ஜேசன் போர்ன் - ஹாலிவுட் பட விமர்சனம்

ஒரு பரபர த்ரில்லர்’ படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது இந்த ‘ஜேசன் போர்ன்’

விமர்சனம் 6-Aug-2016 5:18 PM IST Top 10 கருத்துக்கள்

ஹாலிவுட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற தொடர் வரிசைப் படங்களில் ‘போர்ன்’ தொடர்வரிசைப் படங்களுக்கு முக்கியப் பங்குண்டு. நாவலாக எழுதப்பட்டு, பின்னர் 1988ல் சீரியலாக உருவாக்கம் பெற்று, 2002ஆம் ஆண்டு திரைப்படம் வடிவமும் கண்டது ‘போர்ன்’ சீரீஸ். முதல் பாகம் ‘தி போர்ன் ஐடென்டிட்டி’யைத் தொடர்ந்து அதன் 2ஆம் பாகம் 2004ஆம் ஆண்டு ‘தி போர்ன் சூப்பர்மஸி’ என்ற பெயரிலும், 3ஆம் பாகம் ‘தி போர்ன் அல்டிமாட்டும்’ என்ற பெயரிலும், 4ஆம் பாகம் 2012ஆம் ஆண்டு ‘தி போர்ன் லீகஸி’ என்ற பெயரிலும் வெளிவந்தது.

இதில் முதல் 3 பாகங்கள் சூப்பர் ஹிட். 4ஆம் பாகம் முந்தைய பாகங்கள் அளவுக்கு இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்தது. அதற்கு முக்கிய காரணம், முதல் 3 பாகங்களிலும் போர்னாக நடித்தவர் மேட் டேமன். ‘ஜேசன் போர்ன்’ திரைப்படம். முதல் 3 பாகங்களைப் போலவே இந்த 5ஆம் பாகமும் சுவாரஸ்யம் தந்திருக்கிறதா?

‘போர்ன்’ தொடர் வரிசைப் படங்களை இதுவரை பார்க்காதவர்களுக்கு, அதன் கதையம்சம் எப்படிப்பட்டது என்பதை விளக்குவது மிக எளிது. கமல் நடிப்பில் நம்மூரில் வெளிவந்த ‘வெற்றி விழா’ பார்த்திருப்பீர்களேயானால்... அதுவும் இதுவும் கிட்டத்தட்ட ஒன்றுதான். 1988ல் வெளிவந்த ‘தி போர்ன் ஐடென்டிட்டி’ எபிசோடின் தாக்கம்தான் ‘வெற்றிவிழா’.

கதைப்படி நாயகன் ஜேசன் போர்னுக்கு அவர் யார்? அவரின் வேலை என்ன? அவரின் சொந்த, பந்தங்கள் எங்கே? என அவரின் எல்லா ‘ஐடென்டிட்டி’யும் மறந்துபோகும். தன் கையிலிருக்கும் உடமைகளை வைத்து, தன்னைப் பற்றிய ஒவ்வொரு விஷயங்களாக கண்டுபிடிக்கத் துவங்குவார் ஜேசன். இறுதியில் தான் ஒரு ‘அன்டர்கிரவுன்ட் சிஐஏ ஏஜென்ட்’ என்பதைக் கண்டுபிடித்து எதிரிகளை வீழ்த்துவார். இதுதான் ‘போர்ன்’ தொடர் வரிசைப் படங்களின் கதையம்சம். கிட்டத்தட்ட இதே போன்றதொரு கதையம்சத்துடன்தான் வெளிவந்திருக்கிறது இந்த 5ஆம் பாகமான ‘ஜேசன் போர்ன்’ படமும்.

