சுல்தான் - பாலிவுட் பட விமர்சனம்

சுல்தான்... காதல், லட்சியம், எழுச்சி நிறைந்த சுவாரஸ்ய கதை!

விமர்சனம் 6-Jul-2016 5:44 PM IST Top 10 கருத்துக்கள்

‘பஜிரங்கி பாய்ஜான்’ படத்திற்குப் பிறகு வெளிவந்த ‘பிரேம் ரத்தன் தன் பாயோ’ விமர்சனரீதியாக சல்மானுக்கு பின்னடைவாக அமைந்தது. இந்தமுறை நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டான மல்யுத்தத்துடன் களமிறங்கியிருக்கிறார் சல்லு பாய். ‘சுல்தானி’ன் ஆட்டம் களத்தில் எப்படி?

டெல்லியில் நடைபெறும் ‘டேக் டவுன் சாம்பியன்ஷிப்’ போட்டிக்காக சிறந்த வீரன் ஒருவனைத் தேடுகிறார் ஆகாஷ் ஓபராய் (அமித் சாத்). அதற்கு சரியான ஆள் என ஹரியானாவைச் சேர்ந்த ‘சுல்தான்’ (சல்மான் கான்) எனும் மல்யுத்த வீரரை கைகாட்டுகிறார் ஆகாஷின் தந்தை. ஹரியானாவிற்கு வந்து சுல்தானைப் பார்க்கும் ஆகாஷ், அவரின் முதிர்ந்த தோற்றத்தையும் பெருத்த உடலையும் பார்த்து அவரை நிராகரிக்க முடிவு செய்கிறார். அந்த நேரத்தில் டிராக்டர் ஒன்று பள்ளத்தில் சிக்க, அதை ஒற்றை ஆளாக தூக்கி வெளியேற உதவுகிறார் சுல்தான். இந்த சம்பவத்தைப் பார்க்கும் ஆகாஷ், சுல்தானின் மன உறுதியையும், உடல் வலிமையையும் கண்டு, அவரை தங்கள் சார்பாக போட்டிடுமாறு அழைக்கிறார். ஆனால், தான் திரும்பவும் போட்டியில் கலந்துகொள்வதில்லை என அந்த வாய்ப்பை நிராகரிக்கிறார் சுல்தான். என்ன செய்வதென்று தெரியாத ஆகாஷ், சுல்தானின் நண்பரைச் சந்தித்து, அவர் விளையாட மறுப்பதற்கான காரணத்தை கேட்கிறார். அங்கிருந்து ஆரம்பமாகிறது ‘சுல்தானி’ன் வாழ்க்கை வரலாறு.

சாதாரண இளைஞனாக இருந்து, ஆர்ஃபாவைச் (அனுஷ்கா சர்மா) சந்தித்த பின் மல்யுத்த வீரனாக அவதரித்து, ஒலிம்பிக்கில் ஜெயித்து, உலக சாம்பியனாகி, அதன் பிறகு என்ன காரணத்தால் மல்யுத்தத்தைக் கைவிட்டார் என்பது வரை நகர்கிறது படத்தின் முதல்பாதி. அதன்பிறகு தான் இழந்தை மீட்டெடுக்க சுல்தான் வெகுண்டெழுவதே படத்தின் கதை!

விளையாட்டை மையப்படுத்தி வெளிவரும் படங்கள் பாலிவுட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. லகான், சக்தே இந்தியா, பாக் மில்கா பாக் என ஏற்கெனவே பல வெற்றிப்படங்களை கண்டிக்கிறது வடநாட்டுத் திரைப்படங்கள். அந்த வரிசையில் இந்த சுல்தானும் நிச்சயம் இடம்பெறும்! சாதாரணமான கதை, சுவாரஸ்யமான திரைக்கதை, சல்மானின் அன்டர்பிளே ஆக்ஷன், அனுஷ்காவின் பிரமாதமான நடிப்பு ஆகியவற்றின் உதவியோடு ஒட்டுமொத்தமாக 3 மணி நேரம் ரசிகர்களை தியேட்டருக்குள் அமர வைத்திருப்பது இன்றைய சினிமா சூழலில் சாதனைதான்.

