கபாலி - விமர்சனம்

ஸ்வோலாக பயணிக்கும் எமோஷனல் டிராமா!

விமர்சனம் 22-Jul-2016 11:03 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Pa. Ranjith
Production : V Creations (Kalaipuli S. Thanu)
Starring : Rajinikanth, Winston Chao, Radhika Apte, Dhansika, Kishore
Music : Santhosh Narayanan
Cinematography : G. Murali
Editing : Praveen K.L

ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ‘கபாலி’ தரிசனம் நேற்று இரவு முதல் உலகமெங்கும் துவங்கிவிட்டது. தமிழ்நாட்டில் இன்று அதிகாலை முதல் தியேட்டர்கள் திருவிழாக்கோலத்தில் களைகட்டிக் கொண்டிருக்கின்றன. இதுவரை எந்த ஒரு இந்திய சினிமாவிற்கும் இத்தனை பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. இப்படி எக்கச்சக்கமான எதிர்பார்ப்புடன் வெளிவந்திருக்கும் ‘கபாலி’ அதனை முழுமையாக பூர்த்தி செய்துள்ளதா?

கதைக்களம்

25 வருடங்களாக மலேசிய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கபாலி (ரஜினிகாந்த்), தண்டனை காலம் முடிந்து மீண்டும் சிட்டிக்குள் வருகிறார். கபாலி யார்? அவர் எதற்காக ஜெயிலுக்கு செல்கிறார்? என்பதற்கான ஃப்ளாஷ்பேக் இடைவேளை வரை நீள்கிறது. அதன் பிறகு, தமிழ்நாட்டிலிருக்கும் தன் மனைவி குமுதவல்லியை (ராதிகா ஆப்தே) தேடிப்பிடித்து, மகள் தன்ஷிகாவையும் ஒன்றுசேர்த்து மீண்டும் மலேசியாவிற்கே வந்து புது வாழ்க்கையைத் துவங்க நினைக்கிறார் கபாலி. இந்நிலையில், கபாலிக்கும் அவரின் பழைய எதிரிகளுக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வருகிறது. அதை எப்படி உடைத்தெறிந்து தான் எப்போதும் ‘டான்’தான் என்பதை நிரூபிக்கிறார் கபாலி.

படம் பற்றிய அலசல்

‘வழக்கமான மாஸ் மசாலா பட ரஜினியையே ‘கபாலி’யிலும் காட்ட வேண்டாம்’ என்ற ரஞ்சித்தின் முயற்சியே சூப்பர்ஸ்டாரின் இந்த புதுவிதமான ‘கபாலி’ அவதாரம். எளிமையாகச் சொல்லவேண்டுமென்றால், ரஞ்சித்தின் ஒரு க்ளாசிக் படத்தில் ரஜினியைப் பொருத்திப் பார்த்தால் எப்படியிருக்குமே அப்படிதான் வந்திருக்கிறது இந்த ‘கபாலி’. ஆனாலும், படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளில் சூப்பர்ஸ்டாரை எப்படிப் பார்க்க வேண்டும் என ரஜினி ரசிகர்கள் ஆசைப்பட்டார்களோ அதை அற்புதமாகப் பிரதிபலித்திருக்கிறார் ரஞ்சித். ஆனால், அதற்குப் பிறகான திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வு காரணமாக காட்சிகள் ஏற்ற, இறக்கத்தையே சந்திக்கின்றன.

இது ஒரு ‘டிராமா’ வகை படம் என்பதால் திரைக்கதையில் பெரிய வேகத்தை எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும்கூட ‘கேங்ஸ்டர் பாணி’ கதையில் எந்த புதுமையும் இல்லாததுதான் சோகம். எமோஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென இயக்குனர் நினைத்ததாலோ என்னவோ ‘பாட்ஷா’ ஸ்டைல் படத்தை எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. ‘மாயநதி...’ பாடல் வழியே, ஒரு நீண்டகால அன்னியோன்ய உறவை அற்புதமாக காட்சிகள் வழியே பிரதிபலித்திருக்கிறார் ரஞ்சித்.

‘கருப்பு பவர்...’, ‘ரொம்ப கெட்டவன் இந்த கபாலி’ போன்ற வசனங்களை ரஜினி திரையில் உச்சரித்தபோது மொத்த கூட்டமும் ஆர்ப்பரித்தது. சண்டைக்காட்சிகளைக்கூட ஓவர் மாஸாக உருவாக்காமல் ‘ஸ்மார்ட்டாக’வே பிளே செய்திருக்கிறார்கள். முரளியின் ஒளிப்பதிவு படத்தின் தன்மைக்கேற்ற கலரையும், தரத்தையும் பிரதிபலித்து பாராட்டுக்களை குவித்துள்ளது. ஆங்காங்கே தொய்வடையும் காட்சிகளைக்கூட சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை தூக்கி நிறுத்தியிருக்கிறது. பாடல்களை இன்னும் கொஞ்சம் முழுமையாகப் பயன்படுத்தியிருக்கலாம். பிரவீனின் எடிட்டிங்கும் படத்திற்கு பலமே.

