பைசா – விமர்சனம்

மதிப்பிழந்த நாணயம்!

விமர்சனம் 2-Jul-2016 12:17 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Abdul Majith
Production : Confident Film Cafe & RK Dream World
Starring : Sriram, Aara, Naaser, Mayilsamy, Rajasimman
Music : J.V
Cinematography : K.P Velmurugan
Editing : S.P Ahamed

‘தமிழன்’, ‘துணிச்சல்’ ஆகிய படங்களை இயக்கிய அப்துல் மஜீத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘பைசா’ வசூலை அள்ளுமா?

கதைக்களம்

சென்னையில் குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தும் இளைஞர்களில் ஒருவர் ஸ்ரீராம். அவருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யும் ஆராவுக்கும் இடையில் காதல் மலர்கிறது! மற்றவர்களின் பணத்துக்கு ஆசைப்படாதவர் ஆரா! இந்நிலையில் பெரிய தொழிலதிபரான மதுசூதன் ராவ், ரௌடி ராஜசிம்மன் மூலமாக கூவம் ஆற்றில் 100 கோடி ரூபாய் பணத்தை பதுக்கி வைக்கிறார். ஒரு நாள் அந்த 100 கோடி ரூபாய் பண மூட்டை ஸ்ரீராம் கைக்கு கிடைக்கிறது. ஸ்ரீராம் அந்த பணத்தை வைத்து சந்தோஷமான வாழ்க்கையை துவங்கினாலும், அந்த பணத்தால் அவனது காதல், நிம்மதியான வாழ்க்கை எல்லாம் கெட்டு விடுகிறது. இந்நிலையில் பணம் பறிபோனதை தெரிந்து, அதனை மீட்கும் வேலையில் இறங்கும் ராஜசிம்மனுக்கு அந்த பணம் ஸ்ரீராமிடம் இருக்கும் விஷயம் தெரிய வருகிறது. இறுதியில் அந்த பணம் போய் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேருகிறதா? ஸ்ரீராமின் காதல் கை கூடியதா? அவனுக்கு நிம்மதி கிடைத்ததா? என்பதற்கு விடை தரும் படமே ‘பைசா’.

படம் பற்றிய அலசல்

குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்துவதும் கௌரவமான ஒரு தொழில் தான், நேர்மையற்ற முறையில் வரும் பணம் நிம்மதியான வாழ்க்கையை தராது என்பது போன்ற கருத்துக்களை வைத்து இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் அப்துல் மஜீத். ஆனால் அதற்கேற்ற படி ரசிக்கும்படியான, புதுமையான காட்சிகளை அமைப்பதில் தவறிவிட்டுள்ளார் இயக்குனர்! ஏற்கெனவெ வெளிவந்த சில படங்களையும், காட்சிகளையும் நினைவுப்படுத்துவது போல் ‘பைசா’ அமைந்திருப்பதால் ஒரளவுக்கே ‘பைசா’வை ரசிக்க முடிகிறது. ஏரியா விட்டு வேறு ஏரியா வந்து குப்பை பொறுக்க கூடாது என்பது போன்ற பல விஷயங்களை வைத்து குப்பை பொறுக்கி வாழ்க்கை நடத்துபவர்களின் சந்தோஷங்களை, பிரச்சனைகளை, சோகங்களை இன்னும் அழுத்தமாக பதிவு பண்ணியிருந்தால் ‘பைசா’வை இன்னும் ரசித்திருக்கலாம்! படத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் தரும் விஷயங்கள் கதையுடன் ஒட்டி வரும் காமெடியும், ஜே.வி.யின் இசையில் அமைந்துள்ள இரண்டு பாடல்களும் தான்!

நடிகர்ளின் பங்களிப்பு

குப்பை பொறுக்கி பிழைப்பு நடத்தும் இளைஞனாக ஸ்ரீராம் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார். ஆனால் அந்த கேரக்டருக்கான மேக்-அப் சரியாக அமையவில்லை. ஸ்ரீராமின் காதலியாக வரும் ஆரா நடிப்பில் புதுமுகம் என்று சொல்ல முடியவில்லை! கொஞ்சம் ‘காதல்’ சந்தியாவின் சாயலில் இருக்கும் ஆராவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு! வருமான வரி துறை அதிகாரியாக வரும் நாசருக்கு சில காட்சிகளே என்றாலும் நல்ல நடிப்பை வழங்கிவிட்டு செல்கிறார். ஸ்ரீராமின் நண்பராக வரும் சென்ட்ராயன், தொழிலதிபராக வரும் மதுசூதன் ராவ், ரௌடியாக வரும் ராஜசிம்மன், ராஜசிம்மனின் பெண் கூட்டாளியாக வரும் தீபிகா ஆகியோரும் குறையில்லாத நடிப்பை வழங்கியுள்ளார்கள்.

பலம்

1.அதிகமாக யாரும் தொடாத கதைக்களம்
2.காமெடி மற்றும் இரண்டு பாடல்கள்

பலவீனம்

மேலே குறிப்பிட்ட விஷயங்கள் தவிர்த்து மற்ற அனைத்துத்தும் பலவீனமாகவே அமைந்துள்ளது!

மொத்தத்தில்…

சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை அமைப்பில் வெளிவந்திருக்கும் இந்த ‘பைசா’ வசூலை அள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

ஒருவரி பஞ்ச் : மதிப்பிழந்த நாணயம்!

ரேட்டிங் : 3.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அசுரன் ட்ரைலர்


;