ஜாக்சன் துரை - விமர்சனம்

முதல்பாதி அசத்தல்.... இரண்டாம்பாதி சறுக்கல்!

விமர்சனம் 1-Jul-2016 3:46 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Dharani Dharan
Production : Sri Green Productions
Starring : Sathyaraj, Sibiraj, Bindu Madhavi, Karunakaran
Music : Siddharth Vipin
Cinematography : Yuvraj
Editing : Vivek Harshan

‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த சிபிராஜின் அடுத்த அதிரடி ‘ஜாக்சன் துரை’. இந்தமுறை மகனோடு சேர்ந்து அப்பா சத்யராஜும் களமிறங்கியிருக்கிறார். ஆட்டம் எப்படி?

கதைக்களம்

பாழடைந்த பிரிட்டிஷ் பங்களா ஒன்றில் பேய் இருப்பதாக நம்பும் அயன்புரம் மக்கள் இரவு 9 மணிக்கு மேல் ஊரில் நடமாடவே பயந்து நடுங்குகிறார்கள். மக்களின் இந்த பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக அந்த ஊர் பெரிய மனிதனின் மகளான பிந்து மாதவி, போலீஸில் இதுபற்றி புகார் கொடுக்கிறார். இதனை விசாரித்து உண்மையைக் கண்டுபிடிப்பதற்காக களமிறக்கப்படுகிறார் எஸ்.ஐ. சிபிராஜ். வந்த இடத்தில் விசாரிப்பதற்கு முன்பே பிந்து மாதவியைப் பார்த்து காதல் வயப்படும் சிபிராஜ், அவரின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்கிறார். அதேநேரம், பிந்து மாதவியின் முறைப் பையனான கருணாகரனும் பிந்து மாதவியைப் பெண் கேட்டு வருகிறார்.

‘‘யார் பிரிட்டிஷ் பங்களாவுக்குச் சென்று, ஒரு வாரம் தங்கிவிட்டு உயிருடன் திரும்பி வருகிறார்களோ... அவருத்தான் என் மகள்’’ என பிந்துமாதவியின் அப்பா கண்டிஷன் போடுகிறார். அழகு தேவதைக்காக அசால்ட் பேய் பங்களாவுக்குப் புறப்படுகிறார்கள் சிபியும், கருணாவும். உள்ளே சென்றதும் என்ன நடக்கிறது? உண்மையில் அங்கு பேய் இருக்கிறதா... இல்லையா? இருவரில் உயிருடன் திரும்பியது யார்? என்பதே ‘ஜாக்சன் துரை’.

படம் பற்றிய அலசல்

பேய்ப் படங்களுக்கென்றே காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாழடைந்த பங்களாவில் நடக்கும் கதைதான் என்றாலும், கதையின் ஒன்லைனிலும், அதற்கான ஃப்ளாஷ்பேக்கிலும், டெக்னிக்கல் மேக்கிங்கிலும் அசத்தியிருக்கிறார் ‘பர்மா’ பட இயக்குனர் தரணிதரன். கொஞ்சம் சுவாரஸ்யமாக ஆரம்பித்து, சிபிராஜின் விசாரணை தொடங்கியதும் சூடுபிடிக்கும் கதை, யோகி பாபும், கருணாகரனும் கதைக்குள் வந்ததும் காமெடியில் அடித்து தூள் கிளப்புகிறது. முதல்பாதி திரைக்கதையை கச்சிதமாகவும், கலகலப்பாகவும் அமைத்த இயக்குனர், இரண்டாம்பாதியில்... ஃப்ளாஷ்பேக்கிற்குப் பிறகு கதையை எப்படி நகர்த்துவது, ரசிகர்களை சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடிக்காட்சிகளை எப்படி உருவாக்குவது என ரொம்பவே திணறியிருக்கிறார்.

