கபாலி : சாதனை படமா? சர்ச்சைப் படைப்பா?

கபாலி : சாதனை படமா? சர்ச்சைப் படைப்பா?

கட்டுரை 27-Jul-2016 1:50 PM IST Top 10 கருத்துக்கள்

பொதுவாக சூப்பர்ஸ்டார் ரஜினியின் படங்களை எளிதாக வகை பிரிக்கலாம். பெரும்பாலான படங்கள் சூப்பர்ஹிட் வெற்றிப்படமாக இருக்கும். ஒருசில படங்கள் வணிகரீதியிலான தோல்விப்படங்களாக இருக்கும். இந்த இரண்டு எல்லைகளையும் தாண்டி, ரஜினி படம் எப்போதும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டதே இல்லை. காரணம், ரஜினி படங்களின் கதைக்களம் அப்படி... காமெடி, சண்டை, பஞ்ச் வசனங்களை உள்ளடக்கிய ஜனரஞ்சகமான படைப்பாகவே அவை பெரும்பாலும் இருக்கும். ஆனால், முதல்முறையாக அவரின் ‘கபாலி’ படம் இன்று உலகளவில் விவாதிக்கப்படும் ஒரு பொருளாக கடந்த இரண்டு வார காலமாக சமூக வலைதளங்களையும், டீக்கடை பெஞ்ச்சுகளையும் ஆக்ரமித்திருக்கிறது.

படம் வெளிவருவதற்கு முன்பு இருந்த ‘கபாலி’ பற்றி எண்ணங்களும், விவாதங்களும், படம் வெளிவந்த பிறகு வெவ்வேறு திசைகளை நோக்கிப் பயணமாகிக் கொண்டிருக்கிறது. விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டது, கபாலிக்காக தங்க, வெள்ளி நாணயங்கள் வௌயிடப்பட்டது, இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு படம் உலகளவில் 30 நாடுகளுக்கும் மேலாக ரிலீஸ் செய்யப்பட்டது, முதல்முறையாக இந்தியப்படம் ஒன்று மலாய் மொழி பேசியது, கபாலி ரிலீஸுக்காக தனியார் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டது, ரிலீஸுக்கு முன்பே 200 கோடி வியாபாரம் செய்யப்பட்டது என ரிலீஸுக்கு முந்தைய செய்திகள் அனைத்தும் ‘கபாலி’யின் புகழ்பாடுவதாகவே அமைந்திருந்தன.

ஆனால், படத்தின் முன்பதிவு தொடங்கியதிலிருந்தே ‘கபாலி’ ஒரு சர்ச்சைப் பொருளாகவே மாறியதை இங்கே யாரும் மறுப்பதற்கில்லை. அதற்கு முதல் முக்கிய காரணம்... ‘கபாலி’யின் டிக்கெட் விலை. ரஜினிக்கிருக்கும் லட்சகணக்கான ரசிகர்களில் பெரும்பாலானோர் சாதாரண நடுத்தர மக்களே. அதிலும் பொருளாதார ரீதியாக கடைக்கோடியில் இருக்கும் ரசிகனே ரஜினி படத்தின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் இருப்பவன். அப்படிப்பட்ட ரசிகனை, ‘கபாலி’யின் வியாபார யுக்திகளும், கார்ப்ரேட்காரர்களின் ‘பல்க் புக்கிங்’ கலாச்சாரங்களும் தியேட்டர் பக்கமாக எட்டிப் பார்க்க விடாத அளவுக்கு செய்துவிட்டதுதான் வேதனை. ரஜினிக்காக இரவு முழுவதும் கஷ்டப்பட்டு வைத்த பேனர், கட்அவுட்டுகளை டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ரஜினி ரசிகர்கள் அகற்றிய சம்பவங்களும் சென்னையின் சில திரையரங்குகளில் முதல்முறையாக நடந்தேறியது நிச்சயம் ‘கபாலி’க்காகத்தான் இருக்க முடியும். முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் விலை 1000 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை சர்வசாதாரணமாக விற்கப்பட்டது. ஒருசில தியேட்டர்கள் ஒருபடி மேலே போய் முதல் 3 நாட்களுக்கான டிக்கெட் விலையை ஐநூறு ரூபாய் என ஆன்லைன் முன்பதிவிலேயே பகிரங்கமாக அறிவித்த கொடுமைகளும் நடந்தேறின. இது அத்தனைக்கும் பின்னாடி பலவித காரணங்கள் இருப்பதாக கூறிக்கொண்டாலும், பாதிக்கப்பட்டதென்னவோ நீண்ட நெடுங்காலமாக ரஜினியின் ரசிகர்களாய் இருந்து வரும் சாதாரண நடுத்தர வர்க்கமே.

