அட்ரா மச்சான் விசிலு - விமர்சனம்

விசில் அடிக்கலாம்!

விமர்சனம் 7-Jul-2016 11:59 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Thiraivannan
Production : Arasu Films
Starring : Shiva, Arun balaji, Naina Sarwar, Powerstar Srinivasan
Music : N. R. Raghunanthan
Cinematography : A. Kasi Vishwa
Editing : Sujith Sahadev

‘கச்சேரி ஆரம்பம்’ படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘அட்ரா மச்சான் விசிலு’ ரசிகர்களை விசில் அடிக்க வைக்கிறதா?

கதைக்களம்

பவர்ஸ்டார் சினீவாசன் சினிமாவில் பெரிய ஹீரோ! இவரது தீவிர ரசிகர்கள் மதுரையை சேர்ந்த நண்பர்களான ‘மிர்ச்சி’ சிவா, சென்ட்ராயன், அருண்பாலாஜி! பவர் ஸ்டாரின் ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் சொந்த பணத்தில் கொடி, தோரணம் கட்டுவது, கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது என்று விசுவாசமாக இருக்கும் நண்பர்களுக்கு பவர் ஸ்டார் மானேஜர் சிங்கமுத்து மூலம் பவர் ஸ்டார் படத்தை விநியோகம் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. ‘தலைவர்’ நடித்த படம் வசூலை அள்ளித்தரும் என்ற கனவுடன் கஷ்டப்பட்டு பணத்தை புரட்டி படத்தை வாங்கும் நண்பர்களுக்கு அப்படம் படுதோல்வியைத் தர, மூவரும் கடனாளிகளாவதோடு, காதலியை, குடும்பத்தை, உறவினர்களை இழக்கும் நிலைமைக்கு ஆளாகிறார்கள். தங்களது தலைவர் கைவிடமாட்டார் என்ற நம்பிகையுடன் பவர்ஸ்டாரிடம் உதவி கேட்கச் சென்றால், அவர் மூவரையும் அவமானப்படுத்துவதோடு, பணத்தை திருப்பி தரமுடியாது என்றும் சொல்லி அவமானப்படுத்தி அனுப்புகிறார்! தொலைத்த பணத்தை தொலைத்த இடத்திலிருந்துதான் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் ஊர் திரும்பும் நண்பர்கள் மூவரும் பவர்ஸ்டாரை எப்படி சிக்க வைத்து தங்களது பணத்தை மீட்கின்றனர் என்பது தான் ‘அட்ரா மச்சான் விசிலு’.

படம் பற்றிய அலசல்!

சினிமாவில் நடந்த சில நிஜ சம்பவங்களை நினைவுபடுத்தும் விதமாக இப்படத்தின் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார் இயக்குனர் திரைவாணன்! படம் பார்க்க வருபவர்களை சிரிக்க வைத்தால் போதும் என்ற முடிவுடன் லாஜிக் விஷயங்களை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தை இயக்கியுள்ளார். அதில் அவர் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளார்! பவர்ஸ்டாரின் லூட்டிகள், ரசிகர்களின் ஆட்டம் பாட்டம் என்று துவங்கும் படம் இடைவேளை வரை கொஞ்சம் ஸ்லோவாக பயணித்தாலும், இடைவேளைக்கு பிறகு பவர்ஸ்டாரின் 100 கோடி ரூபாயை ஆட்டை போட திட்டம் வகுக்கும் காட்சிகளிலிருந்து விறுவிறுப்பாகிறது! ஏற்கெனவே ‘பவர்ஸ்டார்’ சீனிவாசனுக்கும், ‘மிர்ச்சி’ சிவாவுக்கும் குறிப்பிடத்தக்க ரசிகர் வட்டத்தினர் இருக்கின்றனர்! அதை சரியாகப் புரிந்துகொண்டு இப்படத்தில் பவர்ஸ்டாரை ஒரு நடிகராகவும், மிர்ச்சி சிவாவை ஒரு ரசிகராகவும் களமிறக்கி, அவர்களுக்கு ஏற்றபடியான காட்சிகளை அமைத்து கலகலக்க வைத்துள்ளார் இயக்குனர்! தங்களது வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும் ரசிகர்களை மதிக்காத ஒரு சில ஹீரோக்களுக்கும், தீவிர ரசிகரகாக இருக்கும் சில ரசிகர்களுக்கும் படிப்பினை தரும் படமாகவும் இப்படம் அமைந்துள்ளது! காசி விஸ்வநாத்தின் ஒளிப்பதிவு, ரகுநந்தனின் இசை ஆகியவை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது, ரகுந்தனின் இசையில் இரண்டு பாடல்கள் ரசிக்கும்படி அமைந்துள்ளன. படத்தில் வரும் ஒரு சில தேவையற்ற காட்சிகளை எடிட்டர் நீக்கியிருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பு அடைந்திருக்கும்!

நடிகர்களின் பங்களிப்பு

பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு தனது திறமையை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. ஆனால் அதை அவர் சரியாக பயன்படுத்தவில்லை! பவர் இன்னும் நடிப்பில் கவனம் செலுத்த வேண்டும். ‘மிர்ச்சி’ சிவா வழக்கம் போல தனது பாணியில் கலக்கியிருக்கிறார். அவரது காதலியாக வரும் நேனா சர்வாரிடம் அழகும், இளமையும் இருக்கிறது. தமிழுக்கு புதுசு என்றாலும், நடிப்பில் குறைவைக்கவில்லை. மிர்ச்சி சிவாவுடன் வரும் சென்ட்ராயன், அருண் பாலாஜி, டாக்டராக வரும் மன்சூரலிகான், போலீஸ் அதிகாரியாக வரும் ராஜ்கபூர், இயக்குனராக வரும் டி.பி.கஜேந்திரன், ஆகியோரும் தங்களது கேர்கடர்களை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர். பவர்ஸ்டாரின் மானேஜராக வரும் சிங்கமுத்துவின் ஓவர் சவுன்ட் ரசிகர்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தியிருக்கிறது.

பலம்

1. காமெடியாகவும், விறுப்பாகவும் நகரும் படத்தின் இரண்டாம்பாதி
2. ‘மிர்ச்சி’ சிவாவின் டைமிங் காமெடிகள்

பலவீனம்

1. ஸ்லோவாக பயணிக்கும் முதல் பாதி
2. லாஜிக் விஷயங்களை கவனத்தில் கொள்ளாதது
3. படதொகுப்பு

மொத்தத்தில்...

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர், அவரது தீவிர ரசிகர்கள் இவர்களை பற்றிய காமெடி படம் என்பதால், இப்படம் அனைவரையும் கவர வாய்ப்பிருக்கிறது!

ஒரு வரி பஞ்ச் : விசில் அடிக்கலாம்!

ரேட்டிங் : 4/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு 2 டீஸர் 02


;