ஜோக்கர் - விமர்சனம்

சிந்திக்க வைப்பவன்!

விமர்சனம் 12-Aug-2016 11:10 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Raju Murugan
Production : Dream Warrior Pictures
Starring : Guru Somasundaram, Ramya Pandian, Gayathri Krishna
Music : Sean Roldan
Cinematography : Chezhiyan
Editing : Shanmugam Velusamy

வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியானாலும், அதில் நம் மண்ணின் கலாச்சாரத்தையும், மக்களின் வாழ்வியலையும் பிரதிபலிக்கும் கதைகளோடு வெளிவரும் படங்கள் சொற்பமே. தன் அறிமுகப்படமான ‘குக்கூ’ மூலம் அந்த சொற்ப பட்டியலில் இடம்பிடித்தவர் இயக்குனர் ராஜுமுருகன். ஒரு எழுத்தாளராக சமூக பிரக்ஞையுடன் வலம் வந்த ராஜுமுருகன், இயக்குனராக மாறிய பின்பும் அதிலிருந்த நெறிபிறழவில்லை என்பதை பார்வையற்றோர்களின் உலகத்தை பிரதிபலித்த ‘குக்கூ’ பறைசாற்றியது. அந்த வகையில், அவரின் 2வது படைப்பு இப்போது திரையரங்குகளை ஆக்ரமித்திருக்கிறது. ‘ஜோக்கர்’ சிரிக்க வைப்பவனா? சிந்திக்க வைப்பவனா?

கதைக்களம்

தருமபுரியின் பப்பிரெட்டிபாளையத்தில் தன்னைத்தானே ‘ஜனாதிபதி’ என சொல்லிக்கொண்டு, அநியாயத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருபவர் மன்னர் மன்னன் (குரு சோமசுந்தரம்). இவரை எங்கு பார்த்தாலும், அரசுப் பணியாளர்கள் அனைவரும் தெறித்து ஓடுகின்றனர். காரணம்... ஆமை விடும் போராட்டம், பின்னோக்கி நடக்கும் போராட்டம், கோமணத்துடன் போராட்டம், தீ போராட்டம் என தினம்தோறும் புதிய புதிய போராட்டத்துடன் அரசின் மந்தமான செயல்பாடுகளை கண்டிப்பதே மன்னர் மன்னனின் வேலை. போலீஸின் கைதும், ஜாமீனில் மீண்டும் வெளிவருதும் இவரின் அன்றாட நடவடிக்கை.

யார் இந்த மன்னர் மன்னன்? அவர் ஏன் தன்னை ஜனாதிபதி என கருதிக்கொள்கிறார்? அவரின் போராட்டங்களுக்குப் பின்னணியில் இருக்கும் காரணங்கள் என்னென்ன என்பதற்கான விடையாக விரிகிறது ‘ஜோக்கர்’.

படம் பற்றிய அலசியல்

சமீபகால தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு இப்படி ஒரு அறிமுகக் காட்சியை எந்த இயக்குனரும் யோசித்திருக்க மாட்டார்கள் (அப்படியென்ன ‘இன்ட்ரோ சீன்’ என்பதை படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளவும்). முதல் 20 நிமிடங்களுக்கு... கலெக்டர் ஆபீஸ், நீதிமன்றம், காவல் நிலையம், அரசியல் வசனங்கள், சட்டப்பிரிவுகள், போராட்டம், கைது என ஏதோ ‘கம்யூனிஸ்ட் டாக்குமென்ட்ரி’யைப் பார்ப்பது போன்ற உணர்வு ரசிகர்களுக்கு ஏற்படலாம். ஆனால், இந்த 20 நிமிட காட்சிகளின் முக்கியத்துவம் ஹீரோவுக்கான ஃப்ளாஷ்பேக்கில்தான் காட்டப்படும். அந்த அற்புதமான ஃப்ளாஷ்பேக்கில் காதல், சென்டிமென்ட், கிராமத்து மக்களின் வாழ்வியல், அரசு எந்திரத்தின் அடாவடித்தனம் என யதார்த்தத்திற்கு அருகில் நம்மை அழைத்துச் செல்கிறார் ராஜு முருகன்.

