அர்த்தநாரி - விமர்சனம்

அருந்ததியின் ஆக்ஷன் அவதாரம்!

விமர்சனம் 8-Jul-2016 2:58 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Sundara Elangovan
Production : Kiruthika Film Creations
Starring : Ramkumar, Arundathi, Naaser, Motta Rajendiran
Music : V Selva Ganesh
Cinematography : Sri Ranjan Rao
Art Director : Sriman Balaji

இயக்குனர்கள் பாலா, சக்தி சிதம்பரம் முதலானோரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய சுந்தர இளங்கோவனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அர்த்தநாரி’ என்ன சொல்ல வருகிறது?

கதைக்களம்

கிராமங்களில் இருந்து ஏழை குழந்தைகளை தொழிலாளர்களாக நகரத்திற்கு அழைத்து வந்து தங்களது சுயநலத்துக்காக பயன்படுத்தும் ஒரு கும்பலை ஒழித்து கட்ட களத்தில் இறங்கும் துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரி அருந்ததி, அதே சமூகவிரோத கும்பலால் பாதிக்கப்பட்ட அனாதை இல்லத்தைச் சேர்ந்த இளைஞர் ராம்குமார் ஆகியோர் எப்படி அந்த சமூக விரோதிகளை ஒழித்துக் கட்டுகின்றனர் என்பதுதான் ‘அர்த்தநாரி’யின் ஒரு வரிக் கதை!

படம் பற்றிய அலசல்

கிராமங்களில் இருந்து அழைத்து வரப்படும் அப்பாவி குழந்தைகளை வெளிநாட்டு மருந்துகளை பரிசோதனை செய்ய பயன்படுத்துவது, பேக்கரி, மரம் அறுக்கும் மில் போன்ற தொழிற்சாலைகளில் அடிமைகளாக நடத்தப்பட்டு வேலை வாங்குவது என்பது போனற சமூக விரோத செயல்களை மைய கருத்தாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சுந்தர இளங்கோவன்! ஒரு இளம் பெண்னை கடத்தி வைத்து சித்ரவதை செய்யும் ஒருவனை துணிச்சலாக பிடிக்கும் அருந்ததியின் அதிரடி ஆக்ஷன் காட்சியுடன் படம் துவங்குகிறது. அந்தக் காட்சியை பார்க்கும் நமக்கு, படம் ஏதோ வித்தியாசமாக சொல்ல வருகிறது என்ற எண்ணத்துடன் நிமிர்ந்து உட்காந்தால் அடுத்தடுத்து வரும் காட்சிகளில் அந்த வேகமும் விறுவிறுப்பும் வடிந்துபோகிறது. அத்துடன் காட்சிகளை தொகுத்திருப்பதிலும் நிறைய குளறுபடிகள்.

ஆனாலும் ஒரு பக்கம் தன்னை வளர்த்து ஆளாக்கிய நாசரை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து பழிவாங்க துடிக்கும் ராம்குமாரின் ஆட்டம், இன்னொரு புறம் தனது டீமுடன் சமூகவிரோதிகளை என்கவுண்டர் செய்யும் முனைப்பில் களமிறங்கிய அருந்ததியின் ஆதிரடி ஆட்டம், இந்த ஆட்டத்தில் அருந்ததி, தன் காதலன் ராம்குமாரையே தவறாக சுட்டு விடுவதால் ஏற்படும் திருப்பம் என்று படம் ஓரளவுக்கு ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. அதிகப்படியான லாஜிக் மீறல்களுடன் திரைக்கதை பயணித்தாலும், செல்வகணேஷின் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் பாடல்கள் கவனம் பெறவில்லை! படத்தொகுப்பும், ஸ்ரீரஞ்சனராவின் ஒளிப்பதிவும் குறிப்பிடும்படியாக அமையவில்லை!

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் ராம்குமார், அருந்ததியுடனான காதல் காட்சிகளில் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் எமோஷன் மற்றும் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அந்த கேரக்டருக்குரிய முகபாவங்களை வெளிப்படுத்துவதில் கோட்டை விட்டிருக்கிறார். படத்தை ஓரளவுக்கு ரசிக்க வைப்பதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வரும் அருந்ததியின் பங்கு குறிப்பிடத்தக்கது! அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலாகட்டும் கிளாமர் காட்சிகளிலாகட்டும் அருந்ததி நடிப்பில் மனதில் நின்று விடுகிறார்! ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் மூலம் சினிமாவில் கவனம்பெற்ற அருந்ததிக்கு இப்படம் நல்ல பெயரை பெற்று தரும் என்று நம்பலாம். குழந்தை தொழிலாளர் ஒழிப்பில் ஆர்வம் கொண்டு, தன் உயிரை பலி கொடுக்கும் அனாதை ஆசிரமத் தலைவராக வரும் நாசர், சமூகவிரோத கும்பல் தலைவனாக வரும் சுதாகர், குழந்தைகள் கடத்தல் ஏஜெண்டுகளாக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சம்பத்ராம், உயர் போலீஸ் அதிகாரியாக வரும் ‘வழக்கு எண்’ முத்துராமன் ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

1. விழிப்புணர்வை ஏற்படுத்தும் குழந்தை தொழிலாளர்கள் பற்றிய கதை!
2. அருந்ததியின் நேர்த்தியான பங்களிப்பு

பலவீனம்

1. காட்சி தொகுப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள்
2. அதிகபடியான லாஜிக் மீறல்கள்
3. டெக்னிக்கல் விஷயங்கள்!

மொத்தத்தில்...

நல்ல ‘கரு’வை கையிலெடுத்த இயக்குனர், அதை சுவாரஸ்யமான படமாக்குவதற்கு தடுமாறியிருக்கிறார். அதிரடி ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு மட்டுமே இந்த ‘அர்த்தநாரி’யை பிடிக்க வாய்ப்பிருக்கிறது!

ஒரு வரி பஞ்ச் : அருந்ததியின் ஆக்ஷன் அவதாரம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;