தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ் - ஹாலிவுட் பட விமர்சனம்

பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இப்படம் ஒரு நல்ல டைம்பாஸ்.

விமர்சனம் 8-Jul-2016 10:41 AM IST Top 10 கருத்துக்கள்

‘மினியன்’ என்ற அனிமேஷன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து வெளிவந்த ‘டெஸ்பிக்கபிள் மீ’ படத்தைத் தயாரித்த இல்லுமினினேஷன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்’. நாம் வளர்க்கும் செல்லப் பிராணிகளை, வீட்டில் விட்டுவிட்டு நாம் வேலைக்குச் சென்ற பிறகு அவை அடிக்கும் லூட்டிகளைப் பற்றியே இப்படம் பேசுகிறது.

மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கேட்டி என்ற பெண் வளர்க்கும் செல்ல நாயின் பெயர் மேக்ஸ். தன் எஜமானியுடன் மிகவும் சந்தோஷமாக பொழுதைக் கழித்து வரும் மேக்ஸ், அவர் வேலைக்குச் சென்றதும் அந்த குடியிருப்பின் மற்ற வீடுகளில் வசிக்கும் செல்லப்பிராணிகளான பூனை, கிளி, எலி, வித விதமான நாய்களுடன் சேர்ந்து லூட்டி அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கும். இப்படி ஜாலியாக மேக்ஸ் பொழுதைக் கழித்து வந்த சூழ்நிலையில், திடீரென ஒரு நாள் டியூக் எனும் பிரம்மாண்ட நாய் ஒன்றை வீட்டிற்கு அழைத்து வருகிறார் கேட்டி. மேக்ஸிற்கு டியூக்கை சுத்தமாகப் பிடிக்கவில்லை. இதனால், அதை எப்படியாவது வீட்டிலிருந்து துரத்த வேண்டும் என திட்டம் தீட்டுகிறது. அதேபோல், மேக்ஸை வீட்டிலிருந்து விரட்டியடிப்பதற்காக அதை இழுத்துக் கொண்டுபோய், பயங்கர பூனைகள் வாழும் இடத்தில் விடுகிறது. இந்த களேபரத்திற்கு நடுவே, மேக்ஸ், டியூக் இருவரின் லைசென்ஸை பெல்ட்டுகளையும் அந்த பூனைகள் அறுத்து வீசிவிட, அந்த நேரம் அங்கே வரும் அனிமல் கன்ட்ரோல் படை மேக்ஸையும், டியூக்கையும் சிறை பிடிக்கிறது.

வழக்கம்போல் தங்களுடன் விளையாட வரும் மேக்ஸைக் காணாமல் மற்ற பிராணிகள் அனைத்தும் மறுநாள் பரிதவிக்கின்றன. மேக்ஸைக் கண்டிபிடித்து திரும்பவும் தங்களின் அப்பார்ட்மென்டிற்குக் கூட்டிவர தன் படை பட்டாளங்களுடன் கிளம்புகிறது ‘கேட்ஜிட்’ என்ற அழகிய பெண் நாய். மேக்ஸ், டியூக் இருவருக்கும் என்ன நடந்தது? கேட்ஜிட்டின் படை அவர்களை கண்டுபிடித்ததா இல்லையா? என்பதை சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் எடுக்கப்பட்டிருக்கும் படமே தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்.

ஹாலிவுட்டிற்கு இதுபோன்ற அனிமேஷன் படங்கள் ஒன்றும் புதிதல்ல. அதேபோல, இப்படத்தின் கதையும் ஏற்கெனவே நாம் பார்த்த சில படங்களின் தாக்கத்திலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் படமாக்கியிருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், அனிமேஷன் கதாபாத்திரங்களை அற்புதமாக வடிவமைத்து, அவற்றை உயிருள்ள பிராணிகள் போல படம் முழுக்க வலம் வரச் செய்திருக்கும் அற்புதமான கிராஃபிக்ஸ் டெக்னாலஜி. கூடவே ‘3டி’யின் பங்களிப்பும் சிறப்பாக அமைந்திருப்பதால் குழந்தைகளுக்கு மிகப்பிடித்த படங்களின் பட்டியலில் மிக எளிதாய் நுழைகிறது இந்த தி சீக்ரெட் லைஃப் ஆஃப் பெட்ஸ்.

ஒருபுறம் மனிதர்களை நேசிக்கும் செல்லப் பிராணிகளின் அழகான வாழ்க்கை, இன்னொருபுறம் மனிதர்களை வெறுத்து அவர்களை பழிவாங்கத் துடிக்கும் கோர மிருகங்களின் அன்டர்கிரவுன்ட் லைஃப் என விலங்குகளின் இருவேறு உலகங்களை இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். அதிலும், மனிதர்களுக்கெதிரான விலங்குகள் படையின் தலைவனாக ஒரு முயல் செய்யும் சேட்டைகளும், அதன் ஆக்ஷனும் ரசிகர்களை கதிகலங்கச் செய்கிறது. ஆனால், க்ளைமேக்ஸில் தான் செய்யும் ஒரு காரியத்தால் ரசிகர்களிடம் கைதட்டல்களையும் வாங்கத் தவறவில்லை அந்த முயல்.

ஒரு சில இடங்களில் படம் போரடித்தாலும், ஒட்டுமொத்த படமாகப் பார்க்கும்போது ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தையே தந்திருக்கிறது இப்படம். அனிமேஷன் உருவங்களுக்கு வாய்ஸ் கொடுத்திருப்பவர்களின் பங்களிப்பையும் தாராளமாக பாராட்டலாம்.

மொத்தத்தில்... பிராணிகளை வளர்ப்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும் இப்படம் ஒரு நல்ல டைம்பாஸ்.

( Brian Lynch, Cinco Paul மற்றும் Ken Daurio ஆகியோர் திரைக்கதையை அமைத்துள்ளனர். Alexandre Desplat இசை அமைத்துள்ளார். Ken Schretzmann தொகுத்துள்ளார். Chris Renaud மற்றும் Yarrow Cheney இப்படத்தை இயக்கி உள்ளனர். Hansa Pictures வெளியீடு, இப்படம்.)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;