நமது - விமர்சனம்

நமது... நம்மை சோதிக்கிறது!

விமர்சனம் 6-Aug-2016 11:42 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Chandrasekhar Yeleti
Production : Rajini Korappatti
Starring : Mohanlal, Gautami
Music : Mahesh Shankar
Cinematography : Rahul Srivastav

தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளில் ஒரே தினம் வெளியாகியிருக்கும் ‘நமது’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவர் மோகன் லால். இவரது மனைவி கௌதமி, இல்லத்தரசி! இவர்களது மகன் விஷ்வாந்த் கல்லூரியிலும், மகள் ரைனா ராவ் பள்ளியிலும் படிக்கிறார்கள். இந்த நான்கு கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு கதைகள்! தனித் தனியாக பயணிக்கும் இந்த 4 கதைகள் ஒரு புள்ளியில் முடிவதுதான் ‘நமது’ படம்!

படம் பற்றிய அலசல்

தனக்கு புரமோஷன் கிடைக்க வேண்டும் என்பதற்காக மோகன் லால் செய்யும் ஒரு காரியம் பெரும் வினையாய் முடிகிறது. இதனால் ஏற்படும் சம்பவங்களை விறுவிறுப்பான, பரபரப்பான காட்சிகளுடன் படமாக்கிய இயக்குனர் சந்திரசேகர் ஏலட்டி, விஷ்வாந்த், ஹனிஷா ஆம்ரோஷ் சம்பந்தப்பட்ட காதலால் வரும் பிரச்சனைகளை, குப்பத்து சிறுவனை நேசிக்கும் ரைனா ராவுக்கு வரும் பிரச்சனைகளை, குடும்பத்தை விட்டு பிரிய மனமில்லாமல் சிங்கப்பூர் வேலைக்கு கிளம்பும் கௌதமியின் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக சொல்லத் தவறிவிட்டார். அதைப்போல லாஜிக் விஷயங்களிலும் சரியாக கவனம் செலுத்தவில்லை. இதனால் மெதுவாக நகரும் படம் நிறைய இடங்களில் ரசிகர்களை சோதிக்கிறது. ஆனால் நான்கு பேர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் ஒரு புள்ளியில் முடியும் விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமேக்ஸ் காட்சி பாராட்டும்படி அமைந்துள்ளது. இதுபோன்ற படங்களில் படத்தொகுப்பு சிறப்பாக இருக்க வேண்டும்! ஆனால் படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக எடிட்டிங் பணியும், இசையும் அமையவில்லை. ஆனால் ராகுல் ஸ்ரீவத்சவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

முந்தைய தமிழ்ப்படங்களை ஒப்பிடுகையில், இப்படத்தில் மோகன் லாலின் டப்பிங்கில் மலையாள வாடை அதிகம் அடிக்கிறது. மற்றபடி அந்த கதாபாத்திரமாக வாழ்ந்துள்ளார் மோகன் லால்! ‘பாபநாசம்’ படத்தை தொடர்ந்து இப்படத்திலும் கௌதமி தனது இயல்பான நடிப்பால் கவர்கிறார். இளம் காதல் ஜோடியாக வரும் விஷ்வாந்த், ஹனிஷா ஆம்ரோஷ், குழந்தை நட்சத்திரமாக வரும் ரைனா ராவ், கௌதமியின் தோழியாக வரும் ஊர்வசி மற்றும் நாசர், சந்திரமோகன் கொல்லப்புடி மாருதிராவ் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. மோகன்லால், கௌதமி முதலானோரின் சிறந்த பங்களிப்பு
2. கிளைமேக்ஸ்

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் திரைக்கதை
2. பொழுதுபோக்கு விஷயங்கள் இல்லாதது
3. இசை, படத்தொகுப்பு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்

மொத்தத்தில்...

இதே போன்ற திரைக்கதை யுக்தியுடன் ஏற்கெனவே நாம் சில படங்களை பார்த்துவிட்டதாலும், விறுவிறுப்பே இல்லாத காட்சிப்படுத்தலாலும் இப்படம் ரசிகர்ளின் பொறுமையே சோதிக்கவே செய்கிறது. ‘த்ரிஷ்யம்’ நாயகனும், ‘பாபநாசம்’ நாயகியும் இணைந்து நடித்துள்ள ‘நமது’ சற்று ஏமாற்றமே!

ஒரு வரி பஞ்ச் : நமது... நம்மை சோதிக்கிறது!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;