முடிஞ்சா இவன புடி – விமர்சனம்

டபுள் கேம்!

விமர்சனம் 13-Aug-2016 4:50 PM IST VRC கருத்துக்கள்

Direction : K. S. Ravikumar
Production : Rambabu Productions (M. B. Babu)
Starring : Sudeep, Nithya Menen
Music : D. Imman
Cinematography : Rajarathinam
Editing : Praveen Antony

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ பட புகழ் சுதீப் கதாநாயகனாக நடித்து தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியிருக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ எப்படி?

கதைக்களம்

சத்தியம் என்ற பெயரில் நேர்மையான முறையில் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்து வரும் சுதீப், ‘சிவம்’ என்ற பெயரில் தொழில் அதிபர்கள் பதுக்கி வைக்கும் கறுப்பு பணத்தை நூதன முறையில் கொள்ளையடிக்கிறார். களவாடப்படுவது கறுப்பு பணம் என்பதால் அந்த தொழிலதிபர்கள் நேரடியாக போலீசிடம் செல்லாமல் தங்களுக்கு உடந்தையாக் இருக்கும் போலீஸ் அதிகாரி சாய் ரவி மற்றும் அடியாட்களை வைத்து திருடனை கண்டு பிடிக்க முயற்சிக்கிறார்கள். ரியல் எஸ்டேட் அதிபர் சத்தியமாக இருக்கும்போது பலமுறை அவர்களிடம் பிடிப்படும் சுதீப், ‘உங்கள் பணத்தை கொள்ளை அடித்தது நான் இல்லை, தோற்றத்தில் என்னைப் போலவே இருக்கும் என் அண்ணன் சிவம் தான்’ என்று சாமர்த்தியமாகவும் டெக்னிக்கலாகவும் நாடகமாடி தப்பித்து விடுகிறார். இந்நிலையில் தான் நேசிக்கும் சத்தியத்திற்கு இன்னொரு முகமும் உண்டு என்று தெரிய வரும் நித்யா மேனனும் சுதீப்பை வெறுத்து ஒதுக்க, சுதீப்பின் ஃப்ளாஷ் பேக் காட்சிகளாக விரிகிறது? அது என்ன? என்பது தான் ‘முடிஞ்சா இவன புடி’.

படம பற்றிய அலசல்

இப்படத்தின் கதை, இதே கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2002-ல் வெளிவந்து வெற்றிபெற்ற ‘வில்லன்’ படத்தில் அஜித் ஏற்று நடித்த கேரக்டர்களை நினைவுப்படுத்துவது போல் அமைந்துள்ளது என்றாலும் அதனை ரசிக்கும்படி திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். அப்பாவியாக வரும் சத்தியம், அடப்பாவி என சொல்ல வைக்கும் சிவம் என இரண்டு கேரக்டர்களை கையாண்டுள்ள விதத்தில் நிறைய குழப்பங்கள், லாஜிக் மீறல்கள் இருந்தாலும் ‘வில்லன்’ படத்தில் அஜித்தை ரசித்ததை போலவே இப்படத்தில் சுதீப்பையும் ரசிக்க வைத்திருக்கிரார் கே.எஸ்.ரவிக்குமார். எந்த ஒரு கதையாக இருந்தாலும் அதை விறுவிறுப்பாக, பரப்பான காட்சிகளுடன் போரடிக்காமல் சொல்வதில் கெட்டிக்காரர் கே.எஸ்.ரவிக்குமார் என்பதை இப்படத்திலும் நிரூபித்துள்ளார். 2 மணி 34 நிமிடங்கள் ஓடும் இப்படத்தின் வேகத்திற்கு ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவும், டி.இமானின் பின்னணி இசையும், பிரவீன் ஆன்டனியின் படத்தொகுப்பும் வலு சேர்த்துள்ளது. பாடல்களை பொறுத்தவரையில் டி.இமான் அதிக கவனம் செலுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

நடிகர்களின் பங்களிப்பு

அப்பாவியான சத்தியம், படு ஸ்மார்ட்டான சிவம் என இரண்டு விதமான கேரக்டர்களிலும் சுதீப் தான் சிறந்த நடிகர் என்பதை மீண்டும் நினைவுப்படுதியுள்ளார். நல்லவனான சுதீபை நேசிக்கும்போது நிதியா மேனன் அவரிடம் காட்டும் அன்பு, பாசம், அதே நேரம் அவர் ஒரு கிரிமினல் என்று தெரிய வரும்போது காட்டும் கோபம் ஆகிய மாறுபட்ட நடிப்பில் நம் மனதில் இடம் பிடித்து விடுகிறார் நித்யா மேனன்! அத்துடன் வித்தியாசமான அவரது சொந்தக்குரல் வசன உச்சரிப்புகளையும் ரசிக்க முடிகிறது. அப்பாவி சத்தியமாக வரும் சுதீப்பிடம் பரிவு கோண்ட போலீஸ் அதிகாரியாக வரும் நாசர், சத்தியமும், சிவமும் ஒருவரே என்று தெரிந்தும் அதை நிரூபிக்க முடியாமல் தவிக்கும் போலீஸ் அதிகாரியாக வரும் சாய் ரவி, கறுப்பு பணத்தை பறிகொடுக்கும் தொழிலதிபர்களாக வரும் முகேஷ் திவாரி, சரத் லோகித்ஷுவா, ஃப்ளேஷ் பேக் காட்சிகளில் சுதீப்பின் அப்பாவாக வரும் பிரகாஷ் ராஜ், அனாதை இல்ல மேலாளராக வரும் டெல்லி கணேஷ், ‘சத்தியம்’ சுதீப்பின் நண்பராக வரும் சதீஷ் ஆகியோரது பங்களிப்பும் பாராட்டும்படி அமைந்துள்ளது.

பலம்

1.சுதீப்பின் இரு மாறுபட்ட கேரக்டர்கள் மற்றும் நித்யா மேனன்
2.கே.எஸ்.ரவிக்குமாரின் விறுவிறு இயக்கம்
3.ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

பலவீனம்

1.‘வில்லன்’ படத்தை நினைவுப்படுத்துவது மாதிரி அமைந்த திரைக்கதை!
2. நம்ப முடியாத சில காட்சி அமைப்புகள், லாஜிக் மீறல்கள்
3. கவனம் பெறாத பாடல்கள்

மொத்தத்தில்…

லாஜிக் விஷயங்கள் பற்றியும், ‘வில்லன்’ படத்தையும் நினைவில் கொள்ளாமல் இரண்டரை மணிநேரம் ஜாலியாக பொழுதை கழிக்க நினைப்பவர்கள் ‘முடிந்தால்’ தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம்!

ஒருவரி பஞ்ச் : ‘டபுள்’ கேம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;