‘ஒரு நல்ல பாட்டு முடிந்து விட்டதே!’ – கவிஞர் வைரமுத்து

நா.முத்துக்குமார் மறைவு  குறித்து கவிஞர் வைரமுத்து!

செய்திகள் 16-Aug-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

கவிஞர் நா.முத்துக்குமாரின் திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமின்றி தமிழ் சினிமாவை நேசிக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் அதிர்ச்சி அடைந்த வைத்துள்ளது. அவரது மறைவையொட்டி கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ‘கண்ணீர்’ இரங்கள் செய்தியில்,
‘‘இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனை காலம் காவுக்கொண்டு விட்டது! நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தை போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்ல! சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதை காலம் களவாடி விட்டது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் அதிகம் எழுதியவர், அழகாகவும் எழுதியவர். ‘‘மழை மட்டுமா அழகு, வெயில் கூட அழகு’’ என்று சொன்னவர். ‘‘வாழ்வு மட்டுமா அழகு மரணம் கூட தான் அழகு’’ என்று சொல்லாமல் சொல்லிவிட்டு போய் விட்டார்.

தமிழ் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான்! இன்று இளங்கன்று ஒன்று தன் வேர் மண்ணோடு வீழ்ந்து விட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்து விட்டதே என்று வேதனைப்படுகிறேன்.
‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்று ஒரு முறை கேட்டேன். ‘காஞ்சி அண்ணா’ என்று சொன்னார். ‘அண்ணாவே காஞ்சிதான்’ என்றேன். கோவையில் நிகழ்ந்த உலக தமிழ் மாநாட்டில் என் தலைமையில் கவிதை பாட வந்தார். ‘‘சிறந்த வரிகளை அரங்கில் மீட்டு நீ பிறந்த ஊர் காஞ்சி என்பதை காட்டு’’ என்று அவரை அறிமுகம் செய்தேன். இன்று மரணம் அவர் மௌனத்தையே கவிதையாக்கி விட்டது. அவர் வாழ்ந்த பெருமையை அவர் பாடிய பாடல்கள் பாடிக்கொண்டே இருக்கும்.

நா.முத்துக்குமாரை இழந்து வாடும் அவரது கும்பத்தார்க்கும், கலை உலகத்துக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மரணத்தின் சபையில் நீதி இல்லை என்பதை மறுபடி உறுதிப்படுத்தி கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாயும் புலி - சிலுக்கு மரமே பாடல் வீடியோ


;