ஒருவழியாக வேறு வழியின்றி, தியேட்டர்கள் சொன்ன விலைக்கு டிக்கெட்டை வாங்கி உள்ளே சென்று அமர்ந்து ‘கபாலி’யையும் தரிசித்தார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கே பலருக்கும் மிஞ்சியது மிகப்பெரிய ஏமாற்றமே! காரணம்... காட்சிக்கு காட்சி விசிலடிக்க வேண்டும், ரஜினியின் ஒவ்வொரு பஞ்சிற்கும் கைதட்டல்களை கொட்டித் தீர்த்துவிடவேண்டும், பாடல்களுக்கு எழுந்து நின்று ஆடவேண்டும் என உற்சாகமாக உள்ளே வந்த ரசிகர்களுக்கு ‘கபாலி’யின் தரிசனம் வேறு மாதிரியாக அமைந்துவிட்டது. அது இயக்குனரின் தவறோ அல்லது ரஜினியின் தவறோ அல்ல. முழுக்க முழுக்க ‘கபாலி’ சந்தைப்படுத்தலில் நடந்த விபரீதம்தான் ரசிகர்களின் ஏமாற்றத்திற்குக் காரணம். எமோஷலான ஒரு கேங்ஸ்டர் படத்தை, பாட்ஷா படத்தின் ரேஞ்சுக்கு பில்டப் செய்து வெளிவந்த ‘கபாலி’ படத்தின் டீஸர்தான் ‘கபாலி’ பற்றிய மாய தோற்றத்தை ஏற்படுத்தியது. அதோடு, ‘நெருப்புடா...’ பாடல் டீஸரும் அதையே வழிமொழிந்தது. இந்த இரண்டு வீடியோக்களைத் தவிர ‘கபாலி’யில் இருக்கும் அழகான சென்டிமென்ட் காட்சிகளைப் பற்றியோ அல்லது ரஜினியின் அற்புதமான நடிப்பைப் பற்றிய வீடியோக்களோ எதுவுமே வெளியிடப்படவில்லை. இயக்குனர் ரஞ்சித்தைத் தவிர, படம் சம்பந்தப்பட்ட மற்றவர்கள் அனைவருமே ‘இது பாட்ஷா பார்ட் 2’ என்ற ரேஞ்சுக்குதான் விளம்பரம் செய்தார்கள். அதன் விளைவே முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகனின் குமுறல்கள். ஒருபுறம்... ‘இது ஒரு மொக்கை படம்’ என மீம்ஸ்கள் பறக்க, இன்னொருபுறம்... ‘ரஜினியின் நடிப்பை மீட்டெடுத்த ரஞ்சித்’ என புகழ்மாலைகளும் வந்து விழுந்தன.

இது ஒரு முழுமையான ரஜினி படமாகவும் இல்லை, முழுமையான ரஞ்சித் படமாகவும் இல்லை என்றே பெரும்பாலான விமர்சனங்கள் முழங்கின. விமர்சனங்கள் இருவேறாக இருந்தபோதும், ‘கபாலி’ வணிகரீதியாக என்னென்ன சாதனைகளைச் செய்யும் என எதிர்பார்த்தார்களோ அதை எதையுமே செய்யத்தவறவில்லை. முதல் 3 நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக உலகளவில் வசூல் செய்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சாதனையை முறியடிக்க வேண்டுமென்றால், நிச்சயம் அது இன்னொரு ரஜினி படத்தால்தான் முடியும் என்பது வேறு விஷயம்.

