அப்பா - விமர்சனம்

பொழுதுபோக்குவதற்கு அல்ல... பொறுப்பாக இருப்பதற்கே இந்த 'அப்பா'!

விமர்சனம் 1-Jul-2016 10:09 AM IST Top 10 கருத்துக்கள்

Direction : Samuthirakani
Production : Naadodigal Productions
Starring : Samuthirakani, Thambi Ramaiah, Namo Narayana
Music : Ilaiyaraaja
Cinematography : Richard M. Nathan
Editing : A. L. Ramesh

சமுத்திரக்கனி இயக்கி, தயாரித்து, நடித்து வெளிவந்திருக்கும் ‘அப்பா’ எப்படி?

கதைக்களம்

வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்ட நான்கு அப்பாகள்! அவர்கள் எப்படி தங்களது பிள்ளைகளை வளர்க்கிறார்கள் என்பதுதான் ‘அப்பா’வின் ஒரு வரி கதை!

தன் மகனிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை அறிந்து மகனை வளர்க்கும் ஒரு அப்பா சமுத்திரகனி; மாநிலத்திலேயே அதிக மார்க் எடுத்து அமெரிக்காவில் பெரிய டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற கனவுடன் மகனை வளர்க்கும் இன்னொரு அப்பா தம்பி ராமையா; இருக்கிற இடம் தெரியாமல் ஒதுங்கியே வாழவேண்டும் என்ற முறையில் மகனை வளர்க்கும் இன்னொரு அப்பா நமோ நாராயணன்; படிக்க வைப்பது நமது கடமை, படிப்பது பிள்ளைகளின் கடமை என்று மகளை படிக்க வைக்கும் இன்னொரு அப்பா இட்லிக்கடைகாரர் திண்டுக்கல் அலெக்ஸ்; பிள்ளை வளர்ப்பில் இவர்களில் யார் சிறந்த அப்பா? என்பதை சொல்லும் படமே ‘அப்பா’.

படம் பற்றிய அலசல்

குழந்தைகளை தவறாக எண்ணுவதாலும், அவர்கள் மீது தங்களது ஆசைகளை திணிப்பதாலும் ஏற்படும் விளைவுகளை யதார்த்தமான காட்சி அமைப்புகளுடன் படமாக்கியுள்ளார் சமுத்திரகனி! ஆங்கில பள்ளியில்தான் தன் மகன் படிக்க வேண்டும் என்ற முரட்டு கௌரவத்துடன் வீட்டை விட்டு செல்லும் தன் மனைவிக்கு முன், மகனை கின்னஸ் சாதனையாளராக்கி காட்டும் சமுத்திரகனி, அதிக மார்க் எடுக்க வேண்டும் என்று தன் மகனை ஒரு இயந்திரமாக இயங்க செய்யும் தம்பி ராமையாவுக்கு இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி பரிசு, மகனை கவனிக்காமல் விட்டு விட்டு, சமுத்திரகனியால் சாதனை படைக்கும் தன் மகனை கண்டு பெருமைப்படும் நமோ நாராயணன்... இப்படி பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நிறைய படிப்பினை தரும் படமாக அமைந்துள்ளது ‘அப்பா’. கதைப்போக்கில் சில குளறுபடிகள், லாஜிக் மீறல்கள் இருந்தாலும் இந்த சமூகத்திற்கு நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக ‘அப்பா’ அமைந்திருப்பதால் அந்த குறைகளை பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை. சமுத்திரகனியின் உணர்வுபூர்வமான திரைக்கதைக்கு இளையராஜாவின் இசையும், ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவும் கை கொடுத்துள்ளன.

நடிகர்களின் பங்களிப்பு

எந்தவொரு கேரக்டராக இருந்தாலும் அதில் சமுத்திரகனி குறைகூற முடியாத நடிப்பை எப்போதும் வழங்குவார். இதில் பொறுப்புள்ள ஒரு அப்பாவாக வாழ்ந்துள்ளார். தவறான முடிவு எடுக்கும் மனைவியை அனுசரித்து போகும்போதாகட்டும், காணாமல் போன மகனை தேடி அலையும்போதாகட்டும் சமுத்திரக்கனி மனத்தில் அழுத்தம் திருத்தமாக பதிந்து விடுகிறார். சமுத்திரகனியின் மகனாக வரும் ‘காக்கா முட்டை’ புகழ் விக்னேஷ், தம்பி ராமையாவின் மகனாக வரும் ராகவ், நமோ நாராயணின் மகனாக வரும் நாசாத், திண்டுக்கல் அலெக்ஸின் மகளாக வரும் காபிரெல்லா, தந்தையை இழந்த மாணவியாக வரும் யுவஸ்ரீ என படத்தில் நடித்துள்ள அத்தனை குழந்தைகளும் அபாரமான நடிப்பை வழங்கியுள்ளார்கள். இவர்களில் படத்தின் ஆரம்பம் முதல் காமெடியில் கலகலக்க வைத்து இறுதியில் தன் கவிதை தொகுப்பை வெளியிடும் நிகழ்ச்சியில் அனைவரையும் கண் கலங்க வைக்கும் சிறுவன் நாசாத்தை யாரும் மறக்க மாட்டார்கள். எப்போதும் பரபரப்பாக இயங்கும் தம்பி ராமையா சில இடங்களில் ஓவரான நடிப்பை வழங்கி நம்மை கொஞ்சம் சோதிக்கிறார். கெஸ்ட் ரோலில் வரும் சசிகுமார், மற்றும் வேலா ராமமூர்த்தி, விநோதினி, ப்ரீத்தி, திலீபன், ஆதிரா ஆகியோரது பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

பலம்

நல்ல கருத்தை சமூகத்திற்கு முன்வைத்திருக்கும் கதைக்களம்
சமுத்திரகனி உட்பட அனைத்து கலைஞர்களின் சிறந்த பங்களிப்பு

பலவீனம்

திரைக்கதையில் வரும் சில குளறுபடிகள் லாஜிக் மீறல்களையும், சில ஒட்டாத காட்சிகளையும் தவிர்த்துப் பெரிய குறைகள் எதுவும் எதுமில்லை

மொத்தத்தில்...

பிள்ளைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும், பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பள்ளிகளின் செய்லபாடுகளைக் குறித்தும் விளக்கமாக கூறும் இந்த ‘அப்பா’வை அனைவரும் கொண்டாடலாம்!

ஒரு வரி பஞ்ச் : பொழுதுபோக்குவதற்கு அல்ல... பொறுப்பாக இருப்பதற்கே இந்த 'அப்பா'!

(கமர்ஷியலாக இப்படத்தை ரேட்டிங் செய்ய விரும்பாததால் ‘அப்பாவுக்கு‘ ரேட்டிங்கை தவிர்த்துள்ளோம்!)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;