வாகா - விமர்சனம்

எல்லைக் காதல்!

விமர்சனம் 12-Aug-2016 11:07 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : G. N. R. Kumaravelan
Production : Vijay Bhargavi Films (M. Balavishwaanathan)
Starring : Vikram Prabhu, Ranya Rao
Music : D. Imman
Cinematography : S. R. Sathish Kumar
Editing : Raja Mohammad

ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனை மையமாக வைத்து ‘ஹரிதாஸ்’ எனும் படத்தை இயக்கி பாராட்டுப்பெற்ற ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘வாகா’ எப்படி இருக்கிறது?

கதைக்களம்

அப்பா வழியில் மளிகைக்கடை தொழில் செய்யப் பிடிக்காமல் ஜம்மு காஷ்மீரில் எல்லை பாதுகாப்பு படை வீரர் வேலையில் சேருகிறார் விக்ரம் பிரபு. எப்போதும் பதற்றத்துடன் இருக்கும் இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் பணியாற்றுகையில், காஷ்மீர் பகுதியில் வசித்து வந்த பாகிஸ்தான் பெண் ரன்யா ராவிடம் மனதை பறிகொடுக்கிறார் விக்ரம் பிரபு. இந்நிலையில் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பெரும் கலவரம் வெடிக்க, காஷ்மீரிலிருக்கும் பாகிஸ்தானியர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட, ரன்யா ராவும் பாகிஸ்தான் பயணமாகிறார். ரன்யா ராவுக்கு பாதுகாப்பாக பாகிஸ்தான் எல்லை தாண்டி ரகசியமாகச் செல்லும் விக்ரம் பிரபுவை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்! எல்லை தாண்டி ஒரு ஆட்டுக்குட்டி வந்தாலே அதனை ஈவு இரக்கமின்றி சுட்டுத்தள்ளும் பாகிஸ்தான் இராணுவத்தினர் விக்ரம் பிரபுவை என்ன செய்தார்கள்? விக்ரம் பிரபு, ரன்யா ராவ் காதல் என்ன ஆனது? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை தரும் படமே ‘வாகா’.

படம் பற்றிய அலசல்

பிடித்தும், பிடிக்காமலும், குடுமப் சூழ்நிலை காரணமாகவும் எல்லை பாதுகாப்பு படையில் சேர்ந்து வேலை செய்பவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளை, போராட்டங்களை இப்படத்தின் மூலம் சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன்! ஆனால் அதை நம் மனதில் பதியும்படியான ஒரு அழுத்தமான திரைக்கதையுடன் பதிவு செய்வதில் தடுமாறியிருக்கிறார். காஷ்மீர் எல்லைப் பகுதி, இராணுவம், பதற்றம் என்று துவங்கும் படம் ஏதோ சொல்ல வருகிறது என்று எதிர்பார்த்தால் நேசித்த பெண்ணை கை பிடிக்கப் போராடும் வழக்கமான ஒரு இளைஞனின் அடிதடி ஆக்ஷன் கதையாகவே இந்த ‘வாகா’ பயணிக்கிறது. பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கி கொள்ளும் நம் நாட்டு இராணுவ வீரர்கள் எப்படியெல்லாம் சித்திரவதைக்குள்ளாகிறார்கள், பாகிஸ்தான் இராணுவத்தினருக்கு இந்தியா மீதுள்ள வெறுப்பு, கோபம் ஆகியவற்றை மனதை பதற வைக்கும் காட்சி அமைப்புகளுடன் படமாக்கியுள்ள இயக்குனர் இப்படத்திற்கு ‘வாகா’ என்ற டைட்டிலை வைத்ததற்கான காரணத்தை படத்தில் விளக்கவில்லை. இந்திய, பாகிஸ்தான் எல்லையான ‘வாகா’ எனும் இடம் உலக பிரசித்தி பெற்றது. தினமும் இரு நாட்டு வீரர்களும் தங்கள் நாட்டுபற்றை வெளிப்படுத்தும் விதமாக அங்கு நடத்தப்படும் வீரமிக்க அணி வகுப்பையோ, அந்த இடத்தையோ ஒரு காட்சியில் கூட காண்பிக்காதது வருத்தம் தரும் விஷயமே!

காஷ்மீரின் அழகான லொகேஷன்களில் நடைபெறும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்கியிருப்பதில் எஸ்.ஆர்.சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும், டி.இமானின் பின்னணி இசையும், சண்டை இயக்கமும் குறிப்பிடும்படியாக அமைந்துள்ளது. டி.இமான் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கிறது. மற்றவை ஏற்கெனவே கேட்ட சில பாடல்களின் டியூன்களைப் போல இருப்பதால் கவனம் பெறவில்லை.

நடிகர்களின் பங்களிப்பு

படத்துக்கு படம் மாறுபட்ட கேரக்டர்களில் நடித்து வரும் விக்ரம் பிரபுவுக்கு இப்படத்திலும் மாறுபட்ட கேரக்டர்! எல்லை பாதுகாப்பு வீரரின் மேனரிஸங்களை அழகாக வெளிப்படுத்தி நடித்திருப்பதோடு அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார் விக்ரம் பிரபு. தமிழில் புதிதாக களமிறங்கியிருக்கும் ரன்யா ராவ் பாகிஸ்தான் பெண் கேரக்டருக்கு ரொம்பவும் பொருந்தியிருப்பதோடு நல்ல நடிப்பையும் வழங்கியுள்ளார். சில காட்சிகளில் ஹன்சிகா மோத்வானியை நினைவுப்படுத்துவது மாதிரி அமைந்துள்ளது அவரது நடிப்பும் தோற்றமும்! பாகிஸ்தான் இராணுவ அதிகாரியாக வரும் ஷாஜி சௌத்ரி மிரட்டலான நடிப்பில் கவர்கிறார். மற்றபடி படத்தில் நடித்திருக்கும் கருணாஸ், அஜய் ரத்னம், ராஜ்கபூர், சத்யன், வித்யுலேகா ஆகியோர் சிறிய கேரக்டர்களில் வந்து போகிறார்கள் அவ்வளவுதான்!

பலம்

1. விகரம் பிரபு, ரன்யா ராவின் அழகான ஸ்கிரீன் பிரசன்ஸ்
2. அழகான லொகேஷன்கள், ஒளிப்பதிவு, பின்னணி இசை
3. சண்டை காட்சிகள்

பலவீனம்

1. தலைப்புக்கு ஏற்ற வகையில் அமையாத அழுத்தமில்லாத திரைக்கதை
2. படத்தின் விறுவிறுப்பை குறைக்கும் கவனம் பெறாத 3 பாடல்கள்
3. வசனங்கள்

மொத்தத்தில்...

பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் வரும் ரசிகர்களுக்கு, காஷ்மீர் எல்லை பகுதியில் நடைபெறும் இந்த அதிரடி ஆக்ஷன் காதல் கதை பிடிக்க வாய்ப்பிருக்கிறது.

ஒரு வரி பஞ்ச் : எல்லைக் காதல்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;