கமல்ஹாசனுக்கு உலக புகழ்பெற்ற செவாலியர் விருது!

சிவாஜி கணேசனை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது!

செய்திகள் 22-Aug-2016 9:58 AM IST VRC கருத்துக்கள்

பிரான்ஸ் நாட்டு அரசாங்கத்தின் உயரிய விருதான செவாலியர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன் 1995-ல் இவ்விருது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பெற்றுக்கொண்டுள்ளார். கலை இலக்கிய பணிகளில் கமல்ஹாசனின் சிறந்த பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவருக்கு செவாலியர் விருது வழங்கப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இவ்விருதை பெறும் நடிகர் கம்லஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
தனக்கு செவாலியர் விருது வழங்கப்படவிருப்பதற்கு நன்றி தெரிவித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘பிரெஞ்சு அரசு கலை இலக்கியத்திற்கான செவாலியர் விருது எனக்கு அளிக்க முன் வந்துள்ளது. பெருமிதத்துடன் நன்றியுடன் பணிவுடன் அவ்விருந்தை ஏற்றுகொள்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐய்யா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரும் அறிய செய்த காலஞ்சென்ற சத்யஜித்ரேவையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன். இச்செய்தியை எனக்கு தெரிவித்த இந்தியாவில் உள்ள பிரஞ்சு தூதர் மாண்புமிகு அலெக்சாண்டர் அவர்களுக்கும் எனது நன்றிகள்!

இனி நாம் செய்ய வேண்டிய கலை இலக்கிய பணிக்கான பெரும் ஊக்கமாகவே இவ்விருதினை நான் கருதுகிறேன். இது வரையிலான என் கலை பயணம் தனிமனித கலை பயணம் அல்ல என்பதை உணர்கிறேன். என் 4 வயது முதல் என் கையை பிடித்து சினிமாவில் பயணம் செய்ய வைத்த ரசிகர்கள், சினிமாவை சேர்ந்தவர்கள் என அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார் கமல்ஹாசன்!

கமல்ஹாசனுக்கு செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன. நடிகர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ பிரான்ஸ் அரசாங்கத்தின் மிக உயர்ந்த விருதான செவாலியர் விருதை மறைந்த நடிப்பு ஆசான் நடிகர் திலகம் டாக்டர் திரு.சிவாஜிகணேசன் அவர்களுக்கு கொடுத்து கௌரவித்தது. அதே போல் இப்போது எங்கள் சகோதரர் உலக நாயகன் டாக்டர் திரு .கமல்ஹாசன் அவர்களுக்கு செவாலியர் விருதினை பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளதை தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் பாராட்டப்பட்ட திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு அதே செவாலியர் விருது கிடைத்திருப்பது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. செவாலியர் விருது பெற்ற நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களுக்கு பெரும் விழா எடுத்து சிறப்பித்தது போல் , திரு. கமல்ஹாசன் அவர்களுக்கும் மாபெரும் விழா எடுக்க விரும்புகிறோம். இது அவரை நேரில் சந்தித்த பிறகு முடிவாகும். செவாலியர் விருது கிடைத்த எங்கள் சகோதரர் திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் மற்றும், அனைவர் சார்பிலும் வாழ்த்துதல்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்து கொள்கிறோம்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;