‘ஜோக்கர்’ படத்தை அவசியம் பார்க்க வேண்டும்... ஏன்..?

ஏனென்றால்.... பொழுதுபோக்கு சினிமாக்களுக்கு மத்தியில் பேச வேண்டிய விஷயத்தைப் பேசவருகிறது ஜோக்கர்!

முன்னோட்டம் 9-Aug-2016 12:30 PM IST Chandru கருத்துக்கள்

ஏனென்றால்.... பொழுதுபோக்கு சினிமாக்களுக்கு மத்தியில் பேச வேண்டிய விஷயத்தைப் பேசவருகிறது ஜோக்கர்!

கலை என்பது கற்றலின் வடிவம் இல்லையா...? அது மக்களுக்கான பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாமா..? நம் மண்ணின் கலாச்சாரத்தையும், அது சார்ந்த விஷயங்களையும் யதார்த்தமாகப் படைத்து ரசிகர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டாமா? அரசு எந்திரத்தின் ஊழல்களையும், சாமான்ய மக்களின் ஆதங்கங்களையும் உலகறியச் செய்வதுதானே மீடியாவின் ஒரு பிரிவாய் இருக்கும் ‘சினிமா’வின் உண்மையான முகமாய் இருக்க வேண்டும். பத்தில் ஒன்பது படங்கள் ‘கவலைகளை மறக்கச் செய்யும்’ பொழுதுபோக்குப் படங்களாக இருந்தாலும், அதில் ஒன்றாவது மக்களின் சிந்தனையை கிளறும் விதமாக அமைய வேண்டுமல்லவா...? அதைத்தான் செய்ய வருகிறது ‘ஜோக்கர்’.

ஏனென்றால்... சாட்டையடி வசனங்கள் மூலம் சாமான்யனின் ஆதங்கங்களை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வருகிறது ஜோக்கர்!

‘நாம ஓட்டுப்போட்டுதான அவன் அதிகாரத்துக்கு வர்றான்... ஆனா, அவன் அநியாயம் பண்ணா... அவன டிஸ்மிஸ் பண்றதுக்கு நமக்கு அதிகாரம் இல்லையா....?’ இது ‘ஜோக்கர்’ டிரைலரில் இடம்பெற்ற முதல் காட்சிக்குரிய வசனம். இந்த ஒரு வசனமே போதும்.... இன்றைய வாக்காளர்களின், சாமான்யர்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கு. ‘‘வாழ்றதுதான் கஷ்டம்னு நினைச்சோம்... இப்போ பேல்றதையும் கஷ்டமாக்கிட்டானுவளா..?’’ - பள்ளியறை மட்டுமல்ல கழிவறையும் எத்தனை அவசியம் என்பதை பொட்டிலடித்து சொல்லும் இந்த வசனமும் ஜோக்கர் படத்தில் இடம்பிடித்திருக்கிறது. ‘‘இங்கலாம் வசதியில்ல... அப்போலோக்கு எடுத்துட்டு போங்க....’’ ‘‘அப்புறம் எதுக்கு அரசுக்கு ஓட்டு... ஓட்டெல்லாம் அப்போலோக்கு குத்திடலாமா...?’’ எத்தனை வலி நிறைந்த ஆழமான வசனம். இப்படி சாட்டையடி வசனங்களை படம் நெடுக வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.

ஏனென்றால்... ‘குக்கூ’ மூலம் பார்வையற்றோரின் உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்ற ராஜு முருகனின் படைப்பு ‘ஜோக்கர்’

‘வட்டியும் முதலும்’ தொடர் மூலம் எழுத்தாளராய் வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகன், சினிமாவிற்குள் நுழைந்ததும் ‘கமர்ஷியல்’ விஷயங்களை அள்ளித்தெளித்து வசூல் ரீதியான வெற்றிப் படத்தை கொடுக்க முயலாமல், விமர்சன ரீதியிலான ஒரு வெற்றிப்படைப்பை ‘குக்கூ’ மூலம் தந்தார். தனக்குக் கிடைத்த புகழ் பிம்பத்தை தன் அடுத்த படைப்பிலும் சரியான பாதைக்கே பயன்படுத்துவேன் என நிரூபிக்க வருகிறது அவரின் 2வது படைப்பான ‘ஜோக்கர்’. இப்படத்திற்காக பல்வேறு ஊர்களுக்குப் பயணித்து சாமான்யர்களின் வாழ்க்கையை உற்றுநோக்கி, தன் வாழ்நாள் அனுபவத்தில் சந்தித்த வலி மிகுந்த தருணங்களை கதையாக்கி ஜோக்கராய் களமிறக்கியிருக்கிறார்.

ஏனென்றால்... ‘ஹீரோ’க்களை நம்பாமல் கதாபாத்திரங்களை ஹீரோக்களாக்கியிருக்கும் படம் ஜோக்கர்!