இப்படத்தின் மிகப்பெரிய பலம் வசனங்களும், நடிகர்களின் பங்களிப்பும். ‘நாம ஓட்டுப்போட்டுதான அவன் ஆட்சிக்கு வர்றான்... அதுக்கு மட்டும் நமக்கு உரிமை இருக்கு... அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு உரிமை இல்லையா....?’ இது போன்ற சமூக வசனங்களாகட்டும், ‘ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல ஒண்ணுமே கிடையாதுடா...’ என்பன போன்ற நெகிழ வைக்கும் வசனங்களாட்டும் அத்தனையும் ‘நச்’ ரகம்!

நாட்டுப்புற இசை மூலம் பாடல்களில் வெகுவாக வசீகரித்திருக்கும் ஷான் ரோல்டன், பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்ற உணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, படத்தின் முக்கிய காட்சி ஒன்றில் பின்னணி இசை மூலம் உணர்ச்சிகளைக் கடத்த வேண்டிய பெரிய வாய்ப்பு இருந்தும், அதை சரியாகக் கையாளவில்லையோ எனத் தோன்றுகிறது. செழியனின் ஒளிப்பதிவில் எளிமையும், அழகும் கைகோர்த்திருக்கிறது.

நடிகர்களின் பங்களிப்பு

ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்ற சோமசுந்தரம், இப்படத்தில் ‘மன்னர் மன்னன்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அப்பாவித்தனமான முகபாவம், வெள்ளந்தியான வசன உச்சரிப்பு என பல இடங்களில் கண்ணீரை வரவழைக்கிறது சோமசுந்திரத்தின் ஆத்மார்த்மான நடிப்பு. விருது நிச்சயம்!

நாயகி காயத்ரியையும், அறிமுக நாயகி ரம்யா பாண்டியனையும் படத்தில் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது. அந்தளவுக்கு அவர்களை கேரக்டர்களாகவே மாற்றியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. ஃப்ளாஷ்பேக்கில் இவரின் பங்களிப்பு பெரிய கவனத்தைப் பெற்றிருக்கிறது. ‘நீ ஒரு ரூரல் பியூட்டிடா’ என நாயகனைப் பார்த்து அவர் சொல்லும் அழகே தனி! படத்தின் உயிர்நாடி கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் மு.ரா. என்று அழைக்கப்படும் மு.ராமசாமி. ஹீரோவுக்கு இணையான இவரின் கதாபாத்திரமும், க்ளைமேக்ஸ் வசனமும் படத்தின் ஆணிவேர்!

பலம்

1. இயக்குனர் ராஜு முருகனின் கதையும், வசனங்களும்
2. நடிகர்களின் பங்களிப்பு
3. செழியனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் பாடல்களும்

பலவீனம்

1. பின்னணி இசை
2. ‘டாக்குமென்ட்ரி’ உணர்வை ஏற்படுத்தும் முதல் 20 நிமிட காட்சிகள்

மொத்தத்தில்...

பரபரப்பான இன்றைய சூழலில், நம் கண்ணெதிரே எத்தனையோ போராட்டங்களும், அரசுக்கெதிரான உண்ணாவிதரங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அதையெல்லாம் கண்டும் காணாமல் சுயநலமாக பயணிக்கும் ஒவ்வொருவரையும் உட்கார வைத்து கேள்வி கேட்கிறது ‘ஜோக்கர்’. தியேட்டரைவிட்டு வெளியே செல்லும் ஏதாவது ஒரேயொரு ரசிகன் ‘உண்மையில் யார் ஜோக்கர்?’ என்பதை உணர்வானேயானால் அதுவே இப்படத்தின் உண்மையான வெற்றி!

ஒரு வரி பஞ்ச் : சிந்திக்க வைப்பவன்!

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால் ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;