திருநாள் - விமர்சனம்

ஏமாற்றம்!

விமர்சனம் 5-Aug-2016 4:18 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : P. S. Ramnath
Production : Kodhandapani Films
Starring : Jiiva, Nayanthara
Music : Srikanth Deva
Cinematography : Mahesh Muthuswami
Editing : V. T. Vijayan, T. S. Jay

யான், போக்கிரி ராஜா என வரிசையாக இரண்டு படங்கள் சறுக்கிய நிலையில் ‘திருநாள்’ கை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார் ஜீவா. இன்று வெளியாகியிருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது?

கதைக்களம்

அனாதையான ஜீவா, சிறு வயது முதல் ரௌடி ஷரத் லோஹிதாஷ்வாவின் வலதுகரமாக இருக்கிறார். ஷரத்தின் அண்ணன் ஜோ மல்லூரியின் மகள் நயன்தாராவை பணப்பிரச்சனை ஒன்றில் ரௌடி கும்பல் ஒன்று கடத்துகிறது. ஒற்றை ஆளாகச் சென்று நயன்தாராவை மீட்டு வரும் ஜீவா, நயனை நீண்டநாட்களாக ஒருதலையாக காதலித்து வருவதாகக் கூறுகிறார். நயனுக்கும் ஜீவா மேல் காதல் மலர்கிறது. இந்நிலையில், நயன்தாராவை வேறொருத்தருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் ஏற்பாடு செய்கிறார்கள். பெண் பார்க்கும் படலம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில், ஜீவாவும், நயன்தாராவும் காதலிப்பது ஜோ மல்லூரிக்கும், அவரின் தம்பி ஷரத் லோஹிதாஷ்வாவிற்கும் தெரிய வருகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஜீவாவின் கதி என்னவாகிறது? நயன்தாராவை கைபிடிக்கிறாரா இல்லையா? ரௌடியாக இருக்கும் ஜீவா திருந்துகிறாரா, இல்லையா? என்பதே ‘திருநாள்’.

படம் பற்றிய அலசல்

‘காதலால் திருந்தும் ரௌடி’ என்ற அரதப்பழசான ஒன்லைன் ஒன்றை கையிலெடுத்து, அதை கிராமத்துப் பின்னணியில் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.ராம்நாத். கதை, திரைக்கதை, காட்சிஅமைப்புகள் என எதிலுமே புதுமையும் இல்லை, சுவாரஸ்யமும் இல்லை. காமெடி, பாடல்கள் என பொழுதுபோக்கு விஷயங்களும் கைகொடுக்கவில்லை. ஜீவா, நயன்தாரா என ஒரு நல்ல கூட்டணி அமைந்திருந்தும், அதை சரியாகப் பயன்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குனர். படத்தின் ஒரே ஆறுதலான விஷயம் கிராமத்துப் பின்னணியில் படத்தை உருவாக்கியிருப்பதும், ஒளிப்பதிவும்தான்.

நடிகர்களின் பங்களிப்பு

‘பிளேடு’ என்ற ரௌடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என எல்லா ஏரியாவிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ஜீவா. முழுக்க முழுக்க பாவடை, தாவணி, சேலை என நயன்தாராவை கிராமத்துப் பெண்ணாக தரிசிக்கும் பாக்கியம் ரசிகர்களுக்கு இப்படத்தில் கிடைத்திருக்கிறது. நடிப்பிலும் அதே துறு துறு நயன்தாரா, மனதை அள்ளுகிறார். ஆனால், அவரின் முந்தையை படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. ‘பாண்டிய நாடு’ வில்லன் ஷரத் லோஹிதாஷ்வா இப்படத்திலும் படம் முழுக்க வலம் வருகிறார். அவரின் உருட்டல், மிரட்டலான நடிப்பு படத்திற்கு பலம். போலீஸ் அதிகாரியாக வரும் ‘நீயா நானா’ கோபிநாத் இரண்டு காட்சிகளில் தலைகாட்டி மறைகிறார். ஜோ மல்லூரி கிடைத்த காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். கருணாஸ், ‘முண்டாசுப்பட்டி’ ராமதாஸ், மதுமிதா ஆகியோர் வீணடிக்கப்பட்டுள்ளனர்.

பலம்

1. ஜீவா, நயன்தாரா
2. ஒளிப்பதிவு

பலவீனம்

கதை, திரைக்கதை, பாடல்கள் என படத்தின் முக்கிய அம்சங்கள் அனைத்துமே ‘திருநாளி’ன் பலவீனங்களாக அமைந்துவிட்டன

மொத்தத்தில்...

காலம் காலமாக சொல்லப்பட்ட கதை என்றாலும், ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருந்தால் ‘திருநாள்’ ரசனைக்குரிய படமாக அமைந்திருக்கும். ஆனால், அதை செய்யத் தவறியிருப்பதால், பெரிய பாதிப்பு எதையும் இப்படம் ஏற்படுத்தவில்லை.

ஒரு வரி பஞ்ச் : ஏமாற்றம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;