இன்றைய தேதியில் ஒரு படம் வியாபாரமாக வேண்டுமென்றால் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களை படத்தின் ஹீரோவாக்குவதே புத்திசாலித்தனம் என கோலிவுட் நம்புகிறது. ஆனால், தன் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு தெரிந்தால்போதும், கதாநாயக / நாயகிகள் தெரியத் தேவையில்லை என துணிந்து, ‘ஜோக்கர்’ படத்திற்கான நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் ராஜு முருகன். படத்தில் அனைவருக்கும் தெரிந்த ஒரே நடிகர் குரு சோமசுந்தம். ஆரண்யகாண்டம், ஜிகர்தண்டா படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்ற சோமசுந்தரம், இப்படத்தில் ‘மன்னர் மன்னன்’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ரம்யா பாண்டியன் எனும் அறிமுக நாயகியுடன், ஒரே ஒரு படத்தில் நடித்திருக்கும் காயத்ரியும் ‘ஜோக்கரி’ல் களமிறக்கப்பட்டிருக்கிறார். படத்தில் இவர்களைப் பார்த்துவிட்டு நேரில் பார்த்தால் யாருக்குமே அடையாளம் தெரியாது. அந்தளவுக்கு அவர்களை கேரக்டர்களாகவே மாற்றியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்திருக்கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. ‘நீ ஒரு ரூரல் பீட்டுடா...’ ‘ஒருத்தியோட அன்புக்கு சமானமா இந்த உலகத்துல எதுவும் இல்ல...’ டிரைலரில் இடம்பெற்ற இந்த வசனங்களைப் பேசியிருப்பது பவா செல்லதுரையேதான். படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பவர் மு.ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாள்ர மு. ராமசாமி. படத்தின் க்ளைமேக்ஸில் இவர் பேசியிருக்கும் வசனம் ஒன்று ரசிகர்களை சிந்திக்க வைக்கும்.

ஏனென்றால்... நீண்டநாட்களுக்குப் பிறகு நாட்டுப்புற இசையை நம் காதுகளில் ஒலிக்க வைத்திருக்கிறது ‘ஜோக்கர்’

‘என்னங்க சார் உங்க சட்டம்...’, ‘ஓல ஓல குடிசையில...’, ‘ஜாஸ்மினு...’, ‘செல்லம்மா...’, ‘ஹல்லா போல்...’ என ‘ஜோக்கரி’ன் ஒவ்வொரு பாடல்களுமே நம் மண்ணின் கலாச்சார பின்னணியுடன் ஒலிக்கவிட்டிருக்கிறார் ஷான் ரோல்டன். ‘சொகுசு காருல தெரு... விவசாயி தூக்குல...’ என வரிகளால் சாட்டை சொடுக்கியிருக்கிறார் யுகபாரதி. ‘பாடல்களே வேண்டாம்...’ என ரசிகர்களின் ரசனை மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், ஒரு படத்தின் கதையோட்டத்தை பாடல்கள் மூலம் எத்தனை அழகாக பிரதிபலிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறது ‘ஜோக்கர்’.

ஏனென்றால்... செழியனின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கிறது ‘ஜோக்கர்’

பெரும்பாலும் ‘சிட்டி’களில் சுற்றிக்கொண்டிருக்கும் கேமராவை, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, தாரை தப்பட்டை என கிராமத்திற்கு அழைத்துச் சென்றிருக்கும் செழியனின் எளிமையான, யதார்த்தமான ஒளிப்பதிவில் உருவாகியிருக்கிறது ‘ஜோக்கர்’. வசனமேயில்லாத இடங்களிலும்கூட கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், காட்சிகளின் ஆழத்தையும் கடத்துவதில் வல்லவர் செழியன். ‘எளிமையிலும் பிரம்மாண்டம் காண்பிக்க முடியும் என்பதற்கு ஜோக்கரே உதாரணம்... இதில் பணியாற்றியது எனக்குப் பெருமை’ என பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார் செழியன்.

ஏனென்றால்.... இதுபோன்ற படைப்புகளை ஆதரிக்க வேண்டியது பார்வையாளர்களின் கடமை!

‘சகுனி’ மூலம் தயாரிப்புத்துறையில் கால்பதித்திருக்கும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இப்படம். ‘காஷ்மோரா’ என்ற பிரம்மாண்ட கமர்ஷியல் படத்தை ஒருபுறம் உருவாக்கிக் கொண்டிருந்தாலும் இன்னொருபுறம் ஜோக்கர், அருவி என்ற சமூகத்திற்கு அவசியமான படைப்புகளையும் உருவாக்கியுள்ளார்கள் தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு. இதுபோன்ற படைப்புகளுக்கு ஆதரவு தெரிவிப்பது ஒன்றே, தொடர்ந்து இதுபோன்ற படைப்புகள் வெளிவர ஊக்கம் அளிக்கும் ஒரே விஷயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஜிப்ஸி டீஸர்


;