சுல்தான் என்ற சாதாரணனன் எப்படி ஒரு பெண்ணால் சாதனையாளனாக மாறி, பின் மீண்டும் வீழ்ந்து, அதன் பிறகு மீண்டும் இழந்ததை மீட்டெடுக்கிறான் என்பதை அற்புதமாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அலி அப்பாஸ் ஜாஃபர். அவரின் முயற்சிக்கு பெரிய பக்க பலமாய் அமைந்திருக்கின்றன ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் போன்ற விஷயங்கள். பல காட்சிகளில் வசனங்களுக்குப் பதிலாக ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை போன்றவை ‘எமோஷனை’ பார்வையாளனுக்கு அற்புதமாக கடத்தியிருக்கிறது.

படத்தில் இடம் பெற்றிருக்கும் வசனங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த கரகோஷம். ‘விவசாயிக்கும், மல்யுத்த வீரனுக்கும் பொதுவான விஷயம் ஒன்று உள்ளது. அது மண்ணும், பலமும்..!’ என சல்மான் உதிர்த்த வார்த்தைகள் ரசிகர்கள் நெஞ்சில் பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கும். விளையாட்டை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தாலும், படம் முழுவதும் சல்மான், அனுஷ்காவின் அற்புதமான காதலையும் பிரதிபலிக்கத் தவறவில்லை. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய பலம்.

ஒரு நல்ல திரைக்கதையில், அந்தந்த கதாபாத்திரங்களாக மாறிப்போகும் நடிகர்கள் கிடைத்துவிட்டால், அதைவிட ஒரு இயக்குனருக்கு பெரிய வரப்பிரசாதம் எதுவுமில்லை. ஒரு மல்யுத்த வீரனாகவே வாழ்ந்திருக்கிறார் சல்மான். மிகப்பெரிய ஹீரோ என்பதையெல்லாம் மறந்துவிட்டு, ‘சுல்தான்’ கேரக்டருக்கு என்ன தேவையோ அதை கச்சிதமாக செய்திருக்கிறார். உடம்பை மட்டும் இரும்புபோல் வைத்திருப்பதோடு நின்றுவிடாமல், மல்யுத்த வீரன் களத்தில் எப்படி சண்டையிடுவானே அதனை கண்முன் நிறுத்தியிருக்கிறார் சல்மான். ஸ்டன்ட் மாஸ்டருக்கு நிச்சயம் பெரிய பாராட்டுகள் கிடைக்கும். அதேபோல், ஆர்ஃபா கேரக்டரில் அசத்தியிருக்கிறார் அனுஷ்கா. இதுபோன்ற கதாபாத்திரங்கள் ஒரு நடிகைக்கு அரிதாகவே கிடைக்கும். தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்தி கைதட்டல்களை அள்ளியிருக்கிறார் அனுஷ்கா சர்மா. இவர்களையடுத்து படத்தில் பெரிய கவனம் பெற்றவர் என்றால் அது ரன்தீப்கூடாதான். பாக்ஸிங் கோச்சாக ரொம்பவும் இயல்பாக நடித்திருக்கிறார்.

படத்தின் நீளம், ஒன்றிரண்டு தேவையில்லாத பாடல்கள் என்பதைத் தவிர்த்து ‘சுல்தானி’ல் குறை சொல்வதற்கு பெரிய விஷயங்கள் எதுவும் இல்லை.

மொத்தத்தில்... ரசிகனை ‘எமோஷனலாக ஒரு படத்தில் ஒன்ற வைத்துவிட்டால், எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் அவன் திரையரங்கில் உட்கார்ந்திருப்பான்’ என்பதற்கு ‘சுல்தான்’ படமே சிறந்த எடுத்துக்காட்டு.

சுல்தான்... காதல், லட்சியம், எழுச்சி நிறைந்த சுவாரஸ்ய கதை!

ரேட்டிங் : 7/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;