புது பொலிவுடன் வெளியாகும் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்!

டிஜிட்டலில் உருவாகியுள்ள எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்!

செய்திகள் 22-Aug-2016 1:10 PM IST VRC கருத்துக்கள்

மாபெரும் வெற்றிபெற்ற பழைய திரைப்படங்களை இன்றைய நவீன டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். இந்த வரிசையில் எம்.ஜி.ஆரின் ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படமும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன் ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் தயாரித்து வெளியாகிய இப்படத்தில் எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாக மஞ்சுளா அறிமுகமானார். இவர்களுடன் எஸ்.ஏ.அசோகன், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன், சோ.ராமசாமி, எஸ்.வி.ராமதாஸ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

எம்.கிருஷ்ணன் இயக்கிய இப்படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார். வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிய இப்படம் டிஜிட்டல் முறையில் பொலிவூட்டப்பட்டுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று (21-8-16) மாலை சென்னை தேவி பாரடைஸ் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் 45 வருடங்களுக்கு முன் இப்படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார். அப்போது ‘‘இந்த திரையரங்க வளாகத்தை திறந்து வைத்தது நான் தான்! அதைப்போல அப்போது நான் தயாரித்த இந்த படத்தை வெளியிட்டதும் இந்த தியேட்டரில் தான்! இன்று அதே திரையரங்கில் அதே திரைப்படத்திற்கான விழாவுக்காக நான் இங்கு வந்திருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்றார்.

ஆர்.எம்.வீரப்பனை தொடர்ந்து விழாவில் நடிகர்கள் மயில்சாமி, வின்சென்ட் அசோகன், சின்னி ஜெயந்த் உட்பட பலர் எம்.ஜி.ஆர்.குறித்தும் ‘ரிக்‌ஷாக்காரன்’ படம் குறித்தும் பேசினார்கள். இவ்விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர்.ரசிகர்களும் கலந்து கொண்டிருந்ததால் விழா அரங்கம் ஒரே கலகலப்பாக இருந்தது. எம்.ஜி.ஆர்.மறைந்தாலும் மக்கள் மனதில் அவர் இன்றும் அதே புகழோடும், பெயரோடும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதற்கு நேற்றைய இந்த விழா ஒரு உதாரணமாக இருந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;