புற்றுநோயாளிகளுக்கு உதவி செய்யும் கௌதமி!

கௌதமியின் புற்றுநோய் தொண்டு நிறுவனம் ‘லைஃப் அகைன்’

செய்திகள் 2-Jul-2016 4:31 PM IST VRC கருத்துக்கள்

‘லைஃப் அகைன்’ என்னும் புற்று நோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்தை துவங்கியுள்ளார் நடிகை கௌதமி! அந்த தொண்டு நிறுவனம் குறித்து மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் அவர்! சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு அவர் அது குறித்து பேசும்போது,

‘‘முன்பெல்லாம் புற்றுநோய் தாக்கியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால் இன்றைக்கு புற்று நோயாளிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பேர் புற்றுநோய்க்கு ஆளாவதாகவும், உலக அளவில் பாதிக்கப்படும் புற்று நோயாளர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவில் இருப்பதாகவும் சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அப்படி புற்று நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரு சிறந்த மறுவாழ்வு மையமாக உருவாகியுள்ளது 'லைஃப் அகைன்' என்னும் தொண்டு நிறுவனம். புற்று நோய் என்பது வாழ்வின் முடிவல்ல. அதற்கு பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு. பத்து ஆண்டுகள் புற்று நோயுடன் போரிட்டவள் நான்!

புற்று நோயாளிகளுக்காக நான் துவங்கியுள்ள 'லைஃப் அகைன்' தொண்டு நிறுவனம் சிறந்த மறு வாழ்வு மையமாக விளங்கும். இங்கு வெறும் சிகிச்சை மட்டுமல்லாமல் வாழ்க்கையின் முக்கியத்துவம், தன்னம்பிக்கை, மன உறுதி, புற்று நோயை எதிர்த்து போராடும் மன வலிமை ஆகியவற்றை வழங்கி, நோயாளிகளை வலிமை படுத்துவதே 'லைஃப் அகைன்' நிறுவனத்தின் தலையாய கடமை. என்னோடு இந்த 'லைஃப் அகைன்' நிறுவனத்தில் கை கோர்த்துள்ள மாலா மணியன், டாக்டர் ஹைமாவதி ஆகியோரும் தங்களின் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். அனைவரும் இந்த நிறுவனம் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதன் மூலம் புற்றுநோயாளிகள் வாழ்க்கை காப்பாற்றப்பட அதிக வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;