முதல் நாளில் எழும் எதிர்மறை விமர்சனங்கள் ஒரு படத்தின் அடுத்தடுத்த நாட்களின் வியாபாரத்தையே பெருமளவில் பாதிக்கும் என்பதே தமிழ் சினிமாவின் வரலாறு. ஆனால், அதையும் உடைத்தெறிந்தது கபாலி. வசூல் குறையவே இல்லை என்பதல்ல ஆச்சரியம்... முதல்நாளில் எழுந்த எதிர்மறை விமர்சனங்களை கண்டனம் செய்து மறுநாள் படம் பார்த்த ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கொந்தளித்தார்கள். இதற்கு முக்கிய காரணம், படம் பற்றிய எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், குறிப்பாக ‘இது ஒரு சென்டிமென்ட் கேங்ஸ்டர் படம்... ரஜினியின் நடிப்புக்குத் தீனிபோடும் கேரக்டர்’ என்பதைத் தெரிந்து கொண்டு பார்த்த ரசிகர்களை ‘கபாலி’ ஏமாற்றவில்லை என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதைத்தான் நாம் முன்பே குறிப்பிட்டோம்... ‘கபாலி’ சந்தைப்படுத்தலில் நடந்த விபரீதம்தான் ஏமாற்றத்திற்குக் காரணம் என!

மேற்கண்ட விவாதங்கள் அனைத்தும் கபாலி படத்தின் சுவாரஸ்ய விஷயங்களைச் சார்ந்து அமைந்தவை. அதுவரை எந்த பிரச்சனையும் இல்லை... ஆனால், இப்போது ‘கபாலி’ மீது புதிதாக சாதிச் சாயம் ஒன்றை பூச முயல்கின்றன சமூக வலைதள விவாதங்கள் என்பதுதான் கொடுமை. ஒரு இயக்குனராக தான் சார்ந்த சமூகத்திற்கு தன் படைப்பின் மூலம் நன்மை செய்யக்கிடைக்கும் சின்னஞ்சிறு வாய்ப்புகளை தவற விடாமல் ரஞ்சித் பயன்படுத்திக் கொள்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அதை அவரே பேட்டிகளிலும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதற்காக அவர் ‘ரஜினியை பயன்படுத்தி சாதி வெறியைத் தூண்டுகிறார்’ என்கிற ரேஞ்சுக்கு சிலர் எழுதி வருவது நிச்சயம் கலைத்துறைக்கு நல்லதல்ல. இப்போது இந்த விவாதங்கள்தான் சமூக வலைதளங்களில் பரவலாக ஆக்கிரமிப்பு செய்துள்ளன. விவாதங்கள் நல்லவைதான்.... ஆனால், தேவையில்லாத விஷயங்களை கற்பனை செய்தும், பூதாகரமாக்கியும் செய்யப்படும் விதண்டாவாதங்களாக அவை மாறாதவரை. ‘கபாலி’யின் பாடல்கள் வெளிவந்தபோதும் இதுபோன்ற சர்ச்சைகள் தோன்றி, பின்னர் கொஞ்சம் அமைதியானது. இப்போது, மீண்டும் இதே விஷயத்தைக் கையிலெடுத்து சிலர் குளிர்காய நினைப்பதாகவே ‘கபாலி’யின் ஆதரவாளர்கள் குமுறுகிறார்கள். ஒரு கலைஞனின் மீது சாதி முத்திரை குத்தி, அவன் திறமையை மழுங்கடிக்காதீர்கள் என ரஞ்சித்திற்கு ஆதரவு கரங்களும் நீண்டுகொண்டுதான் இருக்கின்றன. அதோடு, சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் இதுபற்றிய தனது தெளிவான நிலைப்பாடையும் ரஞ்சித் விளக்கியுள்ளார். எனவே, இந்தப் பிரச்சனைக்கு இதோடு முற்றுப்புள்ளி வைப்பதே கலைத்துறையின் ஆரோக்கியத்திற்கு நல்லது. சாதனை படைக்கும் என எதிர்பார்த்த ஒரு படத்தை, சாதனை படைக்க வைத்ததோடு மட்டுமல்லாமல் சில சர்ச்சைகளையும் ஏற்படுத்திய படைப்பாகவே மாற்றிய பெருமை நம் தமிழ்கூறும் சமூகவலைதள வாசிகளையே சேரும்.

எது எப்படியோ.... நீண்டநாட்களாக சொல்லப்படும் ஒரு ‘க்ளிஷே’ டயலாக்கையே கபாலிக்காகவும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது... ‘சினிமாவை சினிமாவாகப் பாருங்கள்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;