நம்மூருக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல ஹாலிவுட் என நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் ரிலீஸாகும் தமிழ் பேய்ப்படங்களுக்கு இணையாக ஹாலிவுட் ஹாரர் படங்களும் களமிறங்கி வருகின்றன. அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’. 1984 மற்றும் 1989ல் இரண்டு பாகங்கள் வெளிவந்த ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ படத்தின் ரீமேக்தான் இது. முந்தைய பாகங்களுக்குக் கிடைத்த வரவேற்பு இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறதா?
பேய் ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அது இருப்பதை உறுதிசெய்து, அதனை வேட்டையாடும் நான்கு பெண்களைப் பற்றிய கதையைத்தான் கோஸ்ட்பஸ்டரில் படமாக்கியிருக்கிறார்கள்.
அமானுஷ்யங்களைப் பற்றி ஆராய்வதில் அதிக ஆர்வம் கொண்ட எரின் கில்பர்ட் (கிறிஸ்டன் விக்), அப்பி யாட்ஸ் (மெலிஸா மெக்கார்த்தி), நியூக்ளியர் இஞ்சினியரான ஜில்லியன் ஹாட்ஸ்மேன் (கேத் மெக்கின்னன்) ஆகிய மூவரும் நவீன தொழில்நுட்பங்களின் மூலமாக நியூயார்க்கில் பேஸ்கள் இருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதை அரசுக்கு தெரியப்படுத்தி, மேற்கண்ட பேய்களை தங்களால் கட்டுப்படுத்த முடியும் என்பதை நிரூபிக்கும் வேலைகளில் மூவரும் இறங்குகிறார்கள். பேயை நேரில் பார்த்து, அதனால் பீதியடைந்த பேட்டி டோலனும் (லெஸ்லி ஜோன்ஸ்) இந்த மூவர் கூட்டணியில் இணைகிறார். இந்த கூட்டணிக்கு ஒரு உதவியாளர் ஒருவர் தேவைப்படவே அதில் கெவின் பெக்மேனும் (க்ரிஸ் ஹெம்ஸ்வெர்த்) வேலைக்கு அமர்த்தப்படுகிறார்.
ஜில்லியனின் அற்புதமான நியூக்ளியர் கருவிகளின் மூலம் பேய் இருப்பதைக் கண்டுபிடித்து, அதனை சாமர்த்தியமாக பெட்டியில் அடைத்து, அதனை வீடியோவாக்கி யு ட்யூப்பில் பதிவிடுகிறது ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ கூட்டணி. இதனைப் பார்த்து பொதுமக்கள் பலரும் மிரளவே, இவர்கள் நால்வரும் போலிகள் என பொதுமக்களை நம்ப வைப்பதற்காக அந்த நால்வரையும் கைது செய்கிறது அரசு. அதேநேரம் வில்லன் ஒருவன், நியூயார்க்கில் அமைதியாக இருக்கும் பேய்களையெல்லாம் தொழில்நுட்பத்தின் வாயிலாக வெகுண்டெழச் செய்ய, 1000த்திற்கும் மேற்பட்ட பேய்கள் கூட்டம் நியூயார்க்கிலுள்ள டைம் ஸ்கொயரில் அட்டூழியங்களை ஆரம்பிக்கின்றன. இந்த பேய்களையெல்லாம் ‘கோஸ்ட்பஸ்டர்ஸ்’ கூட்டணி எப்படி அடக்கி அழிக்கிறது என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பதே இப்படம்.
பேய்ப்படம் என்றாலே ‘லாஜிக்’ சங்கதிகள் காணாமல் போய்விடும், அதிலும் இப்படம் காமெடி ஹாரர் படம் என்பதால் லாஜிக்கையெல்லாம் பார்த்தால் படத்தை 10 நிமிடம்கூட ரசிக்க முடியாது. பிய்ந்து தொங்கும் சதை, கோரமான முகம், ரத்தம் கசியும் வாய் என கொடூரமான பேய்களை தவிர்த்துவிட்டு, இப்படத்தின் பேய்கள் அனைத்தையும் வித்தியாசமான நியான் லைட் அனிமேஷன்கள் மூலம் காட்டியிருப்பது பாரட்டத்தக்கது. கதையும், திரைக்கதையும் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், பேய்களை கட்டுப்படுத்தும் காட்சிகளில் அசரடித்திருக்கிறார்கள். குறிப்பாக, பேய்களை விரட்டுவதற்காக படத்தில் பயன்படுத்தியிருக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகள் சுவாரஸ்யமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதோடு இப்படம் 3டியிலும் வெளிவந்திருக்கிறது என்பதால் கூடுதல் உற்சாகத்தைத் தந்திருக்கிறது. கிராபிக்ஸ் வல்லுனர்களின் கைவண்ணத்தில் பேய்கள் ஆங்காங்கே ரசிகர்களை பயமுறுத்தவும், கிச்சு கிச்சு மூட்டவும் செய்கின்றன.
ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் படம் ஆங்காங்கே கொஞ்சம் போரடிக்கவே செய்கிறது. இன்னும் சுவாரஸ்யமான திரைக்கதையை உருவாக்கியிருந்தால் படம் பெரிய அளவில் கவனம் பெற்றிருக்கும். முந்தைய பாகங்களை ஒப்பிடுகையில் இப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமானதாகவே அமைந்துவிட்டது. மற்றபடி பேய்ப்பட ரசிகர்கள் இப்படத்தையும் கண்டுகளிக்கலாம்.
(116 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படம், சுமார், 144 million America dollars செலவில் உருவாக்கப்பட்டு உள்ளது. Theodore Shapario இசை அமைத்துள்ளார். Robert Yeoman ஒளிப்பதிவு செய்துள்ளார். Sony Pictures -ன் உருவாக்கம் இப்படம்.)
பேய் படங்களை வரிசையாக களமிறக்குவதில், கோலிவுட்டிற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல ஹாலிவுட் என வரிந்துகட்டிக்...
David F. Sandberg உருவாக்கிய குறும்படமான 'Lights Out'ஐ தழுவி, திரையில் வடிககப்பட்டுள்ள ஆவிகளை பற்றி...
ஹாலிவுட்டில் ஹாரர் படங்களின் ஆதிக்கம் என்பது எப்போதுமே அதிகமாக இருக்கும். ஆனால், அங்கு வெளிவரும்...