அதிகப்படியான கேரக்டர்கள் வந்துபோவது, நிறைய கிளைக்கதைகள் மெயின் கதைக்குள் நுழைக்கப்பட்டிருப்பது போன்ற விஷயங்கள் படத்திற்கு பின்னடைவாக அமைந்துவிட்டன. அதேபோல் க்ளைமேக்ஸும் ஒரு நிறைவில்லாத தன்மையையும், ஏமாற்றத்தையுமே ஏற்படுத்துவதுபோல் அமைந்துவிட்டது.

நடிகர்களின் பங்களிப்பு

‘ஸ்கிரீன் பிரசென்ஸ்’ என்றொரு வார்த்தையே ரஜினிக்காக கண்டுபிடிக்கப்பட்டதாகத்தான இருக்க வேண்டும். அந்தளவுக்கு அவர் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் பாடி லாங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலும் அசத்தியிருக்கிறார். வெறும் ‘மாஸ்’ காட்டுவதோடு நின்றுவிடாமல், தனக்குள் இருக்கும் ‘கிளாசிக்’ நடிகரையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார் சூப்பர்ஸ்டார். எமோஷனல் காட்சிகளில் ரஜினியின் கண்களே பல கதைகள் சொல்கின்றன. அவருக்கும் ராதிகா ஆப்தேவுக்குமான காட்சிகள் அத்தனை அழகாக திரையில் வெளிப்பட்டிருப்பதற்குக் காரணமே இருவரின் நடிப்பாற்றல்தான். ரஜினிக்கு அடுத்தபடியாக படத்தில் ஸ்கோர் செய்திருப்பவர் சந்தேகமேயில்லாமல் ராதிகா ஆப்தேதான். நாசர் ஒரு சில காட்சிகளில் வந்துபோனாலும், படத்தின் முக்கிய காட்சிகளை நகர்த்தியிருக்கிறார். தன்ஷிகா, ரித்திகா ஆகியோரின் என்ட்ரி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும். தனக்குக் கிடைத்த காட்சிகளில் அற்புதமாக நடித்திருக்கிறார் கிஷோர். ஆனால், படத்தின் மெயின் வில்லனான வின்ஸ்டன் சாவ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இவர்களோடு அட்டக்கத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் உட்பட இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் திரையில் தோன்றி மறைகிறார்கள்.

பலம்

1. சூப்பர்ஸ்டாரின் மாஸ் மற்றும் கிளாஸ் அப்பீல்
2. நடிகர்களின் பங்களிப்பு (குறிப்பாக ராதிகா ஆப்தே)
3. ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

பலவீனம்

1. திரைக்கதையில் திணிக்கப்பட்ட கிளைக்கதைகள் படத்தின் வேகத்தை வெகுவாக குறைத்திருப்பது
2. இது ஒரு மாஸ் படம் என்ற ரீதியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் எண்ணத்தில் புகுத்தியிருக்கும் விளம்பர யுக்தி

மொத்தத்தில்...

ரஜினி படமாக இருந்தால் அது நிச்சயம் மாஸாக இருக்கும் என்ற நினைப்பிலும், ரஞ்சித்தின் ஸ்பெஷலே கிளாஸ்தான் என்ற நினைப்பிலும் ‘கபாலி’க்கு வந்தவர்களுக்கு சற்று ஏமாற்றமாகவே இருக்கும். காரணம், இது ஒரு கேங்ஸ்டர் கதையாக இருந்தாலும், அதில் நாயகனின் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட ‘எமோஷன்’களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து கதையை உருவாக்கியிருக்கிறார் ரஞ்சித். அதனால், இது ஒரு முழுமையான ரஞ்சித் படமாகவோ, அல்லது சூப்பர்ஸ்டார் ரசிகர்களுக்கான ரஜினி படமாகவோ அமையவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமால், ஒரு அழகான கேங்ஸ்டர் டிராமாவை ரசிக்கும் மனநிலையுடன் ‘கபாலி’க்கு வருபவர்களை நிச்சயம் படம் ஏமாற்றாது.

ஒரு வரி பஞ்ச் : ஸ்வோலாக பயணிக்கும் எமோஷனல் டிராமா!

ரேட்டிங் : 6/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆளுக்கு பாதி 50-50 - டீசர்


;