மக்கள் அரசியல் பேச வேண்டும்! - இயக்குனர் ராஜு முருகன்

‘ஜோக்கரு’க்கு கிடைத்த முதல் வெற்றி! - இயக்குனர் ராஜு முருகன்

கட்டுரை 6-Aug-2016 5:12 PM IST VRC கருத்துக்கள்

‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் ‘குக்கூ’ படப் புகழ் ராஜுமுருகன் இயக்கியுள்ள ‘ஜோக்கர்’ திரைப்படம் வருகிற 12-ஆம் தேதி ரிலீசாகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் இப்படத்தின் கலைஞர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான் எஸ்.ஆர்.பிரபு அனைவரையும் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து கலைஞர்கள் ‘ஜோக்கர்’ குறித்து பேசியதன் விவரம் வருமாறு:

‘ஜோக்கரி’ல் கதாநாயகியாக நடித்திருக்கும் ரம்யா பேசும்போது, ‘‘நான் சிட்டியில் பிறந்து வளர்ந்த் பெண். கிராமத்து மக்களை பற்றியும் அவர்களது வாழ்க்கை பற்றியும் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் இப்படத்தில் அந்த கிராமத்து வாழ்க்கையை அனுபவித்து நடித்தேன். அதற்கு இயக்குனர் ராஜு முருகன் சாருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களின் அரசியலை பேசும் இந்த ‘ஜோக்கர்’ யாரையும் ஏமாற்றாது’’ என்றார்.

இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் காயத்ரி கிருஷ்ணா பேசும்போது, ‘‘எல்லோரும் இப்படம் குறித்து பேசும்போது இது ஒரு அரசியல் படம் என்கிறார்கள்! இது அரசியல் படம் மட்டும் அல்ல! பெண்கள் பற்றிய படமும் கூட! இதில் மக்களுக்கு தேவையான நல்ல மெசேஜும் இருக்கிறது’’ என்றார்.

ஒளிப்பதிவாளர் செழியன் பேசும்போது, ‘‘இது ஒரு எளிமையான படம், நெகிழ்வான் படம்! சம காலத்து அரசியலையும், காதலையும் சொல்லும் படம். எளிமையிலும் பிரம்மாண்டம் இருக்கிறது! அந்த வகையில் அமைந்துள்ள படம் தான் இது. இது போன்ற ஒரு கதையில், படத்தில் பணியாற்றியதை பெருமையாக நினைக்கிறேன்.

இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசும்போது, ‘‘இந்த கதையின் ஜீவனுக்கு நிஜ வாத்திய கருவிகளை பயன்படுத்தி இசை அமைத்தால் தான் நன்றாக இருக்கும் என்று இயந்திர இசை கருவிகளை தவிர்த்து நிஜ இசை கருவிகளையே பயன்படுத்தி இசை அமைத்துள்ளேன். இந்த கதை எல்லா மொழிக்கும் பொருத்தமாக இருக்கும். அதனால் இதனை நான் ஒரு உலக படம் என்று சொல்வேன்’’ என்றார்.

கதாநாயகனாக நடித்துள்ள குரு சோமசுந்தரம் பேசும்போது, ‘‘இயக்குனர் ராஜு முருகன் சார் என்னிடம் வந்து இந்த கதையில் நீங்கள் தான் ஹீரோவாக நடிக்கிறீர்கள்! இந்த கதையை படித்து பாருங்கள் என்று சொல்லி ஸ்கிரிப்டை கொடுத்தார். கதையை படித்து முடித்ததும் அவரிடம், ‘இதில் நான் ஹீரோவா?’ என்று தயக்கத்துடன் கேட்டேன்! அவர், ‘ஆமாம் நீங்கள் தான்’ என்றதும் எனக்கு ஒன்றும் புரியவில்லை! அவர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை நினைத்து பெருமைப்பட்டேன். ராஜு முருகன் சார் சிறந்த ஒரு எழுத்தாளர், படைப்பாளி என்பதை அவரது இந்த ஸ்கிரிப்ட்டை படித்தபோது உணர்ந்து கொண்டேன். இந்த படைப்பு மூலம் அவர் இன்னும் பேசப்படும்’’ என்றார்.

இயக்குனர் ராஜு முருகன் ‘ஜோக்கர்’ குறித்து பேசுகையில் ‘‘முதலில் இந்த ஸ்கிரிப்ட்டை படமாக்க முன் வந்த தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் எஸ்.ஆர்.பிரகாஷ் சார் இருவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அரசியல் பேச தயக்கம் காட்டி வந்த மக்கள் இப்போது சமூக வலைதளங்கள் மூலம் அரசியல் பேசி வருகிறார்கள். இது வரவேற்கத்தக்கது. ஆனால் சினிமாவில் அரசியல் பேசுவதில்லை. இந்த நிலை மாறவேண்டும். அதற்கான ஒரு சிறிய முயற்சியாக தான் இப்படத்தை எடுத்திருக்கிறேன். அரசியல் என்பது மக்கள் பிரச்சனைகளை சொல்வது! தேர்தல் என்பது அரசியல் வாதிகளின் வியாபாரம்! மக்கள் அனைவரும் அரசியல் பேச வேண்டும் என்பதை சொல்ல வரும் படம் தான் இந்த ‘ஜோக்கர்’. அதனை பொருளாதாரா ரீதியாக பாதிக்கப்பட்ட, ஜாதீய ரீதியாக நசுக்கப்பட்ட, இயற்கை வளங்களை சூறையாடப்பட்ட தருமபுரி மாவட்டத்தின் பின்னணியில் சொல்லி இருக்கிறேன். சென்சாரில் இந்த படத்திற்கு பெரும் பிரச்சனைகள் வரும் ரிவைசிங் கமிட்டிக்கு போக வேண்டி வரும் என்றெல்லாம் ஒரு பயம் இருந்து வந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து, ‘யாரையும் எந்த கட்சியையும் குறிப்பிடாமல் மக்கள் பிரச்சனைகளை மட்டும் முன் வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறீர்கள்! ‘நீட் ஃபிலிம்’ என்று சொல்லி படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் கொடுத்ததே ‘ஜோக்கரு’க்கு கிடைத்த முதல் வெற்றியாகும்’’ என்றார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கைதி ட்ரைலர்


;