தர்மதுரை – விமர்சனம்

மக்கள் சேவகன்!

விமர்சனம் 20-Aug-2016 3:10 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Seenu Ramasamy
Production : Studio 9 R. K. Suresh
Starring : Vijay Sethupathi, Tamannah, Aishwarya Rajesh, Srushti Dange
Music : Yuvan Shankar Raja
Cinematography : M. Sukumar
Editing : Kasi Viswanathan

‘தென்மேற்கு பருவ காற்று’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள‘தர்மதுரை’ என்ன சொல்கிறார்?

கதைக்களம்

விஜய்சேதுபதி, குடிப்பதே வேலையாக கொண்டு தன் குடும்பத்தினருக்கு பாரமாக இருந்து வருகிறார். அவர் செய்த சில காரியங்களால், அம்மா ராதிகா சரத்குமார் தவிர்த்து, விஜய்சேதுபதியின் அண்ணன், தம்பி,அண்ணி என அந்த குடும்பத்திலுள்ள யாருக்கும் விஜய் சேதுபதியை அறவே பிடிக்காது! மனிதாபிமான மிக்க நல்ல ஒரு மருத்துவராக திகழ்ந்து வந்த விஜய் சேதுபதியின் வாழ்க்கை தடுமாற என்ன காரணம் என்பது ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக விரியும்போது, மருத்துவ கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள், அவரை விரும்பிய சக மாணவிகளான தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே மற்றும் , காலேஜ் புரொஃபசர் ராஜேஷுடனான நல்ல நட்பு, தான் விரும்பி மணம் முடிக்கவிருந்த கிராமத்து அப்பாவிப் பெண் ஐஸ்வர்யாவின் திடீர் தற்கொலை, விஜய்சேதுபதியை தீர்த்துகட்ட திட்டம்போடும் அவரது சகோதரர்களின் நயவஞ்சகம்….இப்படி பல சம்பவங்கள்! அந்த சம்பவங்கள் என்ன என்பது தான் ‘தர்மதுரை’யின் கதைக்களம்!

படம் பற்றிய அலசல்

மருத்துவ படிப்பு படித்தவர்கள் வெளிநாடு செல்லாமல் கிராமங்களில் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் சீனு ராமசாமி! அதை சென்டிமென்ட்,காதல், காமெடி கலந்த ஒரு குடும்ப கதையாக ரசிக்கும்படி இயக்கி உள்ளார். படத்தின் முதல் பாதி கொஞ்சம் ஸ்லோவாக பயணிப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், பிற்பாதி எமோஷன், விறுவிறுப்பு என்று வேகமாக பயணிப்பதால் அந்த குறை பெரிதாக தெரியவில்லை. விஜய்சேதுபதி, தமன்னா. ஸ்ருஷ்டி டாங்கே,ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார் ,கஞ்சா கருப்பு என்று படத்தில் நடித்திருக்கும் அனைவரது பாத்திரப் படைப்பும், அந்த பாத்திரங்கள் இணையும் விதமும் சாமர்த்தியமாக கையாண்டுள்ளார் சீனுராமசாமி. அதனால் படம் பார்ப்பவர்களால் கதையுடன் ஒன்றி பயணிக்க முடிகிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் தன் கேமராவால் தேனி, தென்காசி, மதுரை, ஆண்டிப்பட்டி முதலான ஊர்களின் கிராமத்து அழகை அப்படியே நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படத்திற்கு இசை அமைத்துள்ள யுவன் சங்கர ராஜாவின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ‘தர்மதுரை’க்கு பக்க பலமாக அமைந்துள்ளது.முதல் பாதியிலுள்ள ஒரு சில குறைகளை தவிர்த்து பார்த்தால் ‘தர்மதுரை’ பார்க்க கூடிய ஒரு படைப்பாகவே அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு!

விஜய்சேதுபதி அற்புதமான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும்! ஆனால் இப்படத்தில் அதையெல்லாம் தாண்டிய நடிப்பை வழங்கியுள்ளார்! குடித்து விட்டு அலப்பறை பண்ணும் சராசரி ஒரு கிராமத்து மனிதராக,மருத்துவ கல்லூரியில் சிறந்த மாணவனாக, தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே ஆகியோருக்கு மிகவும் பிடித்தவராக, கிராமத்து அப்பாவி பெண் ஐஸ்வர்யாவை காதலிக்கும் காதலனாக அம்மாவுக்கு கட்டுப்பட்ட நல்ல பிள்ளையாக.. இப்படி படம் முழுக்க மாறுபட்ட பரிமாணங்களில் நம்மை பிரமிக்க வைத்துள்ளார் விஜய்சேதுபதி. தமன்னாவுக்கு இப்படத்தில் நடிக்க ஸ்கோப் உள்ள கேரக்டர், சொந்த குரலில் பேசி நன்றாக நடிக்கவும் செய்துள்ளார். ஸ்ருஷ்டி டாங்கே கொஞ்ச நேரமே வருகிறார் என்றாலும் மனதில் நிற்கும்படியாக செய்துள்ளார். ‘நல்லா படித்தவன் இப்படி குடிக்காரனாகி விட்டானே…’ என்று கண்கலங்கும் ராதிகா, தன்னை விரும்பியவனை கை பிடிக்க ஆசைப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் ஐஸ்வர்யா ஆகியோர் படம் பார்ப்பவர்களை நிச்சயம் கண்கலங்க வைக்கும்! மருத்துவ கல்லூரி புரொஃபஸராக வரும் ராஜேஷ், ஐஸ்வர்யாவின் அப்பாவக வரும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்சேதுபதியின் அண்ணனாக வரும் அருள் தாஸ், தம்பியாக வரும் சௌந்தரபாண்டி முதலானோரிடமும் சிறந்த நடிப்பை வரவழைத்துள்ளார் இயக்குனர்!

பலம்

1. விஜய்சேதுபதி உட்பட அனைவரின் சிறந்த பங்களிப்பு
2. யுவன் சங்கர் ராஜாவின் இசை, சுகுமாரின் ஒளிப்பதிவு
3. மருத்துவப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள கதைக்களம்

பலவீனம்

1.கொஞ்சம் ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. எடுபடாத பொழுதுபோக்கு அம்சங்கள்

மொத்தத்தில்…

ஜாலியான பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்து, அழகியல் நிறைந்த யதார்த்தமான ஒரு குடும்ப கதையை பார்க்க விரும்புவோர் இந்த ‘தர்மதுரை’யை பார்க்க தியேட்டருக்கு பயணிக்கலாம்!

ஒரு வரி பஞ்ச் : மக்கள் சேவகன்!

ரேட்டிங் : 5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கருப்பன் - மோஷன் போஸ்டர்


;