ஐஸ் ஏஜ் : கொலிஸன் கோர்ஸ் - ஹாலிவுட் பட விமர்சனம்

சிக்கலான கதையாக இருந்தாலும், வழக்கம்போல் சிரிக்க வைக்கத் தவறவில்லை

விமர்சனம் 16-Jul-2016 12:08 PM IST Top 10 கருத்துக்கள்

ஏற்கெனவே 4 பாகங்கள் வெளிவந்து உலகளவில் அனைத்துத்தரப்பு ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்ற ‘ஐஸ் ஏஜ்’ அனிமேசன் படத்தின் 5ஆம் பாகமான ‘ஐஸ் ஏஜ் : கொலிஸன் கோர்ஸ்’ தற்போது இந்தியாவில் வெளியாகியிருக்கிறது. வரும் 22ஆம் தேதி ‘கபாலி’ ரிலீஸ் காரணமாக, அமெரிக்க வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக இந்தியாவில் களமிறங்கியிருக்கும் ‘ஐஸ் ஏஜ் 5’ ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும்?

‘ஐஸ் ஏஜ்’ சீரிஸின் ஒன் லைன் ரொம்பவும் எளிமையானதுதான். பனிக்கட்டி காலத்தில் நடைபெறும் இந்த கதைக்களத்தில், தாங்கள் வாழும் உலகம் ஏதோ ஒரு காரணத்தால் அழிவைச் சந்திக்க நேரிடும். அதிலிருந்து தன் குடும்பத்தையும், தன்னுடன் இருக்கும் விலங்குகளையும் யானை குடும்பம் எப்படி காப்பாற்றுகிறது என்பதுதான் படத்தின் ஒரு வரிக்கதை. இந்த 5ஆம் பாகத்திலும் அதைப்போன்றதொரு பேரழிவு நிகழ்வதற்கான சூழ்நிலை உருவாகிறது.

மேனி, எல்லீ (யானைகள்) தம்பதியின் திருமண நாள் கொண்டாட்ட நேரம். அப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தீடிரென வான வேடிக்கைகள் களைகட்டுகின்றன. இது, மேனியின் ஐடியா என அனைவரும் அதைப் பாராட்டிக் கொண்டிருக்க, உண்மையில் அது விண்ணிலிருந்து வந்து கொண்டிருக்கும் விண்கல் என்பதை அதன்பிறகுதான் அந்த விலங்குகள் கூட்டம் உணரத் தொடங்குகிறது. மொத்த விலங்கு கூட்டமும், செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருக்கும்போது, அந்த இடத்திற்கு வந்து சேர்கிறது ‘பக்’ எனும் நரி. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் அழிவுகளைப் போல, இந்தமுறை விண்ணிலிருந்து வரும் ஒரு பெரிய கல்லினால் இந்த பூமியே அழியப்போகிறது எனவும், அதைத் தடுக்கத் தான் ஒரு திட்டம் வைத்திருப்பதாகவும் கூறுகிறது பக். அது என்ன திட்டம்? ‘பக்’கின் திட்டத்திற்கு மற்ற விலங்குகள் செவி சாய்ந்தனவா இல்லையா? அந்த பேரழிவிலிருந்து அவை தப்பித்தனவா... இல்லையா? என்பதே ‘ஐஸ் ஏஜ்’ 5ஆம் பாகத்தின் ஒன்றரை மணி நேரக் கதை.

முதல் பாகம் வெளிவந்து, கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்களாக ‘ஐஸ் ஏஜ்’ படங்களின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பதே ஒரு சாதனைதான். அதற்கு முக்கிய காரணம் இந்த சீரிஸின் டெக்னிக்கல் தொழில் நேர்த்தி. அனிமேஷன் படங்களில் ஐஸ் ஏஜுக்கென தனி ஒரு இடத்தையே ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் அனிமேஷன் பட விரும்பிகள்.

மற்ற பாகங்களைவிட இந்த 5ஆம் பாகம் கொஞ்சமே கொஞ்சம் பெரியது. ஆனாலும், ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்காமல் முடிந்தளவு சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார்கள் இயக்குனர்கள் Galen T. Chu, Mike Thurmeier.

வழக்கமான கேரக்டர்களான ஸ்க்ராட், சித், மேனி, டியாகோ, எல்லீ, பீச், ஜூலியன், ஷிரா, கிரானி ஆகியோருடன், இந்த பாகத்திற்கு மீண்டும் திரும்பியிருக்கும் ‘பக்’கிற்கு முக்கிய கதாபாத்திரத்தை வழங்கியிருக்கிறார்கள். அதோடு, ‘என்றும் இளமையாக இருக்கும்’ யோகா ஆடு ஷங்கரி லாமா, ‘சித்’தின் காதலியாக வரும் ப்ரூக், அழகிய குதிரைகளான மிஸ்டி மற்றும் பப்பிள்ஸ், பறக்கும் டைனோசர்கள் என சில புதிய கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து குழந்தைகளை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறார்கள்.

‘பக்’கின் வழிகாட்டுதல்படி பூமிக்கு நிகழவிருக்கும் பேரபத்தைத் தடுத்து நிறுத்தக் கிளம்பும் ஆக்ஷன் போராட்டம் ஒரு புறம், தன் செல்ல மகள் பீச், ஜூலியனைத் திருமணம் செய்து கொண்டு தங்களைவிட்டுப் பிரிந்து போய்விடுவாளே என கவலைப்படும் யானைத்தம்பதி மேனி, எல்லீயின் பாசப் போராட்டம் இன்னொருபுறம் என திரைக்கதை விரிவது சுவாரஸ்யம். அதோடு, இடையிடையே ‘சித்’தின் காதல் லீலைகள், கிராஷ் மற்றும் எடியின் ஜாலி கேலிகள், டைனோசர் பறவைகளின் திக் திக் மிரட்டல்கள், லாமாவின் யோகா அல்ட்ரா சிட்டிகள் என படம் முழுக்க ரசிகர்களை உற்சாகப்படுத்த வெகுவாக முயற்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக சின்னச் சின்ன டைமிங் வசனங்கள் மூலம் ரசிகர்களுக்கு ‘கிச்சு கிச்சு’ மூட்டியிருப்பது அசத்தல்.

ஆனால், கதையாகப் பார்த்தால் மற்ற பாகங்களைவிட இதில் கொஞ்சம் சிக்கலான விஷயங்களைக் கையாண்டிருக்கிறார்கள். குறிப்பாக ‘ஐஸ் ஏஜ்’ காதலர்களான 10 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இப்படத்தின் லாஜிக்கல் தியரிகள் கொஞ்சம் குழப்பத்தையும், சோர்வையும் ஏற்படுத்தலாம். ஆனாலும், அசத்தலான அனிமேஷன், 3டி டெக்னாலஜி நம்மை மெய்மறக்கச் செய்வதும் உண்மை.

முந்தைய பாகங்களைவிட ‘டெக்கனிக்கலாக’ பெரிய உழைப்பைக் கொட்டியிருக்கும் இந்த 5ஆம் பாகம், கடந்த பாகங்களின் சுவாரஸ்யப் பக்கங்களை கொஞ்சம் இழந்திருப்தையும் மறுப்பதற்கில்லை. ‘ஐஸ் ஏஜ்’ ரசிகர்களுக்கு இப்படமும் நிச்சயமாகப் பிடிக்கும். மற்ற ரசிகர்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மொத்தத்தில்... சிக்கலான கதையாக இருந்தாலும், வழக்கம்போல் சிரிக்க வைக்கத் தவறவில்லை இந்த ‘ஐஸ் ஏஜ்’ 5ஆம் பாகமும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;