இரண்டாம்பாதி படம் முழுவதும் ஒரே இடத்தில் சுற்றிச்சுற்றி வருவதால், ஒருகட்டத்திற்கு மேல் போரடிக்கத் துவங்குகிறது. க்ளைமேக்ஸும் எதிர்பார்த்தபடியே அமைந்துவிட்டதால், ‘அப்பாடா... ஒருவழியாக முடித்துவிட்டார்கள்’ என்ற அயர்ச்சியே படம் முடிவடைந்ததும் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோதாதென்று லாஜிக் ஓட்டைகள், ‘கொட்டாவி’ வரவழைக்கும் படத்தின் நீளம் என ‘ஜாக்சன் துரை’யின் பலவீனங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இருந்தபோதிலும், பேய்களுக்கான மேக்அப், பாழடைந்த பங்களாவிற்கான செட், சின்னச் சின்ன கிராபிக்ஸாக இருந்தாலும் திறம்பட உருவாக்கியிருப்பது, நேர்த்தியான ஒளிப்பதிவு என ‘ஜாக்சன் துரை’யின் டெக்னிக்கல் பக்கங்கள் படத்திற்கு பலமே.

நடிகர்களின் பங்களிப்பு

சிபிராஜைப் பொறுத்தவரை இப்படத்தில், அவர் நாயகனாக பெரிதாக எதையும் செய்யும் அளவிற்கான கதாபாத்திர வடிவமைப்பு இல்லை. இருந்தாலும் தன்னால் முடிந்தளவு கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இதே நிலைமைதான் நாயகி பிந்து மாதவிக்கும். பங்களாவிற்குள் நாயகனையும், காமெடினையும் அனுப்புவதற்கு மட்டுமே கதையில் பயன்பட்டிருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு பயன்பட்டிருப்பதோடு நாயகியின் வேலை முடிந்துவிடுகிறது. ஃப்ளாஷ்பேக்கில் ஆக்ரேஷமாக காட்டப்படும் சத்யராஜ், நடப்பு கதைக்களத்திற்குத் திரும்பும்போது காமெடியாக்கப்பட்டு வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

மொத்த படத்தையும் தாங்கி நிற்பது இரண்டே பேர்தான். ஒருவர் யோகி பாபு, இன்னொருவர் கருணாகரன். இவர்கள் இருவரும் அடிக்கும் லூட்டிகளுக்கே தியேட்டரில் சிரிப்பலைகள் எழுகின்றன. முதல்பாதி முழுக்க இவர்கள் இவரின் ஆட்டம்தான். சின்னச் சின்ன காமெடிகள் மூலம் யோகி பாபுவும், படம் முழுக்க கருணாகரனும் அசத்தியிருக்கிறார்கள். ஆனால், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் காமெடிகள் எதுவுமே ஒர்க்அவுட்டாகவில்லை என்பது பெரிய சோகம்.

பலம்

1. கதைக்காக யோசித்திருக்கும் வித்தியாசமான கான்செப்ட்
2. படத்தின் கலகல முதல்பாதி (குறிப்பாக யோகிபாபு + கருணாகரனின் காமெடிகள்)
3. மேக்அப், செட், கிராபிக்ஸ், ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னிக்கல் விஷங்கள்

பலவீனம்

1. இரண்டாம்பாதி திரைக்கதை
2. பேயே அதிர்ச்சியடையும் அளவுக்கான லாஜிக் ஓட்டைகள்
3. படத்தின் நீளம்

மொத்தத்தில்...

முதல்பாதியில் ஏற்படுத்திய கலகலப்பையும் விறுவிறுப்பையும், இரண்டாம்பாதியிலும் ஏற்படுத்தியிருந்தால் ‘ஜாக்சன் துரை’ ரசிகர்களை பெரிதாக கவர்ந்திருப்பான். வழக்கமான பேய்ப்படங்களிலிருந்து கொஞ்சம் தனித்துக்காட்ட வேண்டும் என்ற இயக்குனரின் முயற்சிக்கு பாராட்டுக்கள்!

ஒரு வரி பஞ்ச் : முதல்பாதி அசத்தல்.... இரண்டாம்பாதி சறுக்கல்!

ரேட்டிங் : 4.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;