாரித்த ‘வழக்கு எண் 18/1’ படத்தை போல என்னை ரொம்பவும் பாதித்த படம் இந்த ‘ஜோக்கர்’. ராஜுமுருகன் இன்னும் இதுபோன்ற பல சமூக கருத்துக்களை சொல்லும் படங்களை இயக்க வேண்டும்.

எடிட்டர் மோகன்

‘ஜோக்கர்’ ஒரு திரைப்படம் என்று எனக்கு தோணவில்லை. இது ஒரு பாடமாக தான் எனக்கு பட்டது! லாப, நஷ்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் இது மாதிரியான ஒரு படத்தை தயாரிக்க மிகப் பெரிய துணிச்சல வேண்டும்! இந்த படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, இப்படத்தை இயக்கிய ராஜுமுருகன், மன்னர் மன்னனாக நடித்த குரு சோமசுந்தரம் உட்பட இப்பட்த்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்! இத்தருணத்தில் நான் ஒரே ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன்! சமூக நலனில் அக்கறை கொண்டு நீங்கள் தயாரித்துள்ள இப்படத்தை தமிழக முதலமைச்சர், பாரத பிரதமர் ஆகியோருக்கு போட்டு காட்ட ஏற்பாடு செய்ய வேண்டும். சமூகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட, மக்களுக்கு நல்லது நடக்க அது வழிவகுக்கும்.

நடிகர் சிவகுமார்

இப்படத்தில் வரும் கதாநாயகி தான் திருமணம் செய்யவிருக்கும் படத்தின் கதாநாயகனிடம் வீட்டில் கழிவறை வசதி இருக்கிறதா என்று கேட்பதும், அந்த பெண்ணை திருமணம் செய்ய அந்த கதாநாயகன் கழிவறையை கட்டுவதும் இந்த ‘ஜோக்கர்’ படத்தில் பார்த்து வியந்து போனேன்! உணவை போன்று, படுத்து உறங்க தேவையான இடத்தை போன்று கழிவறையும் மனிதனுக்கு மிக அவசியமானது என்பதை இப்படத்தின் மூலம் செவிட்டில் அறைந்த மாதிரி சொல்லியுள்ள இயக்குனர் ராஜுமுருகனுக்கு என் பாராட்டுக்கள்!

கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தான் தெரியும் வீட்டில் கழிவறை இல்லாததன் வலி! நானும் கிராமத்தில் இருந்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இன்னமும் கிராமத்திலுள்ள சில பெண்கள், காலை கடனை கழிக்க, சூரிய உதயத்திற்கு முன்னால், அல்லது சூரிய அஸ்தமனத்திற்கு பின்னால் என்று காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இன்னமும் நம் நாட்டில் இதுபோன்ற சமூக அவலங்கள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. அதுபோன்ற சமூக அவலங்கள் துடைத்தெறியப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படத்தை இயக்கிய ராஜுமுருகன், இதனை துணிச்சலாக தயரித்தவர்கள், இப்படத்தில் அந்தந்த கதாபாத்திரங்களாக வாழ்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் என்னோட பாராட்டுக்கள்.

நல்லக்கண்ணு

எனக்கும் சினிமாவுக்கும் வெகு தூரம். இருந்தாலும் ஒரு சில படங்களை நான் பார்த்ததுண்டு! ராஜுமுருகன் இயக்கிய இந்த ஜோக்கரை பார்த்தப்போது, எப்படி இந்த படத்தை வெளியிட அனுமதித்தார்கள் என்று நினைத்து வியந்தேன். இது போன்ற ஒரு படத்தை எடுக்க துணிச்சலும், தைரியமும் வேண்டும்! மக்களிடம் எப்போதும் ஒரு மாற்றம் வேண்டும் என்ற தேடல் இருக்கிறது. ஆனால் அதற்காக யாரும் தெருவுக்கு வந்து போராடுவதில்லை. ஆனால இப்படம் மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். அதற்கு வழி வகை செய்துள்ளார் ராஜு முருகன்! யாரும் யாருக்கும் சகாயம் செய்ய வேண்டாம்! சகாயமாக நடந்துகொண்டாலே போதுமானது! படத்தொகுப்பாளர் மோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார்! இந்த படத்தை முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் போட்டு காட்டுங்கள் என்று! நான் அதை வேண்டாம் என்று சொல்கிறேன்! ஏன் என்றால் அது ஆபத்தாகதான் முடியும்!
இவ்வாறு நல்ல கண்ணு பேசியதும் விழா அரங்கம் பார்வையாளர்களின் கைத்தட்டல்களால் அதிர்ந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;