‘தள்ளிப்போகாதே....’ பாடல் படத்தில் இடம்பெறுமா?

சூப்பர்ஹிட்டாகியுள்ள ‘தள்ளிப்போகாதே...’ படத்தின் பாடல் காட்சி இதுவரை படமாக்கப்படாததால், படத்தில் அது இடம்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

செய்திகள் 30-Jun-2016 10:31 AM IST Chandru கருத்துக்கள்

‘சிம்பு படம் என்றாலே குறைந்தது இரண்டு, மூன்று வருடங்களாவது தயாரிப்பில் இருக்குமோ...’ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதுபோல் உள்ளது அவரின் சமீபகால திரைப்படங்கள். வாலு, இது நம்ம ஆளு படங்களைத் தொடர்ந்து கௌதம் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் நீண்டநாட்களாக தயாரிப்பிலிருப்பதே ரசிகர்கள் மத்தியில் இதுபோன்ற சந்தேகங்கள் எழுவதற்குக் காரணம். 2013 அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு, பின்னர் ‘என்னை அறிந்தால்’ படத்திற்காக தற்காலிக இடைவெளிவிட்டு, அதன்பிறகு மீண்டும் படப்பிடிப்பு துவங்கி இப்போதும் தயாரிப்பிலிருக்கிறது ‘அச்சம் என்பது மடமையடா’. ‘சிம்புவுக்காக காத்திருப்பதாக’ தற்போது வெளியாகியிருக்கும் பிரபல தமிழ் வாரஇதழ் ஒன்றில் கௌதம் பேட்டி கொடுத்திருக்கிறார் கௌதம்.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான ‘தள்ளிப்போகாதே....’ பாடலின் சூப்பர்ஹிட் வெற்றி. இப்பாடலுக்கு யு டியூப்பில் இதுவரை 1 கோடியே 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையிடல்கள் கிடைத்துள்ளன. இத்தனை பெரிய வரவேற்புப்பெற்றுள்ள இப்பாடலுக்கான காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லையாம். துருக்கியில் இப்பாடல் பதிவுக்காக மொத்த யூனிட்டும் சென்றிருந்தபோது கடைசி நேரத்தில் சிம்பு வராததால், தெலுங்கு பதிப்பிற்கான காட்சிகளை மட்டும் படமாக்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார் கௌதம். தமிழ் பதிப்பிற்கான ‘தள்ளிப்போகாதே...’ பாடல் காட்சியில் நடிக்க சிம்பு எப்போது வருவார் என காத்திருப்பதாக கௌதம் அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். அதோடு, ஒருவேளை சிம்பு நடிக்க வரவில்லையென்றால் அப்பாடல் படத்தில் இடம்பெறாது எனவும், அதற்காக தான் ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கௌதமின் இந்த பேட்டிக்கு சிம்பு தரப்பு விளக்கங்கள் என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவரின் ஒவ்வொரு படமும் இதுபோல் ‘நீண்டுகொண்டே...’ இருப்பது அவருடைய ரசிகர்களை சோகத்திற்குள் ஆழ்த்தியிருப்பது மட்டும் உண்மை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னை நோக்கி பாயும் தொட்டே ட்ரைலர்


;