ஹோட்டல் அறை ஒன்றில் கண்விழிக்கும் ஜேசன் போர்னுக்கு (மேட் டேமன்) அவர் யார் என்ற ஞாபங்கள் மறந்து போகின்றன. அப்போது, நிக்கி பெர்சன்ஸ் (ஜுலியா ஸ்டீல்ஸ்) என்ற முன்னாள் சிஐஏ பெண் அதிகாரி ஒருவர் ஜேசன் போர்னை சந்திக்க விரும்புவதாகவும், சிஐஏவில் நடக்கும் தகிடுதங்கள் சிலவற்றைக் கண்டுபிடித்து அதற்கு காரணமானவர்கள் பற்றிய விவரம் தன்னிடம் இருப்பதாகவும் கூறுகிறார். அதேநேரம், சிஐஏவில் உள்ள ரகசியங்களை சர்வரிலிருந்து நிக்கி பெர்சன்ஸ் தரவிறக்கம் கண்டுபிடிக்கிறது சிஐஏ. இதனால் நிக்கி பெர்சன்ஸையும், ஜேசன் போர்னையும் அழித்துவிட்டு, தரவிறக்கம் செய்த ரகசியங்களை கைப்பற்றக் கிளம்புகிறது சிஐஏ போலீஸ். இன்னொருபுறம் ‘கான்டிராக்ட் கில்லர்’ ஒருவனும் ஜேசன் போர்னை கொல்வதற்குக் கிளம்புகிறான்.

இந்த இக்கட்டான சூழலிலிருந்து ஜேசன் போர்ன் தப்பிக்கிறாரா? சிஐஏவின் பித்தலாட்டங்களுக்கு பின்னால் இருப்பது யார்? கான்டிராக்ட் கில்லரை எய்தவன் யார்? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையாக விரிகிறது ஜேசன் போர்ன் திரைப்படம்.

ஒரே பாணி கதைதான் என்றாலும், ஒவ்வொரு முறையும் இப்படங்களை ரசிக்க முடிவதற்குக் காரணம் அதன் பரபரப்பான திரைக்கதை யுக்திதான். படம் ஆரம்பித்த நொடியிலிருந்து இறுதி நொடி வரை சேஸிங், துப்பாக்கி சத்தம், அதிரடி சண்டை, சின்னச் சின்ன திருப்பங்கள் என காட்சிக்கு காட்சி ரசிகர்களை சுவாரஸ்படுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் பால் கிரீன்கிராஸ். ‘இவன்தான் வில்லன்’ என்பதை படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே ரசிகர்களுக்கு தெரிவித்துவிட்டாலும்கூட படம் எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வடையவைக்கவில்லை. போதாதற்கு மேட் டேமனும் இந்த பாகத்தில் இணைந்துவிட்டதால், மீண்டும் பழைய உற்சாகத்திற்குத் திரும்பியிருக்கிறார்கள் ‘போர்ன்’ பட ரசிகர்கள்.

ஆனால் ஆக்ஷன் காட்சிகளிலும், சேசிங் காட்சிகளிலும் முந்தைய பாகங்களிலிருந்த வேகம் சற்று இப்படத்தில் குறைவுதான். அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும். மேற்படி காட்சிகளில் ‘குளோசப் அப்’ ஷாட்களை அதிகம் பயன்படுத்தியிருப்பதாலோ என்னவோ முழுமையான அனுபவத்தை நம்மால் பெற முடியவில்லை. பின்னணி இசை இந்த பிரச்சனைகளை ஓரளவுக்கு சமாளித்து ஆக்ஷன் காட்சிகளை விறுவிறுப்பாக்கியிருக்கிறது. புதிய கதையோ, யூகிக்க முடியாத விஷங்களே இப்படத்தில் இல்லை என்பதையும் மறுப்பதற்கில்லை.

இதுபோன்ற விஷயங்களில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘ஜேசன் போர்ன்’ இன்னும் பரபரப்பான த்ரில்லராக அமைந்திருக்கும்.

மொத்தத்தில்... ‘பழைய ஃபார்முலாவில் மீண்டும் ஒரு பரபர த்ரில்லர்’ படத்தைப் பார்த்த திருப்தியைத் தருகிறது இந்த ‘ஜேசன் போர்ன்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

;